‘என்னை அறிந்தால்’ படத்தில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு அஜித் நண்பனாக விவேக் நடித்துள்ளார். படத்தைப் பற்றிய அனுபவங்களை நம்மிடம் அவர் பகிர்ந்து கொண்டார்…
“என்னை அறிந்தால்’ படத்தில் நடிக்க ஆரம்பித்ததில் இருந்தே, டிவிட்டர், ஃபேஸ் புக் ஆகியவற்றில் அஜித் மீது வெறி பிடித்துள்ள ரசிகர்கள் ‘என்ன கதை, தல எப்படி இருக்கார்னு கேட்டே கொன்னுப்புட்டாங்க, பாசக்காரப் பசங்க…
இந்தப் படத்தில் எனக்கு சீரியசான, ஒரு குசும்புமிக்க கதாபாத்திரம். சிரிக்கவும் வைக்கும், சிந்திக்கவும் வைக்கும். எடுத்த காமெடி காட்சிகளில், எத்தனை எடிட்டர் ஆன்டனியின் கத்திரிக்குத் தப்பியிருக்கிறதோ, ஆண்டவனுக்குத்தான் வெளிச்சம்.
ஷுட்டிங்கில் எடுத்ததையெல்லாம், படத்தில் இருந்து எடுத்துவிடாமல் வைத்தால், எனது திரையுலக வாழ்க்கையில் இப்படம் ஒரு முக்கியமான படமாக இருக்கும். அஜித்தின் அன்புக்கு நன்றி,” என்கிறார் விவேக்.
இரண்டு நாயகிகள் இருக்கிறார்களே, அவர்களைப் பற்றி இரண்டே வார்த்தைகளில் சொல்லுங்கள் என்றால்,
“த்ரிஷா என்றால் இனிமை, பெண்மை, அனுஷ்கா என்றால் அழகு, அறிவு,” என இரண்டே வார்த்தைகளில் சுருக்கமாகச் சொல்லி விட்டார்.
‘மின்னலே’ படத்திற்குப் பிறகு மீண்டும் கௌதமுன் இணைந்து பணியாற்றுகிறேன். கௌதம் 13 வருடங்கள் கடந்து வந்திருக்கிறார். இன்னும் அதே அன்பு, ஆனால் ‘ஆடி’ காரில் வருகிறார்,” என நகைச்சுவையுடன் குறிப்பிடுகிறார்.
‘என்னை அறிந்தால்’ படம் விவேக் குறிப்பிடுவதைப் போல முக்கியமான படமாக அமையட்டும்.