‘சலார் 2’ மற்றும் ‘டிராகன்’ படங்களின் தயாரிப்பாளர்களுக்குள் மறைமுக மோதல் வெடித்துள்ளது.
ஹோம்பாளே நிறுவனம் தயாரிப்பில் பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ், பிரித்விராஜ், ஸ்ருதிஹாசன், ஸ்ரேயா ரெட்டி உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘சலார்’. இது எதிர்பார்த்த வரவேற்பினை பெறவில்லை. ஆனால், கதை முடியவில்லை என்பதால் இரண்டாம் பாகத்தினை உருவாக்கும் முயற்சியில் படக்குழு இறங்கியிருக்கிறது.
இதனிடையே, ‘சலார்’ படப்பிடிப்பில் இருக்கும் போதே மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் ஜூனியர் என்.டி.ஆர் நடிக்கும் ‘டிராகன்’ படத்தினை இயக்க ஒப்பந்தமானார் பிரசாந்த் நீல். அதன் பணிகளை கவனித்து வந்தார். இதன் படப்பிடிப்பு ‘தேவாரா’ படத்தினை முடித்துவிட்டு தொடங்கவுள்ளார்.
தற்போது ஆகஸ்ட் 10-ம் தேதி முதல் ‘சலார் 2’ படத்தின் படப்பிடிப்பு தொடங்கி 15 நாட்கள் நடைபெறவுள்ளது என்று பாலிவுட் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேலும், ‘சலார் 2’ மற்றும் ‘டிராகன்’ ஆகிய படங்களில் ஒரே சமயத்தில் பிரசாந்த் நீல் பணிபுரியவுள்ளார் என்றும் குறிப்பிட்டுள்ளார்கள். இதே வேளையில் ‘டிராகன்’ குறித்து தெலுங்கு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அதில், ‘டிராகன்’ படத்தில் மட்டுமே பிரசாந்த் நீல் கவனம் செலுத்தவுள்ளார். இப்போதைக்கு ‘சலார் 2’ தொடங்கப்படாது என்று தெரிவித்துள்ளன. இரண்டு நிறுவனங்களுமே கடும் போட்டியில் பிரசாந்த் நீல் தங்களுக்கு படம் இயக்க வேண்டும் என்ற முனைப்பில் இறங்கியுள்ளன. இது குறித்து பிரசாந்த் நீல் சமரசம் செய்யாத வரை இது முடியாது என்பது மட்டும் உறுதி.