தனது வளர்ச்சிக்கு அச்சாரம் போட்ட விஜயகாந்த்தைப் போல, அவருடைய மகன் வளர்ச்சிக்கு விஜய் அச்சாரம் போட வேண்டும் என்று தமிழ்த் திரையுலகினர் மத்தியில் பேச்சு நிலவுகிறது.
விஜய்யின் ஆரம்ப காலகட்டத்தில் அவருடைய படங்கள் யாவும் எதிர்பார்த்த வரவேற்பைப் பெறவில்லை. அதனைத் தொடர்ந்து அவருடைய தந்தை எஸ்.ஏ.சி, விஜயகாந்திடம் அவருடைய மகன் வளர்ச்சிக்கு உதவுமாறு கேட்டுள்ளார். நெருங்கிய நண்பர் என்பதால் உடனடியாக தேதிகள் கொடுத்து விஜயகாந்த் – விஜய் இணைந்து நடித்த படம் ‘செந்தூரபாண்டி’. இந்தப் படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.
’செந்தூரபாண்டி’ வெற்றியை வைத்து, விஜய்க்கு பல்வேறு வாய்ப்புகள் வந்தது. இதனை பயன்படுத்தி வளர்ச்சியடைந்து, இன்று இந்தியாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருகிறார் விஜய். விஜயகாந்த்தின் மறைவுக்குக் கூட கண்கலங்கி வந்து அஞ்சலி செலுத்திவிட்டுச் சென்றார் விஜய். அதே சமயம், விஜயகாந்த்தின் குடும்பத்தினருக்கு விஜய் உதவ வேண்டும் என்ற குரல் ஒலிக்கத் தொடங்கியிருக்கிறது.
விஜயகாந்த்தின் மகன் சண்முக பாண்டியன் நடிகராக அறிமுகமாகி இன்னும் வெற்றியைப் பெறவில்லை. இவர் நாயகனாக நடித்த முதல் படம் ‘சகாப்தம்’. இந்தப் படம் எதிர்பார்த்த வரவேற்பைப் பெறவில்லை. இதனைத் தொடர்ந்து ‘மதுரை வீரன்’ என்னும் படத்தில் நடித்தார். தற்போது ‘குற்றப்பரம்பரை’ வெப்தொடரில் நடிப்பதற்கு தன்னை தயார்படுத்தி வருகிறார்.
எப்படி தனது வளர்ச்சிக்கு விஜயகாந்த் இருந்தாரோ, அதே போல் சண்முக பாண்டியன் வளர்ச்சிக்கு விஜய் இருக்க வேண்டும் என்பது தான் தமிழ்த் திரையுலகினரின் குரலாக இருக்கிறது.
சண்முக பாண்டியனின் படமொன்றில் விஜய் நடித்துக் கொடுக்க வேண்டும், அவ்வாறு நடித்தால் அது சண்முக பாண்டியனின் வளர்ச்சிக்கு பெரும் உதவியாக இருக்கும் என்பது தான் அனைவருடைய எண்ணம். இதைச் செய்வாரா விஜய் ?