‘வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்’ திரைப்படத்தின் ஓபனிங் வரவேற்பு யாருக்கு மகிழ்ச்சியைக் கொடுத்ததோ இல்லையோ, அந்த படத்தில் நாயகியாக நடித்துள்ள ஆஷ்னா சவேரி-க்கு மிகப் பெரிய மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அவருடைய செல்போனில் வரும் எஸ்எம்எஸ்-களும், அழைப்பும் படத்தைப் பற்றியும் அவரைப் பற்றியும் பாராட்டித் தள்ளுவதால் திக்குமுக்காடிப் போயிருக்கிறாராம் ஆஷ்னா.
சரி, யார் இந்த ஆஷ்னா சவேரி. விளம்பரத் துறையில் ஆர்வமுள்ள இவர் ஷாரூக் கானுடன் இணைந்து ஒரு விளம்பரத்தில் பணியாற்றியுள்ளாராம்.
ஷாருக்கைக் பற்றி பேசினாலே துள்ளி குதிக்கும் ஆஷ்னா, தன்னுடைய கதாநாயகன் சந்தானத்தை பற்றி பேசும் போதும் உற்சாகமாகிறார்.
ஆஷ்னாவுக்கு இதுவே முதல் திரைப்படம். ‘பெல்லி’ வகை டான்சை முறைப்படி பயின்றிருக்கிறார்.
”சந்தானம் அவர்களோட டைமிங் சென்ஸ் பிரமிப்புக்குரியது. படப்பிடிப்பில் அவர் காட்டும் தொழில் பக்தி, அவருடைய வெற்றிக்கு மிக முக்கியக் காரணம்.
நான் சினிமாவில் நடிக்க வருவேன் என்பதையோ , அதிலும் தமிழ் சினிமாவில் நடிக்க வருவேன் என்பதையோ என்னால் இன்னமும் நம்ப முடிய வில்லை.த மிழ் ரசிகர்கள் எப்பவுமே திறமையான புது முகங்களை ஆதரிப்பார்கள் என்பது தெரியும்.
இந்த அன்புக்கும் ஆதரவுக்கும் நான் என்றென்றும் அடிமை. நான் இனிமேல் நடிக்கும் படங்கள் ‘வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்’ படத்தின் வெற்றிக்கு மரியாதை செய்வது போல் தான் இருக்கும். இந்த படத்தில் நடிக்க வாய்பளித்த தயாரிப்பாளர்கள் பி வி பி சினிமாஸ், இயக்குனர் ஸ்ரீநாத், மற்றும் சந்தானம் ஆகியோருக்கு மிகவும் கடமைப்பட்டுள்ளேன்.
இப்போது ‘வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்’ படக் குழுவினரோடு தமிழகம் முழுவதும் உள்ள திரை அரங்குகளில் ரசிகர்களோடு படம் பார்க்க உள்ளேன். அதோடு ரசிகர்களை நேரிலும் சந்திக்கப் போகிறேன்,” என மகிழ்ச்சி பொங்கக் கூறுகிறார்.