இசையமைப்பாளர் இளையராஜா இன்று அவருடைய 75வது பிறந்த நாளைக் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்.
அவருக்கு இந்திய குடியரசுத் தலைவர் ராம்நாம் கோவிந்த் இன்று காலையிலேயே தமிழில் வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
அவருடைய வாழ்த்துச் செய்தியில்,
“இந்தியாவின் இன்னிசைத் துடிப்பைத் தீர்மானிக்கும், ஒப்பற்ற கலைஞர் ,இசை மாமேதை, தன்னேரில்லா இளையராஜாவுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள். இவ்வாண்டுத் தொடக்கத்தில், அன்னாருக்கு பத்ம விபூஷண் விருது வழங்கியதை யான் பெற்ற பெரும் பேறாகக் கருதுகிறேன்,” என குடியரசுத் தலைவர் கூறியிருக்கிறார்.
தமிழ்நாடு துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில்,
“கிராமிய இசை முதல் மேற்கத்திய இசை வரை தனது இசைப் புலமையால் உலக நாடுகளையெல்லாம் திரும்பிப் பார்க்க வைத்தவர் இசையுலக ஜாம்பவான், இசை மாமேதை இளையராஜா அவர்கள்.
தனது மெல்லிசையால் கலைமாமணி , நாட்டின் உயரிய விருதுகளான பத்ம பூசண், பத்ம விபூசண், தேசிய விருதுகள் உட்பட பல மாநில விருதுகளையும், கோடிக்கணக்கான இதயங்களையும் வென்ற இசைஞானி இளையராஜா அவர்கள் நல்ல ஆரோக்கியத்தோடு நீடூழி வாழ எனது இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்,” எனக் கூறியுள்ளார்.
இளையராஜாவுக்கு திரையுலகத்தினர், அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பலர் வாழ்த்து தெரிவித்துள்ளார்கள்.