நடிகர், இயக்குனர், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர், சங்க நிர்வாகி இப்படி பலதுறைகளில் தனி முத்திரை பதித்து வருபவர் நடிகர் அபிஷேக்.
இவர் நடித்த முதல்படம் ‘மோகமுள்’ அந்த முதல் படமே தேசிய விருதை தட்டிச் சென்றது.பெரிய திரையில் கிடைத்த கதாபாத்திரங்களில் தனக்கென தனிமுத்திரை பதித்தவர். சின்னத்திரையில் அபிஷேக் ஏற்காத வேடங்களே இல்லை எனலாம். அந்தளவுக்கு சின்னத்திரையிலும் தனக்கென தனிமுத்திரை பதித்தவர்.
சின்னத்திரை மூலம் மாநில விருது, கலைமாமணி விருது என பல விருதுகளை தனது நடிப்பின் மூலம் பெற்றவர். வெள்ளித்திரையிலும் தான் நடிக்கும் படங்களில் தனக்கு வழங்கப்படும் கதாபாத்திரங்கள் மூலம் ரசிகர்கள் மனசில் தனக்கென தனி இடத்தை பிடித்திருந்தார்.
சின்னத்திரையில் பிசியாக இருந்த அபிஷேக் திடீரென அமைதியானார். 8 மாத அமைதியில் வெள்ளித்திரையில் பல அதிரடிகளை நடத்தியிருக்கிறார். அதனால்தான் சில மாதங்களாக அபிஷேக்கை சின்னத்திரையில் பார்க்க முடியவில்லையாம்.
வெள்ளித்திரையில் பிசியான அபிஷேக் பல படங்களில் நடித்து முடித்திருக்கிறார். அதில் அபிஷேக் நடிப்பில் விரைவில் ரிலீசுக்கு காத்திருக்கும் படம் ‘தலைவன்’. இதில் இவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.
பிரபல இயக்குனர் ராம்கோபால்வர்மா இயக்கியுள்ள ‘நான்தாண்டா’ படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கிறார். இந்தபடமும் ரிலீசுக்கு ரெடியாகி வருகிறது. ஒய்நாட் மூவீஸ் சார்பில் பாலாஜி இயக்கும் புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியிருக்கிறார். இசையமைப்பாளர் செல்வகணேஷ் தயாரிக்கும் புதுப்படம் ‘கோவில் ஓட்டம்’ இந்த படத்தை ‘நிர்ணயம்’ இயக்குனர் ஸ்ரீசரவணன் இயக்குகிறார். இதிலும் அபிஷேக் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.
இது தவிர அனுராக் காஷ்யப்பின் இந்திப் படம் உட்பட பல படங்களில் ஒப்பந்தம் ஆகி வெள்ளித்திரையில் பரபரப்பாக ஓடிக் கொண்டிருக்கிறார். தனது நடிப்புத்துறையிலும் முத்திரை பதிக்கும் தனது பாணியை விடாமல் நல்ல கதையம்சம் கொண்ட படங்களில் நல்ல கதாபாத்திரம் தேடிவந்தால் மறுப்பேதும் சொல்லாமல் நடிக்க ஒப்புக் கொள்கிறார்.
சமீபத்திய சூப்பர் ஹிட் படமான ‘தில்லுமுல்லு’வை இயக்கிய பத்ரி அடுத்து இயக்கும் பிரமாண்ட படம் ‘ஆடாம ஜெயிச்சோமடா’. இந்த படத்தில் அபிஷேக் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.