எவோக் தயாரிப்பில் தனா இயக்கத்தில், கார்த்திக் ராஜா இசையமைப்பில் விஜய் யேசுதாஸ், அமிர்தா, பாரதிராஜா மற்றும் பலர் நடித்துள்ள ‘படை வீரன்’ படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.
இயக்குனர் மணிரத்னம் வெளியிட இயக்குனர் மிஷ்கின் இசைத் தட்டைப் பெற்றுக் கொண்டார்.
நிகழ்ச்சியில் இயக்குனர் மணிரத்னம் பேசும் போது,
‘படை வீரன்’ படத்தோட இயக்குனர் தனா முதல்ல எழுத்து, பிறகு நாடகம், நடிப்பு, இப்ப சினிமா. இலக்கியத்துலயும், ஆர்வத்தைத் தாண்டி அவருக்குள்ள ஒரு வெறி இருக்கும். படத்தோட டிரைலர்ல பார்த்தால் டான்ஸ் ஆடிக்கிட்டிருக்காரு. எதையும் விடறதா இல்லை போல இருக்கு.
என் கூட அஞ்சாறு வருஷம் இருந்தாலும், இயக்குனர், உதவி இயக்குனருங்கறத தாண்டி நிறைய நேரம் செலவழிச்சிருக்கேன். ஒரு நாள் ஒரு கதை சொன்னாரு என்கிட்ட. அவங்க ஊர்ல நடக்கிற சில விஷயத்தைப் பத்தி. ஆனால், எனக்கு சரியா பிடி கொடுக்கலை. ஒரு மூணு மாசம் கழிச்சி, ஜெயமோகனோட வெப்சைட்டுல, புதிய எழுத்தாளர்கள்னு அறிமுகப்படுத்தியிருந்தாரு. அதுல முதல் கதை தனாவோட கதை. அதை படிச்சிப் பார்த்தேன். அவர் என்கிட்ட சொன்ன அந்தக் கதை. ஆனால், அவர் எழுதின விதம் வந்து ரொம்ப ரொம்ப அற்புதமா இருந்தது.
ஒரு தேர்ந்த சிறுகதை எழுத்தாளரோட நேர்த்தி இருந்தது. அதப் படிச்சதும் ரொம்ப சந்தோஷமா இருந்தது. இப்ப ‘படை வீரன்’ டிரைலர் பார்த்ததோட படம் பார்க்கும் போதும் அதே சந்தோஷம் வரும்னு நினைக்கிறேன். இந்தக் குழுவுல பலர் எனக்குப் பழக்கப்பட்டவங்க, கூட சேர்ந்து வேலை செஞ்சவங்க.
பாரதிராஜா சாரை இந்த நிகழ்ச்சியில ரொம்பவே மிஸ் பண்றோம். தமிழ் சினிமாவை மாத்தியது கண்டிப்பா அவர்தான். அவருடைய தாக்கம் இல்லாம தமிழ் சினிமாவுக்கு, ஏன் தென்னிந்திய சினிமாவுக்கே வந்ததா நான் நினைக்கல. இன்னும் அதே ஆர்வத்தோட இருக்காரு. அவரோட இந்தப் படத்தைப் பார்க்க ரொம்பவே ஆர்வமா இருக்கேன்,” என மணிரத்னம் பேசினார்.
நிகழ்ச்சியில் இயக்குனர் மிஷ்கின், படத்தின் இயக்குனர் தனா, இசையமைப்பாளர் கார்த்திக் ராஜா, நாயகன் விஜய் யேசுதாஸ், நாயகி அமிர்தா உள்ளிட்ட படக்குழுவினர்கள் கலந்து கொண்டனர்.