‘தலைவா’ படத்திற்கு பிரச்சனை வந்த போது ட்விட்டரில் கருத்து சொன்ன தனுஷ், இப்போது அவர் நடித்து நாளை வெளிவர இருக்கும் ‘நய்யாண்டி’ படத்தைப் பற்றி நஸ்ரியா பிரச்சனை ஏற்படுத்துவதைப் பற்றி எதுவுமே கருத்து சொல்லாமலிருக்கிறார்.
இது பத்திரிகையாளர்களிடையே ஒரு சந்தேகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
தொடர்ந்து டிவிட்டரில், படத்தின் வெளியீடு பற்றி ஸ்டேட்டஸ் போடுகிறாரே தவிர, தப்பித் தவறி , ஒரு வார்த்தை கூட அதைப் பற்றி போட மாட்டேன் என்கிறார்.
இயக்குனர் சற்குணம் கூட பத்திரிகை, தொலைக்காட்சிகளுக்கு அளிக்கும் பேட்டியில் ‘தனுஷ் ஸார்’ , ‘தனுஷ் ஸார்’ என்று சொல்லிக் கொண்டேயிருக்கிறார். அவரை விட எங்கள் படத்துக்கு வேறு எந்த விளம்பரமும் தேவையில்லை என்றும் கூட சொன்னார்.
ஆனால், நஸ்ரியாவுடன் ஜோடியாக நடித்த தனுஷ் இந்த பிரச்சனைப் பற்றி வாயே திறக்காதது பல சந்தேகங்களை ஏற்படுத்துகிறது.
இத்தனைக்கும் ‘நய்யாண்டி’ படத்தின் தயாரிப்பாளரான 5 ஸ்டார் கதிரேசன் இதற்கு முன் தயாரித்த ‘ஆடுகளம்’ படம்தான் தனுஷுக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருதை வாங்கிக் கொடுத்தது என்பது குறிப்பிடத்தக்கது.
ஒரு வேளை நஸ்ரியா சொன்னபடியே படத்துக்கு தடை கேட்டு நீதிமன்ற வாசல் ஏறினால்தான், வாயை திறப்பாரோ என்னமோ …..