‘கல்யாணப் பரிசு’ படத்தில் ‘மன்னார் அன்ட் கம்பெனி’ நகைச்சுவை மூலம் இன்றும் நம்மை ரசிக்க வைக்கும் மறைந்த நகைச்சுவை நடிகர் தங்கவேலுவின் பேரன் அஸ்வின் ‘ஆயுள் ரேகை நீயடி’ என்ற படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகிறார்.
ஸ்ரீ வலம்புரி விநாயகர் மூவீஸ் என்ற பட நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தை செல்வகுமார் இயக்குகிறார். இசை – ஜெயசீலன். கதாநாயகியாக தர்ஷிதா நடிக்கிறார். முக்கிய கதாபாத்திரத்தில் டாக்டர் சரவணன் நடிக்கிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு பழனி, கோவை, ஊட்டி, மூணார் போன்ற இடங்களில் நடைபெற்றிருக்கிறது. அடுத்த கட்ட படப்பிடிப்பு விரைவில் துவங்குகிறது.
“ஒரு பெண்ணால் ஒருவன் வாழ்க்கை எப்படியெல்லாம் உயர்கிறது, என்பதையும், எப்படி வீணாகிறது என்பதையும் இதில் கதையாக்கி இருக்கிறேன். அதை கமர்ஷியல் சினிமாவாக உருவாக்கி இருக்கிறோம். நிச்சயம் இந்த படம் ரசிகர்களை கவரும்,” என்கிறார் இயக்குனர் செல்வகுமார்.