ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளில் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவர் என். சீனிவாசனின் மருமகனும், ஏவிஎம் புரொடக்ஷன்ஸ் & என்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனருமான குருநாத் நேற்று இரவு மும்பை போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
தற்போது பரபரப்பாக நடைபெற்று வரும் ஐபிஎல் போட்டிகளில் ஸ்பாட் பிக்சிங் நடைபெற்றது தொடர்பாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணியைச் சேர்ந்த ஸ்ரீசாந்த், அஜித் சாண்டிலா, அங்கீத் சவான் ஆகிய கிரிக்கெட் வீரர்களும் மேலும் சில சூதாட்ட தரகர்களும் கைது செய்யப்பட்டனர்.
டில்லியின் கைதான தரகரான ரமேஷ் வியாஸ் மூலம் பிரபல நடிகரான விண்டு தாராசிங் கைது செய்யப்பட்டார். இவரிடம் மேற்கொண்டு நடத்தப்பட்ட விசாரணையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தொர்டர்புடைய குருநாத்துடன் பல முறை தொலைபேசியில் பேசியது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து குருநாத் மீது போலீசாரின் பார்வை விழுந்தது.
நேற்று மாலைக்குள் நேரில் வந்து ஆஜராகுமாறு குருநாத்துக்கு மும்பை போலீசார் சம்மன் அனுப்பினர். ஆனால், திங்கள் கிழமை வரை அதற்கு விலக்கு அளிக்குமாறு குருநாத் கேட்டிருந்தார். இதை ஏற்க போலீசார் மறுத்து விட்டனர். இந்நிலையில் நேற்று மாலை குருநாத் மும்பைக்கு விசாரணைக்காகச் சென்றார்.
அவரிடம் மூன்று மணி நேரத்துக்கும் மேலாக மும்பை குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர். மேட்ச் பிக்சிங்கில் குருநாத் ஈடுபட்டதற்கான ஆதாரங்கள் இருப்பதாக அவரிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. சென்னை கலந்து கொண்ட போட்டிகளிலும் மற்ற போட்டிகளிலும் அவர் பிக்சிங்கில் ஈடுபட்டதாகத் தெரிகிறது.
இதையடுத்து குருநாத்தை மும்பை போலீசார் கைது செய்தனர். அவர் மீது பண மோசடி, நம்பிக்கை மோசடி போன்ற பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் தொடர்புடைய குருநாத் கைது செய்யப்பட்டுள்ளதால், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய தலைவரான என்.சீனிவாசன் பதவி விலக வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது. ஆனால் அவர் பதவி விலக மறுத்து வருகிறார்.
இதனிடையே , நாளை நடைபெறுவதாக உள்ள ஐபிஎல் 6வது இறுதிப் போட்டியில் சென்னை அணி , மும்பை அணியை எதிர்த்து விளையாட உள்ளது.
இப்போது , இந்த இறுதிப் போட்டி நடக்குமா ? அல்லது சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு இதுவே இறுதிப் போட்டியாக இருக்குமா ? என்பது கேள்விக்குறியாக உள்ளது.