விஜய் டிவியில் அக்டோபர் 7 ம் தேதி முதல் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 10 மணிக்கு ஒளிபரப்பாக உள்ள புதிய மெகா தொடர் ‘தாழம்பூ’.
பாம்புகளின் உலகம் நாகலோகம். அதன் தலைவர் நாகயோகி. அவரின் மகள் வாசுகி. நாகலோகத்தின் இளம் போர்வீரன் நாகா. வாசுகியும் நாகாவும் நிச்சயம் ஆனவர்கள். அவர்களது பொக்கிஷமான ஆத்மலிங்கம் நாகலோகத்தில் இருந்து தொலைந்து விடுகிறது.
ஆத்மலிங்கம் இல்லை என்றால் அவர்களது சக்திகள் முழுமை பெறாது. அவர்களது உலகமே அழியும் நிலை ஏற்பட்டுவிடும். அந்த நிலையில் ஆத்மலிங்கத்தை மீட்டெடுக்க நாகா, பூலோகம் வருகிறான்.
அழகிய இளம் பெண்ணான ரேவதி மற்றும் அவளது குடும்பத்தினர் ஆத்மலிங்கத்தை பாதுகாத்து பூஜித்து வருகின்றனர்.
நாகா மானிடனாக உருமாறி பூலோகம் வருகிறான். ஆத்மலிங்கத்தை மீட்டெடுக்கும் நோக்கில் ரேவதியிடம் நெருங்கிப் பழகுகிறான். ரேவதி, நாகாவை காதலிக்கிறாள். அவளுக்கு நாகா மனிதன் அல்ல பாம்பு என்று தெரிய வருகிறதா ?, ஆத்மலிங்கத்தை காப்பாற்றுகிறாளா ?, என்பதுதான் இத் தொடரின் கதை.
ரேவதி கதாபாத்திரத்தில் திரைப்பட நடிகை சாந்தினி, வாசுகி கதாபாத்திரத்தில் அங்கனா ராய், நாகா கதாபாத்திரத்தில் அம்ரித் ஆகியோர் நடிக்கிறார்கள்.
இயக்குனர் ராஜீவ் மேனன் உதவியாளர் சண்முகம் இத் தொடரை இயக்குகிறார்.