எட்டுத் திக்கும் மதயானை – விமர்சனம்

Ettuthikkum Madhayaanai - Gallery_00011 தமிழ்நாட்டில் சில வருடங்களுக்கு முன் நடந்த ஆள் மாறாட்டத்தால் நடந்த ஒரு சப் – இன்ஸ்பெக்டர் கொலையை மையமாக வைத்து கற்பனை கலந்து இந்தக் கதையைக் கொடுத்திருக்கிறார் இயக்குனர் கே.எஸ்.தங்கசாமி. அந்தக் கொலைதான் கதையின் மையம் என்று கதை நகர்ந்து கொண்டிருக்க, எதிர்பாராத திருப்பமாக அதின் பின்னணியில் ஒரு மாணவனின் கொலையும், அவனின் காதலும் இடம் பெற காதல், அரசியல், பாசம் கலந்த ஆக்ஷன் படமாக இந்தப் படம் அமைந்துவிடுகிறது. திருநெல்வேலிக்கு சப்-இன்ஸ்பெக்டராக மாற்றலாகி வருகிறார் பானுசந்தர். இவருடைய மகன் சத்யா படித்து முடித்துவிட்டு வேலையில்லாமல் சுற்றிக் கொண்டிருக்கிறார். நேர்மையான சப்-இன்ஸ்பெக்டரான பானுசந்தரை யாரோ  கொலை செய்து விடுகின்றனர். அப்பாவின் இறந்ததால் மகன் சத்யாவிற்கு போலீஸ் வேலை கிடைக்கிறது. அப்பா பார்த்த காவல் நிலையத்திலேயே போலீஸ் பயிற்சி முடிந்து சப்-இன்ஸ்பெக்டராக வேலைக்குச் செல்கிறார். அப்பாவைக் கொலை செய்தவர்களைத் தேடிக் கண்டு பிடிக்க முயற்சி செய்கிறார். அதில் அவர் வெற்றி பெற்றாரா இல்லையா என்பதுதான் படத்தின் மீதிக் கதை. இயக்குனர் யோசித்த கதைக்கும், திரைக்கதைக்கும் படத்தின் முதன்மை கதாபாத்திரமாக இருக்கும் நாயகன் சத்யா தான் படத்தையே தாங்கிப் பிடிக்க வேண்டும். ஆனால், அவரோ நடிப்பு என்றால் எத்தனை கிலோ என்ற ரீதியில் நடித்திருக்கிறார். ஒரு காட்சியிலாவது காட்சியின் தன்மையையும், கதாபாத்திரத்தையும் உணர்ந்து நடிப்பார் என்று எதிர்பார்த்தால் எங்குமே அப்படிப்பட்ட நடிப்பை அவரிடம் காண முடியவில்லை. அப்பாவை நான்தான் தெரியாமல் கொலை செய்துவிட்டேன் என தங்கசாமி சொல்லும் போது கூட எந்த அதிர்ச்சியும் இல்லாமல் உட்கார்ந்திருக்கிறார். படத்தின் நாயகியான ஸ்ரீமுகி சமீபத்திய அறிமுகங்களில் அழகான, திறமையான அறிமுகம். உள்ளூர் தொலைக்காட்சி வர்ணனையாளராக அந்தக் கதாபாத்திரத்தில் பொருத்தமாக நடித்திருக்கிறார். படத்தின் இயக்குனராக கே.எஸ்.தங்கசாமி தம்பி மீது அதிக பாசம் வைத்திருக்கும் அண்ணனாகவும்,  ‘இன்ஸ்பெக்டராக நடித்துள்ள  அசத்தப் போவது யாரு’ ராஜ்குமார்  ஆகிய இருவரும்தான் படத்தைத் தாங்கிப் பிடித்திருக்கிறார்கள். மதம் கொண்ட யானையாக ஆவேசப்பட வேண்டிய நாயகன் கோயில் யானை போல சும்மாவே இருப்பதுதான் படத்தில் குறிப்பிட வேண்டிய ஒரே குறை.  

Read Previous

இன்றைய ரிலீஸ் – 4 படங்கள்

Read Next

மணல் நகரம் – விமர்சனம்

Most Popular