மதுரை மாவட்டம் உசிலபட்டி மேலப்புதுர்ஆதிமூலத் தேவர், மஞ்சுவாணி தமபதியினருக்கு 1945ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் பதினைந்தாம் தேதி மூத்தமகனாக பிறந்தவர் வினுச் சக்கரவர்த்தி. இவருடன் பிரேமகாந்தன் என்கிற தம்பியும், குண்டலகேசி என்கிற தங்கையும் பிறந்தனர்.
சென்னை இராயப்பேட்டையில் உள்ள வெஸ்லி பள்ளியில் படித்த பின், மீனம்பாக்கம் ஏ.எம்.ஜெயின் கல்லூரி, மற்றும் சென்னை பல்கலைக்கழக்கத்திலும் பட்டப் படிப்பு படித்தவர்.
ஆரம்பத்தில் ஆறு மாதம் காவல்துறை அதிகாரியாக ஐஸ் ஹவுஸ் பகுதியில் பதவி வகித்தவர். தென்னக ரயில்வேயில் நான்கு வருடங்கள் பணிபுரிந்த போது நாடகம், இலக்கியம் என்று நாட்டம் வரவே, அதில் ஈடுபட ஆரம்பித்தார்.
“டான்ஸ் மாஸ்டர், வியட்நாம் வீடு, தங்கப் பதக்கம், யாரோ இவர் யாரோ” போன்ற நாடகங்களில் தொடர்ந்து நடித்து வந்தார். மறைந்த கன்னட இயக்குனரும் எழுத்தாளருமான புட்டன்ன கனகலிடம் உதவியாளராக சேர்ந்த இவர், சினிமா பற்றி அவரிடம் தெரிந்து கொள்ள ஆரம்பித்தார்.
1977-ல் திருப்பூர் மணி தயாரிப்பில் சிவக்குமார் நடித்த நூறாவது படமான ‘ரோசாப்பூ ரவிக்கைக்காரி’ படத்திற்குத் திரைக்கதை எழுதி, அதில் ஒரு வேடத்திலும் நடித்து நடிகராக அறிமுகமானார்.
மணிவண்ணன் இயக்கிய ‘கோபுரங்கள் சாய்வதில்லை’, பாரதிராஜா இயக்கிய ‘மண் வாசனை’ ஆகிய இரு படங்களும் இவரது சினிமா வாழ்க்கையில் மிக முக்கியமான படங்கள்.
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, ஆங்கிலம் ஆகிய ஆறு மொழிகள் பேசத் தெரிந்த இவர், தமிழில் ஆயிரம் படங்களுக்கு மேல் நடித்திருக்கிறார். மலையாளத்தில் முப்பது, தெலுங்கில் ஐந்து, படுக மொழியில் ஒரு படம் என நான்கு மொழிப் படங்களில் நடித்திருக்கிறார். இவருக்கு தமிழக அரசு கலைமாமணி விருது வழங்கி கௌரவித்துள்ளது.
“வண்டிச் சக்கரம், கோயில் புறா, இமைகள், பொண்னுக்கேத்த புருஷன்” போன்ற படங்களில் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இனை இயக்குனராகவும் பணியாற்றி இருக்கிறார். நடிகை சில்க் ஸ்மிதாவை பெயர் வைத்து சினிமாவுக்கு அறிமுகப்படுத்தியவர் இவர்தான்.
இவருக்கு கர்ணபூ என்கிற மனைவியும், சண்முகப் பிரியா என்கிற மகளும், சரவன ப்ரியன் என்கிற மகனும் உள்ளனர். சாலிகிராமத்தில் வசித்து வந்த இவர் கடந்த சில தினங்களாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். ஆனால், சிகிச்சை பலனின்றி இன்று காலமானார்.
நடிகர் வினுச் சக்கரவர்த்தி மறைவுக்கு நடிகர் ரஜினிகாந்த், விஜயகாந்த் உள்ளிட்ட திரையுலகப் பிரமுகர்கள் பலர் இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளனர்.
அவரது உடல் சாலிகிராமத்தில் உள்ள அவரது வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. நாளை இறுதிச்சடங்கு நடைபெறும் எனத் தெரிகிறது.
– பாலன்