ஐபிஎல்: சச்சின் ஓய்வு அறிவிப்பு

sachin-tendulkarஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளிலிருந்து இந்த ஆண்டுடன் ஓய்வு பெறுவதாக சச்சின் நேற்று அறிவித்தார்.

ஐபிஎல் 6வது  போட்டிக்கான கோப்பையை வென்றதும் இந்த முடிவை சச்சின் அறிவித்தார்.

“ஓய்வு பெறுவதற்கான சரியான நேரம் இதுதான். எனக்கு வயது 40 ஆகி விட்டது. இதுதான் எனது கடைசி ஐபிஎல் போட்டி என்று இந்த ஆண்டிற்கான போட்டி ஆரம்பமாகும் முன்பே முடிவு செய்து விட்டேன்,” என டிவி பேட்டியில் சச்சின் தெரிவித்தார்.

2008ம் ஆண்டு ஐபிஎல் போட்டிகள் ஆரம்பமான போது மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக சச்சின் நியமிக்கப்பட்டார். அவரது தலைமையில் 2010ம் ஆண்டு மும்பை இந்தியன்ஸ் அணி இறுதிப் போட்டி வரை சென்று தோல்வியுற்றது.

கடந்த ஆண்டு மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் பதவியிலிருந்து சச்சின் விலகினார். கடந்த ஆண்டு ஹர்பஜன் சிங் கேப்டனாக நியமிக்கப்பட்டார். இந்த ஆண்டு முதலில் ரிக்கி பான்டிங்க கேப்டனாக செயல்பட்டார். அதன் பின் ரோகித் சர்மா கேப்டனாக செயல்பட்டார்.

கடந்த 13ம் தேதி சன் ரைசர்ஸுக்கு எதிரான போட்டியில் சிக்சர் அடிக்க முயன்று காயம் அடைந்தார் சச்சின். இதன் காரணமாக  குவாலிஃபையர், இறுதிப் போட்டிகளில் இந்த ஆண்டு அவர் ஆடவில்லை.

ஐபிஎல்லில் இதுவரை 78 போட்டிகளில் விளையாடியுள்ள சச்சின் 2334 ரன்களை எடுத்துள்ளார். இவற்றில் ஒரு சதமும் 13 அரை சதமும் அடங்கும்.

இந்த ஆண்டு தொடக்கத்தில் ஒரு நாள் போட்டிகளில் இருந்தும் சச்சின் ஓய்வு பெற்றார்.  சர்வதேச அளவில் ஒரே ஒரு 20 ஓவர் போட்டிகளில் மட்டுமே அவர் விளையாடியுள்ளார். இனி, இந்தியா சார்பாக டெஸ்ட் போட்டிகளில்  மட்டுமே அவர் விளையாடுவார். இது சச்சின் ரசிகர்களுக்கு மிகப் பெரிய ஏமாற்றம்தான். இனி அவரது அதிரடி ஆட்டத்தை பார்க்க முடியாது.

ஐபிஎல் போட்டிகளிலிருந்து இந்த ஆண்டுடன் ஏற்கெனேவே ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேப்டன் ராகுல் திராவிட், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி கேப்டன் கில்கிறிஸ்ட் ஆகியோர் ஓய்வு பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த ஆண்டு புதிதாக அனைத்து வீரர்களும் ஏலம் விடப்படுவதால் பல புதிய வீரர்கள் அனைத்து அணிகளிலும் இடம் பெறுவார்கள். இதன் மூலம் அடுத்த ஆண்டு ஐபிஎல் போட்டிகள் இன்னும் விறுவிறுப்பாக இருக்கும்.

Read Previous

‘இசை ராஜன்’ – டி.எம். சௌந்தரராஜன்

Read Next

தெலுங்குக்கும் போகும் ‘சிங்கம் 2’