‘புஷ்பா 2’ வெளியீட்டில் மாற்றம் என்று வெளியான தகவலுக்கு, விளம்பரத்தின் மூலம் மறுப்பு தெரிவித்துள்ளது படக்குழு.
சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, ஃபகத் பாசில் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘புஷ்பா 2’. இதன் முதல் பாகத்துக்கு இந்தியாவில் பெரும் வரவேற்பு கிடைத்தது. மேலும், சிறந்த நடிகருக்கான விருதினையும் வென்றார் அல்லு அர்ஜுன்.
தற்போது ‘புஷ்பா 2’ படத்துக்கு பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. ஆகஸ்ட் 15-ம் தேதி ‘புஷ்பா 2’ வெளியாகும் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால், சில தினங்களாக இதில் மாற்றம் இருக்கும் என்று தகவல்கள் பரவியது.
இதற்கு மறுப்பு தெரிவிக்கும் விதமாக, இன்னும் 200 நாட்களில் ‘புஷ்பா 2’ என்று விளம்பரப்படுத்தி இருக்கிறது ‘புஷ்பா 2’ படக்குழு. இதன் மூலம் வெளியீட்டில் மாற்றமில்லை என்பது உறுதியாகி இருக்கிறது. இன்னும் 60 நாட்கள் படப்பிடிப்பு பாக்கி இருக்கிறது.
’புஷ்பா 2’ படத்தில் பெரியளவுக்கு கிராபிக்ஸ் காட்சிகள் இல்லை என்பதால், படப்பிடிப்பு முடித்து இறுதிக்கட்டப் பணிகளில் கவனம் செலுத்தவுள்ளது படக்குழு. ஜூன் முதல் வாரத்தில் அனைத்து பணிகளையும் முடித்துக் கொடுத்துவிடுவதாக இயக்குநர் சுகுமார் தயாரிப்பு நிறுவனத்திடம் தெரிவித்திருக்கிறார்.
ஜூன் மாதம் முழுவதும் அனைத்து மொழிகளிலும் பிரம்மாண்டமாக விளம்பரப்படுத்த படக்குழு திட்டமிட்டு இருக்கிறது.