மணல் நகரம் – விமர்சனம்

Manal Nagaram Review நம் ஊரில் நம்மைச் சுற்றி இருப்பவர்களுக்கு நடக்கும் பிரச்சனைகளைப் பற்றிய படங்களையே பார்த்துப் பழகிப் போன நமக்கு, துபாயில் பிழைப்புக்காகச் சென்றுள்ளவர்கள் படும் கஷ்டங்களை ஒரு திரைப்படமாகப் பார்ப்பது புதிய அனுபவமாக இருக்கிறது. பிரஜன், கௌதம் கிருஷ்ணா இருவரும் நண்பர்கள். துபாயில் வேலை பார்க்கும் பிரஜன் நண்பன் கௌதம் கிருஷ்ணாவிற்கும் துபாயிலேயே வேலை வாங்கிக் கொடுக்கிறார். இஞ்சினியரிங் முடித்துள்ள கௌதமிற்கு பணக்காரப் பெண்ணான வருணா ஷெட்டியின் உதவியால் நல்ல வேலை கிடைக்கிறது. பிரஜன், தேஜஸ்வினி இருவரும் காதலர்கள். தேஜஸ்வினி குடும்ப சூழ்நிலை காரணமாக இந்தியாவிலிருந்து துபாய்க்கு வேலைக்குச் சென்றவர். தேஜஸ்வினி வேலை பார்க்கும் ரெஸ்டாரென்ட்டின் ஓனர் தேஜஸ்வினியிம் தவறாக நடக்க முயற்சித்ததால் அவரை மாடியிலிருந்து தள்ளி கொலை செய்து விடுகிறார் கௌதம் கிருஷ்ணா. எதிர்பாராமல் நடந்த இந்தக் கொலையால் கௌதம், தேஜஸ்வினி இருவரும் கைதாகிறார்கள். நண்பர்களிடன் உதவியுடன் நண்பனையும், காதலியையும் மீட்கப் போராடுகிறார் பிரஜன். அதில் அவர் வெற்றி பெற்றாரா இல்லையா என்பதுதான் மீதிக் கதை. குடும்ப சூழ்நிலை காரணமாக பிறந்த நாட்டை விட்டு விட்டு, வெளிநாட்டிற்கு வேலைக்குச் செல்பவர்கள் படும் துயரங்களை மிகவும் யதார்த்தமாகக் காட்டியிருக்கிறார் இயக்குனர் ‘ஒருதலை ராகம்’ சங்கர். துபாயை நேரில் பார்ப்பது போன்றே படம் நகர்கிறது. பிரஜன், கௌதம் கிருஷ்ணா, பிரஜனின் ரூம் நண்பர்களாக நடித்திருக்கும் ஜேய்ஸ், ராம்கி, அருணாச்சலம்  ஆகியோர் ஜாதி, மதம் பார்க்காமல் நண்பர்களாக இருக்கிறார்கள். வெளிநாடுகளில் வேலை பார்ப்பவர்கள் மதம் கடந்து நண்பர்களாக இருப்பார்கள் என்பது பிரஜனின் மன்சூர் கதாபாத்திரம் மூலமும், கௌதம் கிருஷ்ணாவின் ஆனந்த் கதாபாத்திரம் மூலமும், ஜேய்ஸ்-ன் ஜேம்ஸ் கதாபாத்திரம் மூலமும் உணர்த்தியிருக்கிறார் இயக்குனர். அனைவருமே படத்தில் அவரவர் கதாபாத்திரங்களாகவே தெரிகிறார்கள் என்பது கூடுதல் சிறப்பு. ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுக்காமல் மற்றவர்களின் அக்கறையில் பங்கெடுத்துக் கொள்வது நட்புக்கு இலக்கணம். பிரஜனின் ஜோடியாக நடித்திருக்கும் தேஜஸ்வினியும், ஆனந்தின் ஜோடியாக நடித்திருக்கும் வருணாவிற்கும் இது முதல் படம் என்று சொன்னால் நம்பவே முடியாது. இருவரும் அழகாக இருக்கிறார்கள், நடிக்கவும் செய்கிறார்கள். ‘ஒரு தலை ராகம்’ சங்கர், வில்லனாக நடித்திருக்கும் வீகே இருவருக்கும் கொஞ்சமான காட்சிகள்தான் என்றாலும் அழுத்தமாக இடம் பிடிக்கிறார்கள். ஸ்ரீதரின் ஒளிப்பதிவு துபாயின் அழகை கண்களை அகலத் திறந்து பார்க்க வைக்கிறது. கிளைமாக்சில் வழக்கம் போல சினிமாத்தனமாக இல்லாமல் யதார்த்தமாக படத்தை முடித்திருப்பதும் அருமை. ‘மணல் நகரம்’ என படத்தின் தலைப்பு மட்டும் சாதாரணமாகத் தெரிந்தாலும் படம் சிறப்பாக இருக்கிறது. வழக்கமான படங்களுக்கு மத்தியில் மன நிறைவான ஒரு படம்.

Read Previous

எட்டுத் திக்கும் மதயானை – விமர்சனம்

Read Next

வஜ்ரம் – விமர்சனம்

Most Popular