மான் கராத்தே – விமர்சனம்

maan karate audio launch news சினிமா என்பதை ஒரு கற்பனை வடிவம்தான். ஆனால், அதிலும் யதார்த்தமான கதைகளைச் சொல்லி நமது வாழ்க்கையை பிரதிபலிக்கும் படங்களும் உண்டு. அதே சமயம், இப்படியும் நடக்குமா என ஆச்சரியப்பட வைக்கும் கற்பனைக்கு கற்பனையான விஷயங்களைச் சொல்லும் படங்களும் உண்டு. தமிழ் சினிமா இப்போது கொஞ்சம் கொஞ்சமாக அந்த ‘ஃபேன்டஸி’யை நோக்கி பயணிக்க ஆரம்பித்திருக்கிறது. இருந்தாலும் அதில் யதார்த்தமான கதையையும் சம்பவங்களையும் சேர்த்து ரசிகர்களைக் கவர்வது என்பது சாதாரண விஷயம் கிடையாது. அப்படிப்பட்ட ஒரு படம்தான் ‘மான் கராத்தே’. அறிமுக இயக்குனர் திருக்குமரன் பிரபலமான இயக்குனரான ஏ.ஆர்.முருகதாசின் கதையை படமாக்கியிருக்கிறார். சமீப காலமாக தமிழ்ப் படங்களை முருகதாஸ் பார்ப்பதில்லை என்பது புரிகிறது. இல்லையென்றால், அதே ‘நீச்சல்’ குளத்தில் மீண்டும் ‘எதிர் நீச்சல்’ அடித்திருக்க மாட்டார். ஐடி நிறுவனத்தில் வேலைபார்க்கும் ஐந்து பேர், மூன்று ஆண்கள், இரண்டு பெண்கள் ஒரு மலைப்பிரதேசத்திற்கு சுற்றுலா செல்கிறாக்ரள். அங்கு சித்தர் ஒருவரை சந்தித்து ஆளுக்கொரு வரம் கேட்கிறார்கள். ஐந்து பேரில் ஒருவரான சதீஷ், ஆயுத பூஜை மறுநாளன்று வெளிவர உள்ள ‘தினத்தந்தி’ பேப்பரைக் கேட்கிறார். ஆயுத பூஜை மறுநாள் பொதுவாக எந்த பேப்பரும் வராது. ஆனாலும், அந்த சித்தர்  பேப்பரை வரவைத்துக் காட்டிவிட்டு காணாமல் போகிறார். அந்த பேப்பரை எடுத்துப் படித்தால் நண்பர்கள் வேலை பார்க்கும் கம்பெனி ஸ்டிரைக் முடிந்து மீண்டும் திறக்கப்படுகிறது என்ற செய்தி இருக்கிறது. அப்படியானால், அவர்களது கம்பெனி மறுநாள் முதல் மூடப்பட உள்ளதாக அர்த்தம். அதன்படியே அவர்களது கம்பெனியும் மூடப்படுகிறது. தொடந்து சில விஷயங்கள் பேப்பரில் உள்ளது போல் நடக்க அவர்கள் சித்தர் சக்தி வாய்ந்தவர் என்பதை நம்புகிறார்கள். அதன் பின் அந்த பேப்பரில் உள்ள அனைத்து செய்திகளையும் அலசிப் பார்க்கிறார்கள். அதில் உள்ள ஒரு செய்தியில் ‘தமிழ்நாடு அளவில் நடக்கும் பாக்ஸிங்’ போட்டியில் ராயபுரம் பீட்டர் வெற்றி பெற்றதாகவும், அவர் வெற்றி பெறுவதற்குக் காரணம் ஐடி நண்பர்கள் ஐந்து பேர் எனவும் செய்தி உள்ளதைக் கண்டு அதிர்ச்சியடைகிறார்கள். அந்த ராயபுரம் பீட்டர்தான் சிவகார்த்திகேயன். அவரைச் சென்று பார்த்தால் அவருக்கும் பாக்சிங்கிற்கும் சம்பந்தமேயில்லை என்று தெரிகிறது. இருந்தாலும் பேப்பர் செய்தியை நம்பி, சிவகார்த்திகேயனை எப்படியோ சம்மதிக்க வைத்து பாக்சிங் போட்டியில் கலந்து கொள்ள வைக்கிறார்கள். இதனிடையே, சிவாவுக்கும் ஹன்சிகாவுக்கும் காதல் அரும்புகிறது. கடைசியில் சிவகார்த்திகேயன் போட்டியில் ஜெயித்தாரா, பேப்பரில்  வந்த செய்தி உண்மைதானா என்பதுதான் படத்தின் மீதி கதை. தனக்கு இதுதான் சரி என நினைத்து சரியான கதாபாத்திரங்களை தேர்வு செய்வதிலேயே முதல் வெற்றியைப் பெற்று விடுகிறார் சிவகார்த்திகேயன். மீதி வெற்றியை அவருடைய நகைச்சுவை நடிப்பும், அப்பாவி முகமும் கொடுத்து விடுகிறது. பாக்சிங்கே தெரியாதவர், காதலுக்காக பாக்சிங் கற்க ஆவலுடன் இறங்குவது எல்லாம் சரிதான். ஆனால், வெற்றி வீரனாக எப்படியும் வருவார் எனத் தெரிந்தும் எதிரியின் காலைப் பிடித்து கெஞ்சுவதெல்லாம் டூ மச்சாகத் தெரிகிறது. இருந்தாலும் தியேட்டரில் ‘உச்’ கொட்டுகிறார்கள். மற்றபடி, நடனத்திலும், காதலிலும் அசத்தல் அதிகம்தான். ஒரு வேளை ஹன்சிகா ஜோடி என்பதால் கூடுதல் கொண்டாட்டமோ என்னமோ ? சிவகார்த்திகேயன் சொல்வது போலவே ‘நெய் குழந்தையாக’ இருக்கிறார் ஹன்சிகா. எங்க இருந்துதான் வார்த்தைகளைப் பிடிக்கிறாங்களோ ? . சாதாரண நெய் குழந்தை இல்லை, வளர்ந்த நெய் குழந்தை. ஒரு படத்துல ஒரு அழகான ஹீரோயின் கிட்ட இருந்து நாம என்னலாம் எதிர்பார்ப்பமோ அது எல்லாத்தையுமே ஹன்சிகா ‘ஹண்ட்ரட் பர்சென்ட்’ செங்சிருக்காங்க. கிளைமாக்சில் சிவா கடுமையாக அடி வாங்குவதைப் பார்த்து அழவும் வைத்திருக்கிறார்கள். அழகுப் புயல் ஹன்சிகாவை அழ வைத்த இயக்குனருக்கு என்ன தண்டனை தருவது ? வம்சி கிருஷ்ணா, தமிழ் சினிமா ஹீரோக்களிடம் தோற்பதற்கென்ற தயாராக இருக்கும் மற்றுமொரு நடிகர். ஆனாலும், அதிலும் அவர்கள் மீது எந்த அளவுக்கு வெறுப்பு வர வைக்க முடியுமோ, அந்த அளவுக்கு பெயரை வாங்கி விடுவார்கள். வம்சியும் அதற்கு விதிவிலக்கல்ல. கிளைமாக்சில் ஹன்சிகாவை ‘அதற்கு’ அழைப்பதெல்லாம் தமிழ் சினிமாவில் பார்த்துப் பார்த்து அலுத்துப் போன ஒரு விஷயம். கொஞ்சம் புதுசா யோசிங்க பாஸ். மற்ற நட்சத்திரங்கள் வரிசையில் முதலில் இடம் பிடிப்பவர் சதீஷ். ஐடி நண்பர்கள் ஐந்து பேரின் தலைவர் இவர்தான். இவரைத் தவிர அவருடன் இருக்கும் இரண்டு பெண் தோழிகள் ‘பளிச்’ எனத் தெரிகிறார்கள். ஷாயாஜி ஷிண்டே ஒரு சில காட்சிகளில் வந்து போகிறார். சூரி, சென்டிமென்ட்டுக்காக வந்து சிரிக்க வைக்க முயற்சி செய்துவிட்டுப் போகிறார். படத்தின் மிகப் பெரிய ஹைலைட் அனிருத்தின் இசை. அனைத்துப் பாடல்களுமே இந்த ஆண்டின் சூப்பர் ஹிட் பாடல்கள் வரிசையில் இடம் பெற்று விடும். ‘விழியில்….’ பாடலும், ‘டார்லிங்… ’ பாடலும் நமது சாய்ஸ். அனிருத்திற் அடுத்து ஒளிப்பதிவாளர் சுகுமார். படத்திற்காக கடுமையாக உழைத்திருக்கிறார். ஆரம்பக் காட்சியிலேயே அழகுணர்வுடன் ஆரம்பமாகும் படம் காட்சிக்குக் காட்சி கூடுதல் அழகையே காட்டுகிறது. குறிப்பாக, பாடல்களில் தனி கவனம் செலுத்தியிருக்கிறார். தமிழ் ரசிகர்களுக்குப் பழக்கப்பட்ட காட்சிகளை வைப்பதைத் தவிர்த்து, கொஞ்சம் புதிதாக யோசித்திருக்கலாம். கிளைமாக்ஸ் எப்படியும் இப்படித்தான் வரப் போகிறது என்பது முன் கூட்டியே ‘பேப்பரிலேயே’ தெரிந்து விடுவதால் அதை இன்னும் முடிந்த அளவிற்கு சுவாரசியப்படுத்தியிருக்கலாம். எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் தியேட்டருக்குச் செல்பவர்களுக்கு 2 மணி நேரம் 34 நிமிடம் நல்ல ‘என்டர்டெய்ன்மென்ட்’ ஆக இருக்கும்.  

Read Previous

அஜித் புதிய படத்தில் இரண்டு ஹீரோயின்கள் ?

Read Next

சமூகத்தை சீரழிக்கும் முத்தக் காட்சிகள்…

Most Popular