சவரக்கத்தி, தனி அடையாளத்துடன் இயக்குனராக அறிமுகமாகும் ஆதித்யா

லோன் உல்ப் புரொடக்ஷன்ஸ் சார்பாக மிஷ்கின் கதை, திரைக்கதை எழுதி தயாரிக்கும் படம் ‘சவரக் கத்தி’.

இப்படத்தில் அவருடைய தம்பி ஜி.ஆர். ஆதித்யா இயக்குனராக அறிமுகமாகிறார். தமிழ்த் திரையுலகில் தங்களது படங்கள் மூலம் தனி பெயரையும், புகழையும் பெற்றுள்ள இயக்குனர்கள் ராம், மிஷ்கின் இப்படத்தின் முதன்மைக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள். பூர்ணா கதையின் நாயகியாக நடித்துள்ளார்.

முதல் படத்திலேயே தமிழ் சினிமாவின் இன்றைய முக்கிய இயக்குனர்களை இயக்கும் ஒரு இயக்குனராக தனி அடையாளத்துடன் அறிமுகமாகிறார் இயக்குனர் ஜி.ஆர். ஆதித்யா. அவருடைய முதல் பட வாய்ப்பு பற்றி அவர் கூறியதாவது….

‘‘சித்திரம் பேசுதடி’ படம் முடிந்த பின் மிஷ்கினிடம் உதவியாளராக சேரச் சென்றேன். அவர் என்னைக் கடுமையாகத் திட்டி அனுப்பிவிட்டார்.

‘லேண்ட்மார்க்’கில் பார்த்துக் கொண்டிருந்த வேலையையும் விட்டுவிட்டேன். மிஷ்கின் என்னை சேர்த்துக் கொள்ள மறுத்துவிட்டார். சினிமா ஆசையில் வேறு எங்கும் வேலைக்குப் போகவும் முடியவில்லை. பின்னர் இயக்குனர் பார்த்திபனிடம் சென்று உதவியாளராகச் சேர்ந்தேன். அவரிடமும் நான் மிஷ்கினின் தம்பி எனச் சொல்லவில்லை. அது பற்றி தெரிந்ததும் அவர் ஏன் என்னிடம் சொல்லவில்லை எனக் கேட்டார். தனியாக நின்று வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணத்தில் சொல்லவில்லை என்றேன்.

பின்னர் இயக்குனர்கள் ஹோசிமின், நந்தா பெரியசாமி ஆகியோரிடம் வேலை பார்த்தேன். கே.எஸ். ரவிக்குமாரிடமும் வேலை செய்தேன். பின்னர் ‘அஞ்சாதே’ படத்தை மிஷ்கின் இயக்கிய போது மீண்டும் அவரிடம் சென்று வேலை கேட்டேன். அப்போது என்னை சேர்த்துக் கொண்டார். அந்தப் படத்தில் கடைசி உதவி இயக்குனராக வேலைக்குச் சேர்ந்தேன். வேலைக்குச் சேர்ந்த சில நாட்களிலேயே மயக்கும் போட்டு விழும் அளவிற்குக் கடுமையாக வேலை செய்தேன். மிலிட்டரிக்குச் சென்று வேலை பார்ப்பது போன்று இருக்கும்.

தொடர்ந்து அவரிடம் “அஞ்சாதே, நந்தலாலா, யுத்தம் செய், முகமூடி” போன்ற படங்களிலும், சில படங்களின் ஸ்கிரிப்ட் வேலைகளிலும் அவருடன் இணைந்து பணியாற்றினேன். ‘முகமூடி’ படத்திற்குப் பிறகு தனியாக படம் இயக்க வேண்டும் என்று வாய்ப்பு தேட ஆரம்பித்தேன்.

முதல் படம் இயக்கும் போது ஒரு ‘காமெடி’ படம்தான் இயக்க வேண்டும் என்று முடிவெடுத்து கதைகளைப் பேச ஆரம்பித்தேன். அப்படி வந்த கதைதான் ‘சவரக் கத்தி’.

இயக்குனர் மிஷ்கினுக்கென ஒரு ஸ்டைல் உள்ளது. அது இந்தப் படத்திலும் இருக்க வேண்டும் என்று விரும்பினேன். அதற்காக அவர், இந்தப் படத்திற்கு கதை, திரைக்கதை எழுதிக் கொடுத்திருக்கிறார்.

குடும்பத்துடன் அனைவரும் வந்து பார்க்கும்படியாக ஒரு கலகலப்பான படமாக இந்த ‘சவரக் கத்தி’ இருக்க வேண்டும் என்று உருவாக்கியிருக்கிறோம்,” என்கிறார் இயக்குனர் ஜி.ஆர். ஆதித்யா.

பிப்ரவரி 9ம் தேதி ‘சவரக் கத்தி’ படம் வெளியாகிறது. கிரிக்ஸ் சினி கிரியேஷன்ஸ் இப்படத்தை வெளியிடுகிறது.

Read Previous

விசிறி விமர்சனம்

Read Next

‘விஸ்வாசம்’ – அஜித் ஜோடியாக நயன்தாரா

Most Popular