மறைந்த இயக்குனர் பாலுமகேந்திரா இயக்கிய கடைசி படமான ‘தலைமுறைகள்’ படத்திற்கு சென்ற ஆண்டிற்கான ‘சிறந்த தேசிய ஒருமைப்பாட்டுத் திரைப்படம்’ என்ற தேசிய விருதைப் பெற்றது.
டெல்லியில் நடைபெற்ற விழாவில் படத்தின் தயாரிப்பாளர் சசிகுமார், இயக்குனர் பாலுமகேந்திரா சார்பில் அவருடைய பேரன் ஷ்ரேயாஸ் ஆகியோர் அந்த விருதைப் பெற்றனர்.
தேசிய விருதைக் கொடுத்த இயக்குனர் பாலுமகேந்திராவுக்கு நன்றி கூறும் விதத்திலும், அவரை நினைவு படுத்தும் விதத்திலும் நேற்று ‘தலைமுறைகள்’ படக்குழுவினர் பத்திரிகையாளர்களைச் சந்தித்தனர்.
அப்போது பேசிய படத்தின் தயாரிப்பாளர் சசிகுமார்,
‘‘தலைமுறைகள்’ படத்துக்கு தேசிய விருது கெடைச்சதுல எவ்வளவு சந்தோஷம் இருக்கோ, அதைவிட மிகப் பெரிய வருத்தமும் இருக்கு. ஏன்னா இந்த ‘தலைமுறைகள்’ படத்தை அவ்வளவு தூரத்துக்கு அவர் நேசிச்சி இயக்கின பாலுமகேந்திரா சார் இப்ப இல்லையேங்கிற வருத்தம் எங்க எல்லாருக்குமே இருக்கு.
நாம எல்லாரும் பாலுமகேந்திரா மாதிரியான நல்ல கிரியேட்டர்களை வயசாகிப் போச்சுன்னு ஒதுக்கி வச்சிடுறோம். ஆனா ஒரு கிரியேட்டருக்கு எப்போதுமே வயசு ஆகாது, அவங்க எப்போ வேணாலும் படம் எடுக்கலாம், எந்த வயசிலேயும் படம் எடுக்கலாம்ங்கிறதை நிரூபிச்சிட்டுப் போனவர் பாலுமகேந்திரா சார்.
அதனால தான் நான் சொல்றேன் இப்ப இருக்கிற தலைமுறை போன தலைமுறையை கௌரவிக்கணும். நம்ம கூட அப்படிப்பட்டவங்க இன்னும் நெறைய பேர் இருக்காங்க. அதையெல்லாம் நாம சேர்ந்து செய்யணும்.
இந்த விருதை அவர் சார்பா நானும், அவரோட பேரனும் சேர்ந்து மேடையில வாங்கினோம். விருதை வாங்கும் போது ஒரே ஒரு விஷயம் தான் என் மனசுக்குள்ள திரும்ப திரும்ப வந்துட்டுப் போச்சு.
அது என்னன்னா படத்தோட கிளைமாக்ஸ்ல அவர் இறந்து போன பிறகு அவரோட பேரன் தான் அவர் சார்பா விருதை மேடையில வாங்குவான். அதேமாதிரி அவரோட நிஜ வாழ்க்கையிலும் இந்த தேசிய விருதை அவரோட பேரன் தான் மேடையில வாங்கினார். அதுவும் ஒரு நெகிழ்வான விஷயமா எனக்குள்ள இருந்துச்சு.
இந்த விருதை அவர் எனக்கு பரிசாக் குடுத்துட்டு போனது மட்டுமில்லாம தமிழர்களுக்கும், தமிழக மக்களுக்கும் சமர்ப்பணம் பண்ணிட்டு போயிருக்காரு. அதனால் அவருக்கு என்னோட நன்றியை தெரிவிச்சிக்கிறேன்,” என நெகிழ்ச்சியுடன் பேசினார் சசிகுமார்.
நிகழ்ச்சியில் படத்தில் நடித்த சசிகுமார், ரம்யா, வினோதினி, மாஸ்டர் கார்த்திக், ரயில் ரவி, பாலுமகேந்திராவின் உதவியாளர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் மற்றும் பாலுமகேந்திராவின் பேரன் ஷ்ரேயாஸ் ஆகியோரும் கலந்து கொண்டனர். படக்குழுவினர் மற்றும் பத்திரிகையாளர்கள் இயக்குனர் பாலுமகேந்திராவின் படத்திற்கு மெழுகுவர்த்தி ஏற்றி வைத்து அஞ்சலி செலுத்தினர்.
