சந்தானம், பவர் ஸ்டார், சேது, விசாகா நடிக்க மணிகண்டன் இயக்கத்தில் பொங்கலுக்கு வெளியாக உள்ள படம் ‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’.
இந்த படத்தின் வெளியீட்டை நிறுத்தி உரிய நடவடிக்கை எடுக்கும்படி இயக்குனரும் நடிகருமான கே.பாக்யராஜ் , சென்னை , காவல் துறை ஆணையாளரிடம் புகார் ஒன்றை அளித்துள்ளார்.
கே. பாக்யராஜ் கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் மற்றும் நடிப்பில் 1981ம் ஆண்டு வெளிவந்து வெற்றிகரமாக ஓடிய படம் ‘இன்று போய் நாளை வா’.
மூன்று ஹீரோக்கள் ஒரு பெண்ணைக் காதலிக்க போட்டி போடும் அம்சம் கொண்ட கதைதான் ‘இன்று போய் நாளை வா’. இந்த படத்தை மையமாக வைத்துதான் தற்போது ‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’ என்ற பெயரில் படமாக எடுத்திருப்பதாக பாக்யராஜ் புகார் தெரிவித்துள்ளார்.
1992ம் ஆண்டில் ‘இன்று போய் நாளை வா’ படத்திற்கான கதை, வசனம் ஆகிய உரிமையை கன்னடத்தில் தயாரிப்பதற்காக வழங்கியுள்ளார்.
1992க்கு முன்னால் தெலுங்கில் தயாரிப்பதற்கான, கதை உரிமை மற்றும் காபிரைட் உரிமைகளை வழங்கியுள்ளார்.
1998ம் ஆண்டு ஹிந்தியில் தயாரிப்பதற்கான கதை, வசனம் ஆகிய உரிமையை கொடுத்திருக்கிறார்.
1993ம் ஆண்டு ‘இன்று போய் நாளை வா’ படத்தின் தயாரிப்பாளரான தெஹ்ரானி , நெகட்டிவ் உரிமையை ஓகே பிலிம்ஸ் மணி என்பவருக்கு 99 வருடங்களுக்கு கொடுத்திருக்கிறார். படத்தின் கதை, வசனம் ஆகிய உரிமை கதாசிரியருக்கு மட்டுமே உண்டு. அப்படத்தின் தயாரிப்பளரே அதே படத்தை மீண்டும் வேறு இயக்குனர், நடிகர்கள் வைத்து தயாரிப்பதாய் இருந்தால் கூட கதையாசிரியரிடம்தான் பெற வேண்டும்.
அந்த உரிமையை கே. பாக்யராஜ் இதுவரை யாருக்கும் வழங்கவில்லை.
2012ம் வருடத்தில் இயக்குனர் கே. பாலசந்தரின் மகளான புஷ்பா கந்தசாமி, மீண்டும் ‘இன்று போய் நாளை வா’ படத்தை தயாரிக்க விரும்புவதாகவும், அந்த படத்தின் கதை, வசன உரிமையை ஓகே பிலிம்ஸ் மணியிடமிருந்து வாங்கியுள்ளதாகவும் கூறி பாக்யராஜை அணுகியுள்ளார்.
ஆனால், பாக்யராஜ் அந்த படத்தை தானே மீண்டும் தன்னுடைய மகன் சாந்தனுவை வைத்து தமிழ், தெலுங்கில் எடுக்க இருப்பதாகவும், அதற்கான பணியை துவக்கி விட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
சிறிது நாட்களுக்குப் பிறகு தயாரிப்பாளரும், இயக்குனருமான இராம. நாராயணன் பாக்யராஜை அணுகி அவரும் அந்த படத்தின் கதை உரிமையைக் கேட்டுள்ளார். அவருக்கும் மேற்சொன்ன பதிலைத்தான் தெரிவித்துள்ளார்.
இராம.நாராயணன் படத்தின் கதை உரிமை புஷ்பா கந்தசாமியின் குடும்ப உறுப்பினர் ஜனனி கந்தசாமியிடம் இருப்பதைப் பற்றியும் விசாரித்துள்ளார். அதற்கு பதிலளித்த பாக்யராஜ், அவர் ஓகே பிலிம்ஸ் மணியிடம் போட்ட ஒப்பந்தம் செல்லாது என்றும், ஒப்பந்தத்தில் பல குளறுபடிகள் உள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.
அதன் பின், யாருமே பாக்யராஜை தொடர்பு கொள்ளவில்லை. இப்போது படம் தயாராகி பொங்கலுக்கு வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
‘இன்று போய் நாளை வா’ படத்தை மையமாக வைத்துதான் ‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’ படத்தை தயாரித்திருப்பதாக பல்வேறு சந்தர்ப்பங்களில் இயக்குனர், சந்தானம் உட்பட பலரும் பல பேட்டிகளில் தெரிவித்துள்ளனர்.
இதன் உண்மை நிலையயை அறிவதற்காக இராம.நாராயணனிடம் படத்தைக் காட்டச் சொல்லி கேட்டிருக்கிறார் பாக்யராஜ். இது வரை எந்த பதிலும் அவருக்குக் கிடைக்கவில்லை.
எனவே , இராம. நாராயணன், புஷ்பா கந்தசாமி, அவரது குடும்ப உறுப்பினர் ஜனனி கந்தசாமி ஆகியோர் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்கக் கோரியுள்ளார்.
மேலும், நீதிமன்றத்தில் 2 கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு வழக்கு தொடர உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.