இந்தியத் திரையுலகத்தில் சமீபத்திய ஒரு வருடங்களில் ஒரு படத்திற்கு, அதிலும் இரண்டாம் பாகம் படத்திற்கு இப்படி ஒரு எதிர்பார்ப்பு வந்ததில்லை.
‘கட்டப்பா ஏன் பாகுபலியைக் கொன்றார்’ என்ற காரணத்தைத் தெரிந்து கொள்ள சினிமா ரசிகர்கள் அனைவருக்கு அவ்வளவு ஆர்வம்.
இந்தியத் திரையுலகம் இதுவரை கண்டிராத ஒரு பிரம்மாண்டம், விஎப்எக்ஸ், கிராஃபிக்ஸ் காட்சிகள் என படம் ஆரம்பித்தது முதல் கடைசி வரை கண்களை திரையை விட்டு வேறு எங்கும் நகர்த்த முடியாதபடி ஒரு படத்தைக் கொடுத்திருக்கிறார்கள் எஸ்.எஸ்.ராஜமௌலி மற்றும் குழுவினர்.
முதல் பாகத்தில் பிரபாஸ் மகிழ்மதி அரச குலத்தின் வாரிசு என்று சத்யராஜ் சொல்ல ஆரம்பித்ததிலிருந்து இரண்டாம் பாகம் தொடர்கிறது. பிரபாஸை மன்னாக முடி சூட்டிக் கொள்வதற்கு முன்பு திக் விஜயம் செல்லச் சொல்கிறார் ராஜமாதாவான ரம்யா கிருஷ்ணன்.
அப்படி அவர்கள் செல்லும் போது குந்தள தேசத்திற்கும் செல்கிறார்கள். சிற்றரசான அந்த தேசத்தின் இளவரசி அனுஷ்காவைப் பார்த்ததும் காதல் கொள்கிறார் பிரபாஸ். ஆனால், பிரபாஸ் மன்னாக முடி சூடிக் கொள்ளக் கூடாது என்பதற்காக அவருடைய அண்ணன் ராணா டகுபட்டியும், பெரியப்பா நாசரும் சூழ்ச்சி செய்கிறார்கள்.
பிரபாஸ், அனுஷ்கா காதலைப் பற்றிக் கேள்விப்படும் ராணா, அனுஷ்காவை மணமுடிக்க ஆசைப்படுகிறார். மன்னன் ஆகவில்லை என்றாலும் பரவாயில்லை, தான் விரும்பும் பெண்ணை மணமுடித்து வைக்க வேண்டும் என்று அம்மா ரம்யா கிருஷ்ணனிடம் சத்தியம் வாங்குகிறார்.
பிரபாஸ், அனுஷ்கா காதல் பற்றி எதுவும் தெரியாத ரம்யா, தன் மகன் ராணாவிற்கு அனுஷ்காவை மணமுடித்து வைக்க தூது அனுப்புகிறார். ஆனால், அனுஷ்கா ரம்யாவின் தூதை நிராகரித்து, ரம்யாவை அவமானப்படுத்தும் விதத்தில் பதில் அனுப்புகிறார். இதனால் கோபமடையும் ரம்யா, அனுஷ்காவைக் கைது செய்து அழைத்து வர பிரபாஸுக்கு ஓலை அனுப்புகிறார்.
தனக்காகத்தான் அம்மா அனுஷ்காவைப் பெண் கேட்டிருப்பார்கள் என நினைக்கும் பிரபாஸ், அனுஷ்காவிற்கு எந்த ஆபத்தையும் வர விடமாட்டேன் என சத்தியம் செய்து அவரை அழைத்துக் கொண்டு மகிழ்மதி செல்கிறார்.
அங்கு அனைத்து உண்மைகளும் தெரிய வருகிறது. அனுஷ்கா, ரம்யாவை எதிர்த்து கேள்வி கேட்க, பிரபாஸ், அனுஷ்காவிற்கு ஆதரவாகப் பேச, அந்த கோபத்தில் ராணாவுக்கு மன்னாக முடி சூட்டுகிறார் ரம்யா. பிரபாஸை, படைத் தளபதி ஆக்குகிறார். இருந்தாலும், பிரபாஸையும், அனுஷ்காவையும் பழி வாங்கத் துடிக்கிறார் மன்னன் ஆன ராணா. அதன் பின் என்ன நடக்கிறது என்பதுதான் ‘கட்டப்பா ஏன் பாகுபலியைக் கொன்றார்’ என்பதற்கான மீதிக் கதை.
சரித்திரக் கதைகளுக்கே உரிய அழகு, பிரம்மாண்டம், போர்க்களம், சூழ்ச்சி, பாசம், என அனைத்தும் படத்தில் கொட்டிக் கிடக்கின்றன.
ஆறடி உயர பிரபாஸ் யானையை நிறுத்துவதும், தேரை தூக்கி அடிப்பதும், போர்க்களத்தில் அம்பை எய்யும் லாவகமும், உடல்வழி சண்டையிலும் செய்யும் ஒவ்வொரு விஷயங்களும் ‘பாகுபலி’ என்ற பெயருக்கேற்ப பலமாக இருக்கின்றன. ‘பாகுபலி’ கதாபாத்திரத்திற்கு தன்னுடைய முழு ஈடுபாட்டையும் இத்தனை வருடங்களாகக் கொடுத்திருப்பதன் காரணம் படம் பார்க்கும் போது புரிந்துவிடும்.
முதல் பாகத்தில் அனுஷ்காவா அது என வயதான தோற்றத்தில் சில காட்சிகளில் மட்டுமே வந்த அனுஷ்கா, இந்த இரண்டாம் பாகத்தில்ப அனுஷ்காவாவாவாவா…என ஆச்சரியப்பட வைக்கிறார். அவரின் அறிமுகக் காட்சியே அசத்தல். அந்த இரண்டு கண்களைப் பார்த்ததும் சாதாரண மனிதனே விழுந்துவிடுவான், அப்படியிருக்க மன்னன் ஆக முடிசூடிக் கொள்பவன் விழாமலா இருப்பான். அழகிலும், வீரத்திலும் ஒரு இளவரசி இப்படித்தான் இருந்திருப்பாரோ என நம்மை சரித்திர காலத்திற்கே அழைத்துச் சென்று விடுகிறார்.
படத்தின் இரண்டாவது நாயகன் என சத்யராஜை தாராளமாகச் சொல்லலாம். இந்த இரண்டாம் பாகத்தில் படம் முழுவதுமே சத்யராஜ் வருகிறார். தன்னை அடிமை என்று சொல்லிக் கொண்டு, நாய் என மற்றவர்கள் திட்டினாலும் ராஜ வம்சத்துக்கு இப்படி ஒரு விசுவாசி இருக்கமாட்டான் என வியக்க வைக்கிறார். சத்யராஜ், பிரபாஸ் இடையிலான மாமா பந்தமும், சத்யரஜை தன்னுடைய அப்பா என அனுஷ்கா அழைப்பதும் கண்களில் கண்ணீரை வரவைக்கும் காட்சிகள். நக்கல், சென்டிமென்ட், வீரம் என அனைத்திலும் சத்யராஜின் ‘கட்டப்பா’ நடிப்பு படத்திற்கு நல்ல கனத்தைச் சேர்த்திருக்கிறது.
ராஜமாதா சிவகாமியாக ரம்யா கிருஷ்ணன். மீண்டும் ஒரு ‘படையப்பா’ நீலாம்பரியின் மிடுக்கைக் காட்டியிருக்கிறார். ‘மகேந்திர பாகுபலி’ என கைக்குழந்தையை தூக்கி அவர் குரலெழுப்பும் போது நமக்கும் புல்லரிக்கிறது.
அரசியலில் சாணக்கியத்தனம் பற்றித்தான் பேசுவார்கள். அந்த சாணக்யனை யாரும் பார்த்திருக்க மாட்டார்கள். ஆனால், நாசர் வடிவில் அந்த சாணக்யனை இந்தப் படத்தில் பார்க்கலாம்.
பிரபாஸ் போன்ற ஒரு நாயகனுக்குச் சமமான எதிர்நாயகன் கதாபாத்திரம் எவ்வளவு வலிமையாக இருக்க வேண்டும். ஒரு வீரனின் பெருமையப் பேச அவனுக்குச் சமமான எதிரியும் இருக்க வேண்டும். அப்படி ஒரு வலிமையான எதிரியாக ராணா டகுபட்டி தன்னுடைய வல்லமையைக் காட்டியிருக்கிறார்.
அனுஷ்காவின் முறைமாமனாக சுப்புராஜ் கொஞ்சம் காமெடியனாக வந்து, வீரனாக மாறி, தியாகியாகி மறைகிறார். முதல் பாகத்தில் நாயகியாக வந்த தமன்னா இந்தப் படத்தில் கடைசியில் மட்டுமே வந்து போகிறார். இவருக்காக கொஞ்சமாவது காட்சிகளை வைத்திருக்கலாம்.
செந்தில்குமாரின் ஒளிப்பதிவு, சாபுசிரிலின் அரங்க அமைப்பு, ஆர்.சி. கமலக்கண்ணனின் விஎப்எக்ஸ் இந்தப் படத்தை இந்திய அளவில் மிகச் சிறந்த தொழில்நுட்பக் கலைஞர்களாக காட்டியிருக்கிறது. ஹாலிவுட்டுக்கு சவால் விடும் கலைஞர்கள் இங்கம் இருக்கிறார்கள் என நாம் நெஞ்சை நிமிர்த்திக் கொள்ளலாம்.
மரகதமணியின் பின்னணி இசை வேறு ஒரு தளத்தில், சர்வதேச தரத்தில் இருக்கிறது. பாடல்களில் மட்டும் தெலுங்குப் பாடல்களைக் கேட்பது போன்றே உள்ளது. ‘ஒரு ஊரில் ஒரு ராஜா’ என்பது கூட தெலுங்கு போலவே கேட்கிறது.
இவ்வளவு சிறப்பான படத்தில் குறைகளே இல்லையா எனச் சிலர் கேட்கலாம். தமிழ் சினிமாவிலும், தெலுங்கு சினிமாவிலும் 50 வருடங்களுக்கு முன்பே வந்த மன்னர் காலத்து கதைதான் இந்த ‘பாகுபலி’யும். அதே பதவிச் சண்டை, சூழ்ச்சி, காதல் என பழைய விஷயங்கள்தான். ஆனால், அதைக் காட்டியிருக்கும் விதமும், அதற்காக அனைத்துக் கலைஞர்களும் கொடுத்திருக்கும் உழைப்பும், அந்தக் குறைகளைப் பற்றி அதிகம் பேச வைக்கவில்லை.
பிரபாஸ், அனுஷ்காவின் காதல்..நீ…ண்டு கொண்ட போவதை கொஞ்சம் குறைத்திருக்கலாம். அவர்களிருவரும் மகிழ்மதி வந்ததும், காட்சிக்குக் காட்சி திருப்பம் வந்து கொண்டேயிருப்பது படத்தை நாம் தொடர்வதற்குக் கொஞ்சம் தடையாக இருக்கலாம். கிளைமாக்ஸ் சண்டையும் கொஞ்சம் நீளம்தான்.
பல காட்சிகளில் முதல் பாகத்தைப் போலவே உதட்டசைவுகள் தெலுங்குக்கேற்பவே அமைந்துள்ளன. அந்தக் காட்சிகளை தமிழில் எடுக்கவில்லை போலிருக்கிறது. 100 சதவீத தமிழ்ப் படம் என சொல்ல முடியாது.
‘பாகுபலி 2’ இந்தியத் திரையுலகத்தின் பெருமையை உலகத்திற்கே காட்டிய ஒரு படமாக இருக்கும்.