சுந்தர் .சி இயக்கும் படம் என்றாலே கண்ணை மூடிக் கொண்டு போய்க் கூட ரசிக்கலாம். இரண்டரை மணி நேரமும் நம்மை இடையில் எழுந்து கூட போக வைக்காமல், இடி, இடி…என சிரிக்க வைத்து விடுவார். பெயரிலேயே ‘சி’யை வைத்திருப்பதால்தான் ‘சி’ரிக்க வைக்கும் சுந்தர் .சி-ஆக இருக்கிறார் போலிருக்கிறது. எங்க இருந்துதான் கதையைத் தேடிப் பிடிக்கிறாரோ தெரியலை. இப்படிலாம் கூட நடக்குமான்னு படத்துல அங்க இருக்கிற குறையைப் பத்திக் கூட யோசிக்க வைக்க முடியாம அடுத்தடுத்து பரபரன்னு காட்சிகளை நடத்திட்டுப் போயி ஒரு கலகலப்பு சாம்ராஜ்யத்தையே நடத்திக் காட்டிடுவாரு. இந்த ‘ஆம்பள’ படத்திலயும், அப்படித்தான். நகைச்சுவைக்கு ஏத்த ஒரு கதை, அதுக்கான கேரக்டர்ஸ், ஆரட்டிஸ்ட் இப்படி பார்த்து பார்த்து செலக்ட் பண்ணி அடிச்சி தூள் கிளப்பிடுவாரு. ‘ஆம்பள’ங்களை மட்டும் அதிரடியா செலக்ட் பண்ணாம ‘ஆன்ட்டி’களையும் அழகா செலக்ட் பண்ணியிருக்காரே…அதுலயும் கிளைமாக்ஸ்ல, “நாளைக்கு ஆயாவா ஆகப் போற பொண்ணு பின்னாடியா நாயா அலைஞ்சேன்” டயலாக்லாம் கேட்டு எவனும் சிரிக்கலைன்னா…அவங்களையெல்லாம் தயவு செஞ்சி எங்கயாவது நாடு கடத்திடுங்க. சுந்தர் சார், டிரெண்டுக்கு ஏத்தபடி எப்படி சார் பின்னி அடிக்கிறீங்க. அதுலயும் ஆரம்பத்துல சந்தானம் வேலையை விடற காரணமா இருக்கிற அந்த ஆரம்பக் காட்சிகள்ல திரைக்கதை, சிம்ப்ளி சூப்பர்ப். விஷால், அத்தை மகளான ஹன்சிகாவை அத்தை மகள்னு தெரியாம காதலிச்சி, அவரை எப்படி கல்யாணம் பண்றாருங்கறதுதான் படத்தோட ஒரு வரிக் கதை. அதுல பிரிஞ்சிருக்கிற அப்பா, அம்மாவை சேர்த்து வைக்கிறது, பிரிஞ்சிருக்கிற அப்பா, அத்தைகளை சேர்த்து வைக்கிறது, பிரிஞ்சிப் போன காதலியோட எப்படி சேர்றது என ‘ஆம்பள’ விஷால் பண்ற அதகளம்தான் இந்த ‘ஆம்பள’. ‘ஆம்பள’ன்னு பேரு வச்சிட்டு ஆறடி உயரம் இருக்கிற விஷால், அதிரடி, ஆக்ஷன்ல அசத்துலன்னா எப்படி. ஆக்ஷன் மட்டுமில்லாம காமெடியிலயும் இந்த முறை கலக்கியிருக்காரு. அதுவும் சந்தானம் கூட சேர்ந்து அவர் பண்ற அலம்பல் அசத்தலோ அசத்தல். ஆனாலும், ஹன்சிகாவை ஜோடியாக்கிட்டு, அதிகமான ரொமான்ஸ் காட்சிகளை வைக்காம விட்டதுக்காக அடுத்த படத்துலயும் ஹன்சிகாவோட ஜோடி சேர்ந்துடுங்க பாஸ். விஷாலுக்கு முதன் முறையாக ஹன்சிகா ஜோடி. வழக்கம் போலவே தன்னுடைய கிளாமராலும், அழகான சிரிப்பாலும் படம் பார்க்க வரும் அனைத்து ஆம்பளைங்களையும் அசடு வழிய வைக்கிறார் ஹன்சிகா. 2015 ஹன்சிகாவுக்குத்தானோ… சுந்தர் .சி படம்னாலே சந்தானம் ஸ்பெஷலா நடிக்க ஆரம்பிச்சிடறாரோன்னு யோசிக்கத் தோணுது. ஆரம்பத்தில் அரை மணி நேரம் அசத்துபவர், அப்புறம் திடீரென காணாமல் போய், அதன் பின் கிளைமாக்சுக்கு முன்னர் வந்து இடையில் இல்லாத காரணத்தையும் சேர்த்து சிரிக்க வைத்து விடுகிறார். வைபவ், சதீஷ் இருவருக்கும் அதிக வேலையில்லை, இருந்தாலும் விஷாலுக்கு வலது, இடது கரமாக இருக்கிறார்கள். விஷாலின் அப்பாவாக பிரபு, அம்மாவாக துளசி, அத்தைகளாக ரம்யா கிருஷ்ணன், கிரண், ஐஸ்வர்யா, அவரவர்க்கு கிடைத்த பாத்திரத்தில் நிறைவாக நடித்திருக்கிறார்கள். ஹிப் ஹாப் தமிழா இசையில் ‘பழகிக்கலாம்….’ பாடலை மட்டும் ரசிக்கலாம்…இன்னும் சில பாடல்களையும் ‘ஹிப் ஹாப்’ ஸ்டைலிலேயே போட்டிருக்கிறார். ஒரு தமிழ்ப் படம், சென்னையைத் தாண்டி கன்னியாகுமரி வரை வெளியாகும் என்பதை அவர் புரிந்து கொண்டு இசையமைத்தால் முன்னுக்கு வரலாம். ராதாகிருஷ்ணன் வசனம் படம் முழுவதையும் கலகலப்பாக்குகிறது. கோபி அமர்நாத் ஒளிப்பதிவு ஹன்சிகாவை மட்டும் தனி அழகுடன் காட்டவில்லை, ஆம்பளைங்களையும் அசத்தலாகவே காட்டியுள்ளது. ஆம்பள – அசத்தல்…