தமிழ்த் திரையுலக வரலாற்றில் பின்னணிப் பாடகர்கள் என்றால் அதில் முதன்மையானவர் டி.எம். சௌந்தரராஜன்தான்.
எம்ஜிஆர், சிவாஜி இருவரின் எண்ணற்ற சூப்பர் ஹிட் பாடல்களை அவர்களே பாடியது போல் பாடி பல இசை ரசிகர்களின் மனதில் நீங்காத இடத்தைப் பெற்றவர்.
1923ம் ஆண்டு மார்ச் 24ம் நாள் மதுரையில் சௌராஷ்டிரக் குடும்பத்தில் மீனாட்சி ஐயங்காரின் இரண்டாவது மகனாகப் பிறந்தவர். முறையாக இசைப் பயிற்சி பெற்ற இவரை அன்றைய பிரபல இயக்குனர் சுந்தர்ராவ் நட்கர்னி , ‘கிருஷ்ண விஜயம்’ என்ற படத்தில் ‘ராதே நீ என்னை விட்டுப் போகாதேடி’ என்ற பாடலை முதன் முதலாகப் பாட வைத்தார்.ஹ
அன்று ஆரம்பமான அவரது இசைப்பயணம் தொடர்ந்து பல வருடங்கள் ஆயிரக்கணக்கான இசை ரசிகர்களை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தியது.
தமிழ் மட்டுமல்லாது தெலுங்க, கன்னடம் உட்பல பல மொழிகளில் இதுவரை 10000க்கும் மேற்பட்ட திரைப்படப் பாடல்களையும், 25000க்கும் மேற்பட்ட பக்திப் பாடல்களையும் பாடியிருக்கிறார்.
பத்மஸ்ரீ உள்ளிட்ட எண்ணற்ற விருதுகளைப் பெற்றவர். தமிழ் சினிமாவில் , எம்ஜிஆர், சிவாஜி, என்டிஆர், எஸ்எஸ்ஆர், ராஜ்குமார், ஏ.நாகேஸ்வரராவ், ஜெமினி கணேசன், ஜெய்சங்கர், ரஜினிகாந்த், கமல்ஹாசன், உள்ளிட்ட பல நடிகர்களுக்காக பின்னணி பாடியுள்ளார்.
எஸ்.வி. வெங்கட்ராமன், எஸ்.எம். சுப்பையா நாயுடு முதல் இன்றைய ஏ.ஆர். ரகுமான் உட்பட பல இசையமைப்பாளர்களின் இசையில் பாடியுள்ளார்.
ஏறக்குறைய அனைத்து பாடகர், பாடகிகளுடன் இணைந்து பாடியுள்ளார்.
டிஎம்எஸ்ஸும், பி. சுசீலாவும் பாடியுள்ள எண்ணற்ற டூயட் பாடல்கள் இன்றும் ரசிகர்களால் அதிகம் ரசித்துக் கேட்கப்படும் பாடல்களாக உள்ளன. அது மட்டுமல்ல டிஎம்எஸ்ஸின் எண்ணற்ற தத்துவப் பாடல்களும், தனித்துப் பாடிய பாடல்களும் இன்றும் வானொலிகளிலும், தொலைக்காட்சிகளிலும் உலகமெங்கும் ஒலி,ஒளிபரபரப்பப்பட்டு வருகின்றன.
அவர் மறைந்தாலும் அவருடைய ‘வசீகரக் குரல்’ நம்மை விட்டு என்றும் மறையாது.