சினிமா நடிகர்களின் ரசிகர்களுக்குள் நடக்கும் சண்டைகள்தான் சமூக வலைத்தளங்களில் தற்போதைய பெரும் பிரச்சினை. அதிலும், விஜய், அஜித் ரசிகர்கள் என்றால் கேட்கவே வேண்டாம். இருவரது ரசிகர்களும் மாறி மாறி சண்டை போட்டு, திட்டிக் கொண்டு சமயங்களில் வரம்பு மீறியும் நடந்து கொள்வார்கள்.
அந்த சண்டை விவகாரத்தை அப்படியே ஒரு கதையாக உருவாக்கி, அதற்குள் காதல், மோதல், ஒரு சமூகப் பிரச்சனை என வைத்து இந்த ‘விசிறி’ படத்தைக் கொடுத்திருக்கிறார் இயக்குனர் வெற்றி மகாலிங்கம்.
ராம் சரவணா தீவிரமான அஜித் ரசிகன். அவர்கள் ஏரியாவிற்கு படிக்க வரும் மதுரையைச் சேர்ந்த ரெமோனா ஸ்டெபனி-யைக் காதலிக்கிறார். ரெமோனா ஸ்டெபனி தீவிரமான விஜய் ரசிகரான ராஜ் சூர்யாவின் தங்கை. ராம் சரவணாவுக்கும், ராஜ் சூர்யாவுக்கும் பேஸ் புக் மூலமாக முன்பே பழக்கம். ஒரு முறை சென்னைக்கு வரும் ராஜ் சூர்யாவுக்கும், ராம் சரவணாவுக்கும் அடிதடி சண்டை நடக்கிறது. காதலிக்கும் போது தன்னை விஜய் ரசிகன் என பொய் சொல்லி காதலித்த ராம் சரவணாவை விட்டுப் பிரிந்து, மதுரைக்கே சென்று விடுகிறார் ரெமோனா. அதன் பின் காதலர்கள் இணைந்தார்களா, ராம் சரவணா, ராஜ் சூர்யா சண்டை முடிவுக்கு வந்ததா என்பதுதான் படத்தின் கதை.
அஜித், விஜய் ரசிகர்கள் எப்படி இருப்பார்களோ அப்படியே இயல்பாக இருக்கிறார்கள் ராம் சரவணா மற்றும் ராஜ் சூர்யா. அவர்கள்து அபிமான நடிகர்தான் ‘ஒஸ்தி’ என அவர்கள் இருவரும் சண்டையிட்டுக் கொள்வதைப் பார்ப்பது இந்தக் காலத்து சமூக வலைத்தள சண்டையை நேரில் பார்ப்பது போலவே இருக்கிறது. இந்த இரு நாயகர்கள், நாயகி ரெமோனா ஸ்டெபனி என யாருமே சினிமாத்தனம் இல்லாத தோற்றத்தில் யதார்த்தமாக இருக்கிறார்கள். அவர்களது தோற்றம் கதைக்குப் பொருத்தமாகவே அமைந்துவிட்டது.
ராம் சரவணாவின் நண்பர்களாக நடித்திருப்பவர்கள் அடிக்கடி டபுள் மீனிங்கில் பேசுவது தேவையற்றது. இடைவேளை வரை படத்தின் காட்சிகள் பெரும்பாலும் அந்த குடோனிலேயே நகர்கிறது. இடைவேளைக்குப் பின்னர், அதே சமூக வலைத்தளங்களில் பெண்களைப் படம் பிடித்து தவறாகப் பயன்படுத்துவது பற்றி கதையைக் கொஞ்சம் வேறு திசைக்குத் திருப்பி முடித்திருக்கிறார் இயக்குனர்.
டிரென்டிங் ஆன கதை, சமூக வலைத்தளம் என ‘கரென்ட்’ மேட்டரை கையில் எடுத்திருக்கிறார் இயக்குனர். உருவாக்கத்தில் மட்டும் இன்னும் ‘ரிச்னெஸ்’ காட்டியிருந்தால் இந்த ‘விசிறி’ இன்னும் அதிகமான விசிறிகளைப் பெற்றிருக்கும்.