அரசியலிலும், சினிமாவிலும் நிரந்தர எதிரியும் இல்லை, நிரந்தர நண்பனும் இல்லை என்று சொல்வார்கள்.
அது நேற்று நடந்த ‘ஜன்னல் ஓரம்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நன்றாகவே எதிரொலித்தது.
பல தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள், நடிகர்கள் சூர்யா, விஷால் மற்றும் பலர் கலந்து கொண்ட ஒரு பிரம்மாண்டமான விழாவாக நடைபெற்றது.
இயக்குனர் அமீரும் விழாவில் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியது, பத்திரிகையாளர்களுக்கு மட்டுமல்ல அனைவருக்கும் ஆனந்த அதிர்ச்சியாகவே இருந்தது.
‘பருத்தி வீரன்’ படத்தின் பிரச்சனையால் இயக்குனர் அமீர், சூர்யா, கார்த்தி, சிவகுமார் குடும்பத்திற்கு இடையே மிகப் பெரிய பிரச்சனை எழுந்தது. பல பஞ்சாயத்துக்கள், அறிக்கைகள் , பேட்டிகள் என அப்போது பரபரப்பாக பேசப்பட்ட விஷயம் அது.
காலம் அனைத்தையும் மாற்றி விடும் என்பார்கள். அது உண்மைதான். நேற்று இயக்குனர் அமீரும், சூர்யாவும் பேசிய பேச்சைக் கேட்டவர்கள் அதை ஆமோதிப்பார்கள்.
இயக்குனர் அமீரின் முதல் படமான ‘மௌனம் பேசியதே’ படத்தில் ஹீரோவாக நடித்தவர் சூர்யா. அதன் பிறகு அவர்களிருவரும் எந்த மேடையிலும் சந்தித்துக் கொண்டதேயில்லையாம்.
விழா ஆரம்பமானதும், இருவருமே அருகருகே அமர்ந்து ஆச்சரியத்தை ஏற்படுத்தி புகைப்படக்காரர்களை அவர்கள் பக்கம் திரும்ப வைத்தனர்.
அவர்களிருவது பேச்சும் இன்னும் ஆச்சரியப்பட வைத்தது.
விழாவில், முதலில் அமீர் என்ன பேசினார் என்பதைப் பார்ப்போம்.
“இந்த விழாவைப் பொறுத்த வரையில் கொஞ்சம் நன்றி அதிகமாக இருப்பதாகக் கருதுகிறேன். ஏன்னா, கரு. பழனியப்பன் மேடையில் முதன் முதலா ஏத்தினது அவருடைய முதல் பட தயாரிப்பாளர் தியாகராஜன் அவர்களை.
இந்த நன்றின்னு சொன்னவுடனே, நானும் ஒருத்தருக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கேன். திரு. சூர்யா அவர்களுக்கு நன்றி சொல்ல வேண்டிய கட்டாயம். நான் இன்றைக்கு ஒரு இயக்குனராக, தயாரிப்பாளராக இந்த மேடையில நிக்கறன்னா அதுக்குக் காரணம் சூர்யா.
என்னை முதன் முதலா இயக்குனர்னு நம்புனது சூர்யாதான். நான், இதை கிட்டத்தட்ட 12 வருஷம் கழிச்சி சொல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டிருக்குன்னா, என்னுடைய முதல் படம் ‘மௌனம் பேசியதே’ முடிஞ்சதுக்கப்புறம் நானும், அவரும் மேடைகள்ல சந்திக்கவேயில்லை என்பதுதான் உண்மை.
எங்க இரண்டு பேருக்குமிடையில வழக்கமான பேச்சாவும், சந்திப்பாவும் இருந்ததேயில்லை.
தமிழ்நாட்டுல ரஜினிகாந்த் சாருக்கு அப்புறம் மக்கள் குடும்பத்தோட போய் பார்க்கற படம் சூர்யாவோட படம்தான். அதை நானே பார்த்திருக்கிறேன். அதை சூர்யா எந்த அளவுக்கு கவனிச்சிருக்காருன்னு தெரியலை.
ஆனால், அவரு என்னடான்னா ‘சிங்கம்’, ‘சிங்கம் 2’ன்னு முழுக்க முழுக்க ஆக்ஷன் படங்கள்ல நடிச்சிட்டிருக்காரு. என்னைப் பொறுத்தவரைக்கும் நான் சூர்யாவை எப்படி பார்க்கிறன்னா அவரை ஒரு ‘அமீர்கான்’ மாதிரி பார்க்கிறேன்.
ஏன்னா, அமீர்கான் பண்ற படங்கள் மாதிரி இங்க சூர்யாவாலதான் பண்ண முடியும். அதனால, என்னுடைய முதல் பட கதாநாயகன் கிட்ட, என் நண்பன் கிட்ட நான் கேட்டுக்கிறது என்னன்னா, நீங்க குடும்பக் கதைகள்லயும் நடிக்கணும். இவ்வளவு நான் சொன்னதும், உடனே என் படத்துல அவர் நடிக்கிறாரான்னு கேட்டுடாதீங்க.
அதை மாதிரி படங்கள் பார்க்கிறதுக்கு மக்கள் தயாரா இருக்கிறாங்க. கொடுக்கிறதுக்குத்தான் ஆளில்லை.
என்கிட்ட கூட கரு. பழனியப்பன் ‘பாண்டிய வம்சம்’ னு ஒரு கதை சொல்லியிருக்காரு. அற்புதமான கதை, அம்மாதிரியான கதைகள்ல சூர்யா நடிக்கணும். கொஞ்சம் டைம் இருந்தா கேளுங்க சூர்யா,” என்றார் அமீர்.
அதன் பின்னர் பேசிய சூர்யா, “கரு. பழனியப்பன் சார் சொல்ற கதையை நான் கேட்கிறேன்,” என இயக்குனர் அமீருக்கு பதிலளித்தார்.
தொடர்ந்து பேசிய சூர்யா, “ஆக்ஷன் படங்கள் தாண்டி நிச்சயமா யோசிச்ட்டிருக்கேன். ஒரு படம் முடிக்க ஒரு வருடம் ஆகிடுது. ‘மாற்றான், ஏழாம் அறிவு’ வேற மாதிரி யோசிச்சிதான் பண்ணன். அமீர்கள் அவரக்ள் சொன்னது ரொம்ப சந்தோஷமா இருந்தது.
இப்ப வரைக்கும் மௌனம் பேசியதே எல்லாரும் சொல்லிட்டிருககாங்க. அதை மாதிரி ஒரு படம் பண்ண முடியுமான்னு எல்லாரும கேட்டுட்டிருக்காங்க…எனக்கு தெரியலை, ஏதாவது செய்ய முடியும்னு நானும் விரும்பறேன், ” என்றார்.
இயக்குனர் அமீர், சூர்யா இருவரின் இந்த பேச்சு ‘மௌனம் பேசியதே’ படத்திற்குப் பிறகு இருவரும் மீண்டும் இணைவதற்கு ஒரு வாய்ப்பாக இருக்குமா ?
விழாவில் கௌதம் மேனனுடனும் மீண்டும் இணைந்து படம் செய்வேன் என்றார் சூர்யா.
இப்போது சூர்யா, அமீருடன் மீண்டும் இணைய வாய்ப்பிருக்கலாம் போலவும் தோன்றுகிறது.
தமிழ்த் திரையுலகம் ரொம்பவே பக்குவப்படுவது போலத்தான் தோன்றுகிறது. நிஜமாகவே அப்படி நடந்தால் மகிழ்ச்சியே….