‘சலார் 2’ படப்பிடிப்பு எப்போது என்பதற்கு இயக்குநர் பிரசாந்த் நீல் மழுப்பலாக பதிலளித்துள்ளார்.
பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ், ப்ரித்விராஜ், ஸ்ரேயா ரெட்டி, ஸ்ருதிஹாசன், ஜெகபதி பாபு, பாபி சிம்ஹா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘சலார் 1’.
ஹோம்பாலே பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்திருந்த இந்தப் படம் டிசம்பர் 22-ம் தேதி வெளியானது.
‘கே.ஜி.எஃப்’ இயக்குநர், நாயகனாக பிரபாஸ் என பிரம்மாண்ட எதிர்பார்ப்புக்கு இடையே வெளியான இந்தப் படம் போதிய வரவேற்பைப் பெறவில்லை.
இந்தப் படத்தின் பொருட்செலவுக்கு ஏற்றார் போல் வசூல் இல்லை என்பதால் 2-ம் பாகம் எப்போது தொடங்கப்படும் என்பது தெரியாமலேயே இருந்து வருகிறது. இந்நிலையில் ‘சலார்’ படத்தின் விமர்சனங்கள், 2-ம் பாகம் குறித்து பேட்டியளித்துள்ளார் பிரசாந்த் நீல். அதில் அவர் கூறியிருப்பதாவது:
’சலார்’ முதல் பாகத்திற்கு வந்த விமர்சனத்தை வைத்து, இரண்டாம் பாகத்தின் கதையை மாற்றும் எண்ணமில்லை. ஏனென்றால் முழுமையாக கதையை எழுதி முடித்துவிட்டேன். ஒரு இயக்குநராக எழுதிய கதையை முழுமையாக சொல்வது எனது பணி.
‘சலார் 2’ படத்தின் பணிகள் இப்போதைக்கு தொடங்கும் எண்ணமில்லை. படப்பிடிப்புக்குச் செல்லும் முன்பு, அனைத்து பணிகளும் சரியாக இருக்க வேண்டும் என எண்ணுகிறேன். பாக்ஸ் ஆபிஸ் வசூல் என்பது ஒரு படத்திற்கு மிகவும் முக்கியம். அதை முன்வைத்தே ’சலார் 2’ படம் இருக்கும். முதல் பாகத்தை விட இன்னும் பிரம்மாண்டமாக இருக்கும்” இவ்வாறு பிரசாந்த் நீல் தெரிவித்துள்ளார்.