‘கோச்சடையான்’ – கோலாகல இசை விழா…

rajinikanth at kochadaiyaan audio launch

இதோ…அதோ…என்று ரசிகர்களை ஏங்க வைத்த ‘கோச்சடையான்’ படத்தின் இசை வெளியீடு நேற்று ஆரவாரமாக, ஆர்ப்பாட்டமாக, அரங்கு அதிர நடந்தேறி விட்டது.

எவ்வளவோ இசை வெளியீட்டு விழாவிற்கு சென்னையிலுள்ள, சத்யம் திரையரங்கிற்கு சென்றிருக்கிறோம். ரஜினிகாந்த் ஒரு சில பட விழாக்களில் கலந்து கொள்ள அதே திரையரங்கிற்கும் வந்திருக்கிறார். அப்போதெல்லாம் காண முடியாத ஒரு ஆரவாரத்தை நேற்று காண முடிந்தது.

சத்யம் திரையரங்கை நெருங்க நெருங்க ரசிகர்கள் கூட்டம், நெருக்கியடித்துக் கொண்டே இருந்தது. திரையரங்கைச் சுற்றி அக்கம் பக்கத்து மாடிகளில் கூட ரஜினியையும் மற்ற நட்சத்திரங்களையும் காண அப்படி ஒரு ஆர்வம்.

ரசிகர்களின் ஆர்வத்துக்கும், அன்புக்கும் என்ன ஒரு கைமாறு செய்ய முடியும். அவர்களை மகிழ்விக்க வைப்பதே ஒரு கைமாறுதானே. ஆனாலும், ரஜினிகாந்த் என்ற மனிதர் மீது சினிமாவையும் தாண்டி நமது ரசிகர்கள் வைத்திருக்கும் அன்பு அபரிமிதமானது.

அந்த அன்பின் வெளிப்பாடு திரையரங்கிற்குள் வெளிப்பட்டதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை. அவரது பெயரை யார் சொன்னாலும் பாலகனியின் அமர்ந்திருந்த ரஜினி ரசிகர்களிடம் அப்படி ஒரு ஆரவாரம். இப்படி ஒரு வரவேற்பை நேரடியாகக் கண்டு ஷாரூக் கான் அதிகமாகவே வியந்திருக்க வேண்டும்.

‘கோச்சடையான்’ படத்தின் தமிழ், தெலுங்கு இசையை வந்திருந்த சிறப்பு விருந்தினர்கள் வெளியிட்டு, சிறப்புரை ஆற்றினார்கள்.

ரஜினிகாந்த், தீபிகா படுகோனே, ஷாரூக்கான், வைரமுத்து, இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான், இயக்குனர் கே. பாலசந்தர், எஸ்.பி. முத்துராமன், ஷங்கர், தயாரிப்பாளர் ஏவி.எம். சரவணன், ஜாக்கி ஷராப், சரத்குமார் படத்தின் தயாரிப்பாளர் டாக்டர் முரளி மனோகர்,  ஆகியோர் சிறப்புரை ஆற்றினார்கள்.

அவர்கள் பேச்சிலிருந்து சில வரிகள்…

ரஜினிகாந்த் – “ஆண்டவன் புண்ணியத்துல நிறைய பணம், புகழ் சம்பாதிச்சிருக்கிறேன், எல்லாமே தமிழ்நாட்டு மக்கள் கொடுத்ததுதான்”.

“கோச்சடையான்’ படத்தின் வெற்றி விழாவில் ரசிகர்கள் எல்லோரையும் சந்திப்பேன். ஆண்டவன் புண்ணியத்துல அது நடக்கணும். நடக்கும்”.

“பெண்கள் தங்கள் குடும்பங்களுக்கு முன்னுரிமை கொடுத்தால்தான் நல்ல குடிமக்களை உருவாக்க முடியும்”.

ஷாரூக்கான் – “நான், ரஜினிகாந்தின் தீவிரமான ரசிகன். அவருக்காகவே இந்த விழாவிற்கு வந்திருக்கிறேன். தமிழ்ப் படங்கள் நாட்டுக்கு பெருமை சேர்க்கின்றன. இங்கு வரும் போதெல்லாம் தமிழ் மக்கள் என் மீது அன்பு செலுத்துகிறார்கள்”.

தீபிகா படுகோனே – “ஒரு வீட்டிலிருந்து இன்னொரு வீட்டிற்கு வந்த உணர்வை ஏற்படுத்திக் கொடுத்த ரஜினி சாருக்கு நன்றி. என்னை ஒரு மகள் போல பார்த்துக் கொண்டார்”.

வைரமுத்து – “ரஜினிகாந்த் இந்த படத்தின் மூலம் கருப்பு வெள்ளை, வண்ணம், முப்பரிமாணம், சலனப் பதிவு தொழில்நுட்பம் (Motion Capturing Technique)  என்ற நான்கு நிலைகளையும் தொட்டவர் என்ற பெருமை அவருக்குக் கிடைத்திருக்கிறது.

இயக்குனர் எஸ்.பி. முத்துராமன் – “கோச்சடையான்’ படத்தின் வெற்றி விழாவை ரசிகர்களின் மாநில மாநாடாக நடத்தி, ரசிகர்கள் அனைவரையும் ரஜினிகாந்த் சந்திக்க வேண்டும்”.

திரையரங்கில் திரையிடப்பட்ட ‘கோச்சடையான்’ புதிய டிரைலரையும், ரஜினிகாந்த் ஆடிய ருத்ர தாண்டவம் நடனக் காட்சிகளையும் திரையிட்டார்கள். அதைப் பார்த்த ரசிகர்களின் ஆரவராமும், கைதட்டலும் அடங்க வெகுநேரமாகியது.

விழாவில் லதா ரஜினிகாந்த், ஐஸ்வர்யா தனுஷ், நடிகர் தனுஷ், பிரபு, நாசர், ஆதி,  ஷோபனா, உள்ளிட்டா ஏராளமான திரையுலகப் பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

‘கோச்சடையான்’ இசை வெளியீட்டு விழாவிற்கே இத்தனை கோலாகலம் என்றால் பட வெளியீடு அன்றே வெற்றி விழாவையும் சேர்த்து நடத்தி விடுவார்களோ….?

Read Previous

இயக்குனர் மீது நடிகை குற்றச்சாட்டு… பின்னணி என்ன ?

Read Next

தமிழன் முதல்வராக வேண்டும் – ரஜினிகாந்த் கருத்து

Most Popular