‘ஐ’ திரைப்படம் பற்றித்தான் கடந்த ஐந்து நாட்களாக அனைவரும் பேசிக் கொண்டிருக்கிறார்கள். இருந்தாலும் அதனுடன் வெளிவந்த “ஆம்பள, டார்லிங்” ஆகிய படங்களும் வசூலைப் பெறும் படங்களாக அமைந்து இந்த ஆண்டு பொங்கலுக்கு மிகப் பெரிய ஆறுதலைக் கொடுத்துள்ளது.
‘ஐ’ திரைப்படம் 14ம் தேதி வெளியாகி நேற்றுடன் முடிந்த ஐந்து நாள் வசூலில் 100 கோடியையும் தாண்டியதாக வியாபார வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் சுமார் 40 கோடி ரூபாயும், கேரளாவைப் பொறுத்தவரையில் சுமார் 10 கோடி ரூபாயும், ஆந்திரா, தெலுங்கானாவைப் பொறுத்தவரையில் சுமார் 40 கோடி ரூபாயும், அமெரிக்காவில் மட்டும் 10 கோடி ரூபாயும், மற்ற உலக நாடுகளில் 10 கோடி ரூபாயும், கர்நாடகாவில் 7 கோடி ரூபாயும், இந்தியாவில் மற்ற மாநிலங்களில் சுமார் 10 கோடி ரூபாயும் வசூலித்திருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆக மொத்தம், 5 நாள் வசூலாக சுமார் 127 கோடி ரூபாய் அளவிற்குக் கிடைத்திருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டுள்ளது. படத்தை வாங்கிய திரையரங்க உரிமையாளர்கள் அனைவருக்குமே அசல் தொகை கிடைத்து விட்டதாகவும் சொல்கிறார்கள்.
கேரளா, ஆந்திராவில் படத்திற்கு ஐந்து நாளிலேயே லாபம் வர ஆரம்பித்து விட்டதாம். தமிழ்நாட்டில் இனி வசூலாகும் தொகை செலவு போக லாபத்தில் சேர்ந்து விடும் என்கிறார்கள்.
2015ம் ஆண்டின் முதல் மாபெரும் வெற்றியாக ‘ஐ’ படம் பதிவு செய்யப்படுகிறது.