ஷாரூக்கான், தீபிகா படுகோனே நடிக்க ரோஹித் ஷெட்டி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ சென்னை எக்ஸ்பிரஸ் ’ ஹிந்தி படத்தின் இசை வெளியீடு சமீபத்தில் நடைபெற்றது.
தமிழ்ப் பெண்ணான தீபிகா படுகோனேவை, ஹிந்திப் பையனான ஷாரூக்கான் காதலிப்பதுதான் படத்தின் கதை. இப்படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமான நாளன்றே வெளியான பத்திரிகை விளம்பரங்களைப் பார்த்து தமிழர்களை கேவலமாக சித்தரிக்கிறாரோ என்ற சந்தேகம் பலரிடையே எழுந்தது.
அது இப்போது மேலும் அதிகமாகும் விதத்தில் ஒரு நிகழ்வு நடைபெற்றுள்ளது.
இப்படத்தின் இசை வெளியீட்டு நிகழ்ச்சியின் புகைப்படங்களை பார்த்துக் கொண்டிருந்த போது நம் கண்ணில் பட்ட ஒரு புகைப்படத்தைப் பார்த்து அதிர்ச்சியடைந்தோம்.
இசை வெளியீட்டு நிகழ்ச்சிக்காக மேடையில் இருந்த விளம்பர பேனரில் ‘சென்னை சந்திப்பு’ என்ற வார்த்தை எப்படியெல்லாம் தவறுதலாக அச்சடிக்கப்பட்டுள்ளது என்பதை புகைப்படத்தில் பார்த்து நீங்கள் தெரிந்து கொள்ளலாம். ஆங்கிலம், ஹிந்தி ஆகிய மொழிகளில் சென்னை எக்ஸ்பிரஸ் என்பது சரியாகவே பதிவாகியுள்ளது. அப்படியிருக்க தமிழை மட்டும் இப்படி அச்சடிக்கக் காரணம் என்ன ?
தமிழ்ப் பெண்ணைப் பற்றிய படம் என்பதால் படத்தின் டைட்டிலுடன் நெருக்கமாக உள்ள ஒரு வார்த்தையை இவ்வளவு தவறுதலாகவா அச்சடிக்க வேண்டும்.
இத்தனைக்கும் இப்படத்திற்கு கதை எழுதியுள்ளவர் தமிழில் அஜித், விஜயகாந்த், பிரபு, சத்யராஜ், பிரபு தேவா போன்றோரை வைத்து பல படங்களை இயக்கிய தமிழ் இயக்குனர் கே. சுபாஷ்.
இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பவர் தமிழ் நடிகர் சத்யராஜ்.
இவர்கள் கண்களுக்குக் கூட இந்த தவறு படவில்லையா.
தமிழ் ஆர்வலர்களும், தமிழ்க் காவலர்களும் இதற்கு ஏதாவது குரல் கொடுக்கலாமே ?
இனியாவது, இம்மாதிரியான தவறுகள் நிகழாதவாறு ‘சென்னை எக்ஸ்பிரஸ்’ குழுவினர் நடந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கிறோம்.
