தமிழ்த் திரையுலகில் கமர்ஷியல் படங்களும், நகைச்சுவை என்ற பெயரில் சில சுவாரசியமற்ற படங்களுமே அதிகமாக ஆக்கிரமித்துக் கொண்டிருக்கின்றன. யதார்த்தத்தை விட்டு மிகவும் விலகி வித்தியாசம் என்ற பெயரில் வசூலை மட்டுமே கவனத்தில் கொண்டும் சில படங்கள் வந்து கொண்டிருக்கின்றன.
ஆனால், நமது வாழ்வியலை சொல்லும் படங்களோ, நமக்கும் அறிமுகம் வாய்ந்த கதைக் களங்களையோ மையமாக வைத்து யதார்த்தமான படங்களைக் கொடுக்கும் படைப்பாளிகளையும், தயாரிப்பாளர்களையும் பார்ப்பது மிகவும் அரிதாகிவிட்ட இந்தக் காலத்தில் எந்த சமரசத்திற்கும் இடம் கொடுக்காமல் தானே தயாரித்து, இயக்கி இப்படிப்பட்ட ஒரு படைப்பைக் கொடுத்திருக்கிறார் இயக்குனர் மருதுபாண்டியன்.
எந்த முன்னணி நட்சத்திரங்களின் பின்னாலும் போகாமல், தன் கதை மீதும், தன் படைப்பின் மீதும் மிகுந்த நம்பிக்கை வைத்துள்ள அவரை இந்த கோடம்பாக்கம் அன்புடன் வரவேற்க வேண்டும்.
பாபி சிம்ஹா, பிரபஞ்செயன், லிங்கா மூவரும் திருமணமாகாத இளைஞர்கள். சென்னையில் ஒரே அறையில் தங்கியிருக்கிறார்கள். இதில் பாபி சிம்ஹா, திரைப்படத்தை இயக்க வேண்டும் என்பதற்காக கதை எழுத ஆரம்பித்துள்ளார். பிரபஞ்செயன் ஒரு தனியார் அலுவலகத்தில் வேலை பார்க்கிறார். பெண்களை தன் வலைக்குள் விழ வைத்து அவர்களுடன் படுக்கையைப் பகிர்ந்து கொள்வதில் இவர் சாமர்த்தியசாலி. லிங்கா, உதவி இயக்குனராக வேலை பார்ப்பவர். பிரபஞ்செயனின் பெண் பித்தன் குணத்தால் இவர்கள் இருக்கும் அறையை காலி செய்ய வேண்டி வருகிறது.
அடுத்து ஒரு அறையைப் பார்த்து அங்கு தங்க ஆரம்பிக்கிறார்கள். அப்போது பிரபஞ்செயன், ஊருக்குச் சென்றிருந்த போது அங்கு பார்த்துப் பழகிய சரண்யாவைக் காதலிப்பதாகப் பொய் சொல்லி, படுக்கையைப் பகிர்ந்து கொண்டு ஏமாற்றி விடுகிறார். கர்ப்பமடையும் சரண்யா, அவர்களின் அறைக்கு வந்து சண்டை போடுகிறார். அப்போது நடக்கும் பிரச்சனையில் பிரபஞ்செயன் நண்பர்களையும் விட்டுப் பிரிகிறார். சரண்யா, பிரபஞ்செயனைக் கண்டு பிடித்து அவருடன் வாழ நினைக்கிறார். அடிக்கடி அறை மாற்றுவதால் கதை எழுத முடியாமல் தவிக்கிறார் பாபி சிம்ஹா. இவருடைய அறை பிரச்சனை முடிவுக்கு வந்து கதையை எழுதி முடித்தாரா ? சரண்யா, தன்னை ஏமாற்றிய காதலை கண்டு பிடித்தாரா என்பதுதான் படத்தின் மீதிக் கதை.
‘ஜிகர்தண்டா’ படத்தில் கூட பாபி சிம்ஹா முற்றிலும் சினிமாத்தனமான ஒரு வில்லன் கதாபாத்திரத்தில்தான் நடித்திருந்தார். ஆனால், இந்தப் படத்தில்தான் அவருடைய நடிப்பு பல விருதுகளை வாங்கும் அளவிற்கு அமைந்திருக்கிறது. இந்தப் படத்திற்காக அவரே முன் வந்து சொந்தக் குரலில் பேசியிருந்தால் கூட இப்படிப் பேசியிருக்க மாட்டார். சிம்ஹாவுக்குக் குரல் கொடுத்த கலைஞர் அவ்வளவு பொருத்தமாக பின்னணிக் குரல் கொடுத்திருக்கிறார். நல்ல படைப்புகளையும், படைப்பாளிகளையும் பாபி சிம்ஹா போன்றவர்கள் மதிக்கக் கற்றுக் கொள்வது நல்லது. பாபி சிம்ஹாவின் திரையுலக வாழ்க்கையில் இந்தப் படம் குறிப்பிடத்தக்க ஒரு படமாக கண்டிப்பாக அமையும்.
பாபி சிம்ஹாவை விட, பெண் சபலம் கொண்ட கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் பிரபஞ்செயன் அவ்வளவு யதார்த்தமாக நடித்திருக்கிறார். பெண்களிடம் வழிந்து பேசுவதிலும், அவர்களை எப்படியாவது ‘கரெக்ட்’ செய்து தன்னுடைய அறைக்கு அழைத்து வருவதிலும் தேர்ந்தவர் போல உள்ளது அவரது தேர்ச்சியான நடிப்பு. சரண்யாவை ஏமாற்றிய பின், அவரிடம் மாட்டிக் கொள்ளாமல் தப்பிப்பதற்காக அவர் சமாளிக்கும் ஒவ்வொரு காட்சிகளும் ‘அடப்பாவி’ என்று சொல்ல வைக்கிறது. தமிழ் சினிமாவில் நடிக்கத் தெரிந்த ஒரு இளம் வில்லன் தயார்.
அடுத்தவர்களை வம்பிழுப்பதிலும், நண்பர்களையே மாட்டி விடுவதிலும், தன்னை நல்லவனாகக் காட்டிக் கொண்டு நடிப்பதிலும் லிங்காவின் நடிப்பு அருமை. நகைச்சுவைக் கதாபாத்திரங்களில் தொடர்ந்து நடித்தால் யார் எதிர்த்தாலும் இந்த ‘லிங்கா’ திரையுலகில் ஒரு இடத்தைப் பிடிக்கலாம்.
தமிழ்த் திரைப்படங்களில் பாலசந்தர், ருத்ரையா, பாலுமகேந்திரா போன்றவர்கள் காட்டிய கதாநாயகியைப் போன்று இந்தப் படத்திலும் தன் கதாநாயகியின் கதாபாத்திரத்தையும், தோற்றத்தையும் வழங்கியிருக்கிறார் இயக்குனர். திருமணமாகி விவாகரத்தான இளம் பெண்ணாக சரண்யா. தமிழ் சினிமாவில் நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரு யதார்த்தமான நாயகியைப் பார்த்த உணர்வு. மிகவும் ‘செட்டில்டு’ ஆக நடித்திருக்கிறார்.
பாபி சிம்ஹா கடைசியாக வந்து தங்கும் அறையின் வீட்டுக்குச் சொந்தக்காரப் பெண்ணாக பனிமலர். ஒப்பனையிருந்தாலும் ஒப்பனையில்லாத பக்கத்து வீட்டுப் பெண்ணைப் பார்ப்பது போன்றதொரு முகம். பேச்சுலர் ஆக ரூம் எடுத்து தங்கியிருப்பவர்களுக்கு இப்படிப்பட்ட பெண்களின் நட்பைக் கண்டிப்பாக உணர்ந்திருப்பார்கள்.
சின்னச் சின்னக் கதாபாத்திரங்களில் நடித்திருப்பவர்களைக் கூட பொருத்தமாகத் தேர்வு செய்து அவர்களை சினிமாத்தனமில்லாமல் நடிக்க வைத்திருக்கிறார் இயக்குனர்.
சில காட்சிகள் திரும்பத் திரும்ப வருவதைக் குறைத்திருக்கலாம். குறிப்பாக பாபி சிம்ஹா இரவு தூங்குவதற்கு அறை தேடி நண்பர்கள் பலரிடம் தொலைபேசியில் பேசுவதையும், அறைக்கு இரவு நேரங்களில் திருட்டுத் தனமாக நுழையும் காட்சியின் நீளத்தையும் குறைத்திருக்கலாம்.
‘சென்னை உங்களை அன்புடன் வரவேற்கிது’ – இப்படிப்பட்ட படங்களை தமிழ் ரசிகர்கள் அன்புடன் வரவேற்றால்தான் தமிழ் சினிமாவும் தலை நிமிர்ந்து நிற்கும்.