தமிழ்த் திரைப்படங்களில் முத்தக் காட்சிகள் தேவையா, இல்லையா என்பது நீண்ட காலமாக ஒரு விவாதத்தில் இருந்து வரும் ஒரு விஷயம்.
சமீபத்தில் விஷால், லட்சுமி மேனன் சம்பந்தப்பட்ட ‘நான் சிகப்பு மனிதன்’ படத்தில் இடம் பெற்றுள்ள முத்தக் காட்சி ஒரு விவாதத்தை உருவாக்கியுள்ளது.
அந்த காலத்தை விட இந்த காலத்தில் அதை கண்டிப்பாக எதிர்த்தே ஆக வேண்டிய கட்டாயத்தில்தான் நாம் இருக்கிறோம்.
சமீப காலமாக, திரைப்படங்களில் ஆடைகளை அணிவது முதற் கொண்டு, காட்சிகளைப் படமாக்குவது வரை ஆபாசம் கொங்சம் தூக்கலாகவே இருக்கிறது என பெரும்பான்மையானோர் குற்றம் சாட்டுகின்றனர்.
அதிலும், தற்போதெல்லாம் இளைய தலைமுறையினர் ஒரு படம் சம்பந்தப்பட்ட காட்சிகளையோ, பாடல்களையோ, அவர்களில் கைகளில் இருக்கும் கைபேசியில் கூட பார்க்கும் வசதி வந்துவிட்டது.
கதைக்குத் தேவையான விஷயம் என்று கூறி சம்பந்தப்பட்டவர்கள் சமாதனம் கூறுவது, இது போன்று தொடர்ந்து பலர் உருவாக்குவதற்கு காரணமாகவும் அமைந்துவிடும்.
முற்றிலும் வேறு விதமான படங்களில் இடம் பெறும் அது போன்ற முத்தக் காட்சிகளை யாரும் எதிர்க்கப் போவதில்லை. ஆனால், மிகவும் தெரிந்த ஒரு ஹீரோவோ, அல்லது ஹீரோயினோ இது போன்ற காட்சிகளில் நடிக்கும் போது அது அனைவரையும் எளிதில் சென்றடைந்துவிடும்.
குடும்பப் பாங்கான கதைகளில், இதமான காதல் கதைகளில் இப்படிப்பட்ட காட்சிகள் இடம் பெறுவது தவிர்க்கப்பட வேண்டிய ஒன்றுதான்.
80, 90களில் இருந்து கற்பழிப்புக் காட்சிகள் தற்போது வரும் படங்களில் இருப்பதில்லை. அவற்றை பலரும் தவிர்த்து விட்டனர். ஆனால், முத்தக் காட்சியை இலை மறை காய் மறையாக காட்டினால் கூட பரவாயில்லை. ஆனால், நேரடியாக காட்டுவதின் மூலம் அது இன்றைய தலைமுறையினரை நிச்சயம் பாதிக்கும் என்று சொல்லலாம்.
கொஞ்சம் சமூகப் பொறுப்புடன் அனைவரும் நடந்து கொண்டால் நல்லது.