143 – விமர்சனம்

தமிழ் சினிமாவில் பல முறை பார்த்துப் பழகிப் போன ஒரு காதல் கதைதான். இருந்தாலும் ஒரு எளிமையுடன் படத்தைக் கொஞ்சம் ரசிக்க வைத்திருக்கிறார் இயக்குனர் ரிஷி.

ரவுடித்தனமான ஒரு இளைஞன், அவனைக் காதலிக்கும் ஒரு பணக்கார வீட்டுப் பெண், இவர்கள் காதல் வெற்றி பெற்றதா இல்லையா என்ற ஒரு வரிக் கதைதான் இந்த ‘143’. கிராமத்தில் வெட்டியாக ஊர் சுற்றித் திரிந்து கொண்டிருக்கும் ரிஷி, அவருடைய அப்பாவின் வற்புறுத்தலால் சென்னைக்கு வந்து ஒரு காபி ஷாப்பில் வெயிட்டர் ஆக வேலைக்குச் சேர்கிறார். அவர் தங்கியிருக்கும் நண்பனின் வீட்டுக்கு எதிர்வீட்டில் இருக்கும் பிரியங்காவைப் பார்த்ததுமே காதல் கொள்கிறார். ரிஷி மீதுள்ள காதலை வெளியில் சொல்லாமலே இருக்கிறார் பிரியங்கா. இந்தக் காதல் பிரியங்காவின் அப்பாவிற்குத் தெரிய வருகிறது. அதே சமயம், ஒரு ரவுடியின் தம்பியைக் கொன்றதால் அந்த ரவுடி ரிஷியைப் பழி வாங்கத் துடித்துக் கொண்டிருக்கிறார். இந்த சூழ்நிலையில் ரிஷி, பிரியங்கா காதல் என்ன ஆனது என்பதுதான் படத்தின் கிளைமாக்ஸ்.

ரிஷி, படத்தை இயக்கி, நாயகனாக நடித்திருக்கிறார். தெலுங்கிலிருந்து தமிழுக்கு வந்து படம் எடுத்திருக்கும் அவரது ஆர்வத்திற்கு முதலில் வாழ்த்துகள். இருந்தாலும் எந்த ஒரு பரபரப்பான திருப்புமுனையோ, காதலுக்குப் பெரிய எதிர்ப்போ இல்லாமல் படம் அதன் போக்கில் நகர்வதுதான் படத்தின் குறை. ரிஷி சென்னைக்கு வந்து செட்டில் ஆனதை விட, கிராமத்தில் ரவுடியாக சுற்றித் திரியும் போது நன்றாக நடித்திருக்கிறார்.

கதாநாயகியாக பிரியங்கா, நாயகன் ரவுடியாக இருந்தாலும் அவனது நல்ல மனதைப் பார்த்து காதல் கொள்ளும் வழக்கமான தமிழ் சினிமா கதாநாயகி. உடல் எடையைக் குறைத்தால் நல்லது, நடிப்பில் இன்னும் கனம் சேர்த்திருக்கலாம்.

நாயகனின் அப்பாவாக விஜயகுமார், சிறப்புத் தோற்றத்தில் கே.ஆர்.விஜயா, வில்லனாக ராஜசிம்மன் கிடைத்த சில காட்சிகளில் நிறைவாக நடித்திருக்கிறார்கள்.

பாடல்களும் மற்ற டெக்னிக்கல் விஷயங்களும் படத்தில் சுமாராகத்தான் அமைந்துள்ளன.

காதல் படம் என்றால் இப்படித்தான் முடிவு இருக்க  வேண்டுமா என்ன ?.

 

Read Previous

நவம்பர் 24ம் தேதி திருப்பதியில் நமீதா திருமணம்

Read Next

இந்திரஜித் – டிரைலர்

Most Popular