‘ஜவான்’ படத்தின் மூலம் இந்தி திரையுலகின் முன்னணி இயக்குநர்களில் ஒருவராக வலம் வருகிறார் அட்லி. இந்திய திரையுலகில் அதிக வசூல் செய்த படம் என்ற மாபெரும் சாதனையை ‘ஜவான்’ நிகழ்த்தியுள்ளது.
தமிழில் ‘ராஜா ராணி’, ‘தெறி’, ‘மெர்சல்’, ‘பிகில்’ உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார் அட்லி. இவை அனைத்துமே வெற்றிப் படங்கள் தான்.
திரையுலகில் இயக்குநராக அறிமுகமாவதற்கு முன்னால், ‘முகப்புத்தகம்’ என்ற குறும்படம் ஒன்றை இயக்கியிருந்தார் அட்லி. இதில் நாயகனாக நடித்தவர் சிவகார்த்திகேயன். அப்போதில் இருந்தே அட்லி – சிவகார்த்திகேயன் இருவரும் நெருங்கிய நண்பர்கள்.
தற்போது அட்லியின் வளர்ச்சி குறித்து, அவர் மீது வைக்கப்படும் விமர்சனம் குறித்தும் பேசியிருக்கிறார் சிவகார்த்திகேயன். அதில் அவர் கூறியிருப்பதாவது:
“அட்லியை பயங்கரமாக விமர்சனம் செய்கிறார்கள். ஒரு குறிக்கோள் ஒன்றை வைத்து, அதை முடித்துக் காட்டுவதில் எனக்கு அட்லி மீது மரியாதை உண்டு. இதே மற்ற திரையுலக இயக்குநராக இருந்தால் பயங்கரமாக கொண்டாடி இருப்பார்கள். அதே போல் நாமும் கொண்டாட வேண்டும் என நினைக்கிறேன்.
தமிழிலிருந்து ஒரு இயக்குநர் இந்திக்குச் சென்று ஷாருக்கானை வைத்து 1200 கோடி வசூல் செய்யும் படம் செய்திருக்கிறார் என்பது சாதாரணமாக விஷயம் கிடையாது. இது ஏற்கனவே வந்த கதை என்றெல்லாம் சொல்லலாம், அதற்காக அனைவரும் செய்துவிட முடியுமா, முடியாது.
இந்தி திரையுலக இயக்குநர்களாலே அதை செய்ய முடியவில்லையே. ஆனால், அட்லி செய்திருக்கிறார் என்றால் கொண்டாட வேண்டும். இங்கு தொடர்ச்சியாக விமர்சனம் செய்துக் கொண்டே இருந்தார்கள்.
இப்போது அட்லி இந்திப் படம் செய்ய போய்விட்டார். இங்கு கமர்ஷியல் படம் பண்ணும் இயக்குநர் இல்லை. அவர் விஜய்யுடன் இணையும் போது, அதன் வியாபாரம் என்பதே வேறு. அவனுடைய ஒவ்வொரு படத்தையும், அவனே உடைத்து அடுத்டுத்த கட்டத்துக்குப் போய் கொண்டே இருக்கிறான். அதனைப் பார்க்கும் போது சந்தோஷமாக இருக்கிறது” இவ்வாறு சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.