தமிழ்நாட்டில் பல தியேட்டர்கள் மூடப்பட்டன !

தமிழ்த் திரையுலகத்தில் கடந்த பத்து நாட்களுக்கும் மேலாக புதிய படங்கள் எதுவும் வெளியாகவில்லை. தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்களுக்கும், டிஜிட்டல் சேவை நிறுவனங்களுக்கும் இடையே கட்டண விவகாரம் தொடர்பாக எழுந்த மோதலால் அந்த நிறுவனங்களுக்கு எதிராக தயாரிப்பாளர்கள் படங்களை வெளியிடுவதை நிறுத்தினர்.

புதிய படங்கள் எதுவும் இல்லாததால், தியேட்டர்களுக்கு மக்கள் வருவது வெகுவாகக் குறைந்தது. மேலும் 12வது மற்றும் 11வது வகுப்புகளுக்கான முழு ஆண்டுத் தேர்வுகளும் நடந்து வருவதால் பல ஊர்களில் பல தியேட்டர்களில் படம் பார்க்க யாருமே வரவில்லை.

இதனால், கடந்த வாரமே பல தியேட்டர்களை மூட வேண்டிய சூழல் ஏற்பட்டது. சில தியேட்டர்கள் சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமையாவது மக்கள் வருவார்கள் என்று எதிர்பார்த்தார்கள். ஆனால், கடந்த இரண்டு நாட்களாக அதுவும் நடக்கவில்லை. நேற்றே பல தியேட்டர்களில் ‘காட்சிகள் ரத்து’ என போர்டுகள் மாட்டப்பட்டன.

கேளிக்கை வரி உள்ளிட்ட சில கோரிக்கைகளை வலியுறுத்தி தியேட்டர்காரர்கள் மார்ச் 16 முதல் தியேட்டர்களை மூடப் போவதாக அறிவித்தனர். ஆனால், அவர்கள் போராட்டம் நடத்துவதற்கு முன்பாகவே இப்போதே தியேட்டர்களை தானாக மூட வேண்டிய சூழல் ஏற்பட்டுவிட்டது.

தயாரிப்பாளர் சங்கத்திற்கு தியேட்டர்கள் சங்கத்தினர் ஆதரவு கொடுத்தால் தமிழ்த் திரையுலகத்தில் ஒரு நிரந்தரமான தீர்வு ஏற்படும். ஆனால், தியேட்டர்காரர்கள் தன்னிச்சையாக முடிவு எடுப்பதால் அது திரையுலகத்தையும் வெகுவாக பாதிக்கிறது.

சில மூத்த தியேட்டர்காரர்கள்தான் தவறான ஆலோசனைகளை வழங்குவதாகச் சொல்லப்படுகிறது. இதனிடையே, தயாரிப்பாளர் சங்கத்திற்கு ஆதரவாக பல தியேட்டர்காரர்கள் செயல்பட முடிவு செய்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

சினிமா இல்லாமல் தமிழக மக்களும் கிடையாது, டிவிக்களும் கிடையாது. தேர்வுகள் முடிவடைவதற்குள் இந்த விவகாரத்திற்கு ஒரு தீர்வு கிடைத்தால் வரும் விடுமுறை நாட்களில் பல படங்கள் வெளியாக வாய்ப்பாக இருக்கம். மக்களுக்கும் பொழுதுபோக்குவதற்கு புதிய படங்களைப் பார்த்த திருப்தியும் கிடைக்கும்.

Read Previous

சிம்பு-வை அழ வைத்த நண்பர்கள்

Read Next

ரஜினிகாந்தை விமர்சித்த கமல்ஹாசன்

Most Popular