தரணி – விமர்சனம்

dharani review திரைப்படம் என்பது நிஜ வாழ்க்கையின் கற்பனை கலந்த பிரதிபலிப்பு என்பார்கள். ஆனால், இன்று வரும் பெரும்பாலான படங்ள் கமர்ஷியல் சினிமாவாகத்தான் இருக்கின்றன. ஒரு சில படங்கள்தான் நம் வாழ்க்கையைப் பிரதிபலிக்கும் படமாக அமைகின்றன. இந்த தரணியை ஆள வேண்டும் என்றுதான் ஒவ்வொருவரும் நினைக்கிறார்கள். ஆனால், நாம் நினைக்கும் ஒவ்வொன்றும் நடந்து விடுகிறதா என்ன…? எதிர்பாராமல் என்னென்னவோ நடக்கிறது. அதுதான் விதியின் விளையாட்டு. இந்த ‘தரணி’யில் இந்த விதியின் விளையாட்டை தடம் பதிக்கும் அளவிற்குக் கொடுத்திருக்கிறார் அறிமுக இயக்குனர் குகன் சம்பந்தம். ஆரி, குமரவேல், கர்ணா மூவரும் நண்பர்கள். ஆரி, அப்பா நடத்தும் ஹோட்டலை அவருடன் சேர்ந்து கவனித்துக் கொள்கிறார். குமரவேல், சினிமாவில் ஜுனியர் ஆர்ட்டிஸ்ட்டாக இருக்கிறார், அவருக்கு நடிகராக ஜெயிக்க வேண்டும் என்பது லட்சியம். கர்ணா, வேலையில்லாமல் கஷ்டப்பட்டு, பின்னர் மல்டி லெவல் மார்க்கெட்டிங் கம்பெனி ஒன்றில் விற்பனைப் பிரதிநிதியாகச் சேர்கிறார். குமரவேலுக்கு, நடிக்க வாய்ப்புகள் அதிகம் கிடைக்காத சூழ்நிலையில் சென்னையை விட்டு சொந்த ஊருக்கே திரும்பி விடுகிறார். மகாநதி சங்கரிடம், அப்பா வாங்கிய கடனைத் திருப்பிக் கொடுக்க முடியாத சூழ்நிலையில், ஆரி, ஒரு சந்தர்ப்பத்தில் அப்பாவைக் கடத்தி வைத்து விட்டார் என்பதற்காக சங்கரையே அடித்துத் துவைத்து விடுகிறார். கர்ணா, வேலையில் சாதிக்க முடியாத விரக்தியில் குடி போதையில் சிக்கித் தவிக்க, நண்பன் ஒருவர் அவருக்கு ரியல் எஸ்டேட் பிசினசில் இறக்கி விடுகிறார். இதன் பின் இவர்கள் மூவருடைய வாழ்க்கையும் எப்படி தடம் மாறுகின்றன என்பதுதான் படத்தின் கதை. அப்பாவித் தனமான தோற்றத்தில் இருக்கும் ஆரி, ஆச்சரியப்பட வைத்தாலும், அடுத்து ரவுடியான பின்னும் அமர்க்களப்படுத்துகிறார். குடும்பத் தொழிலான கூத்து கட்டுலை  விட்டு சினிமாவிற்கு நடிக்கப் போய் திரும்பி வந்த குமரவேலுவை, அவருடைய தாய் மாமன் உனக்கு கூத்தைப் பற்றி என்ன தெரியும் என்ற விதத்தில் கேட்க, வெகுண்டெழுந்து ஒரு ‘கட்டை’ கட்டாமலே ஒரு அவதாரத்தைக் காட்டும் குமரவேல் புல்லரிக்க வைத்து விடுகிறார். ரியல் எஸ்டேட் பிசினஸில் வெள்ளையும், சள்ளையுமாக தோற்றமளித்தாலும் ‘ஃபிராட்’ செய்வதில் மொத்த உருவமாக மாறிவிடுகிறார் கர்ணா. படத்தில் நாயகியாக சான்ட்ரா. முறைமாமன் குமரவேல் மீது ஆசைப்பட்டாலும் அதை வெளிக்காட்டிக் கொள்ளாத கிராமத்துப் பெண். கிராமங்களில் நமக்கே ஆச்சரியமாக இருப்பார்கள் இப்படி செக்கச் செவந்த சில பெண்கள். நைஸ் வில்லேஜ் கேர்ள்…. புரிசை கண்ணப்ப சம்பந்தம் நாயகி சான்ட்ராவின் அப்பாவாக நடித்திருக்கிறார்,  யதார்த்த நடிப்பு. படத்தை சினிமாத்தனமில்லாத விதத்தில் எடுத்திருக்கிறார்கள், அதுதான் படத்திற்கு பலம், பலவீனமும் அதுவே.  

Read Previous

‘என்னை அறிந்தால்’ – அமெரிக்காவில் 95 திரையரங்குகளில் ரிலீஸ்…

Read Next

அஜித் ரசிகர்கள் பாசக்காரப் பசங்க… – விவேக்

Most Popular