வித்தியாசமான, சுவாரசியமான நிகழ்ச்சிகளை வழங்கி இளைஞர்களைக் கவர்ந்த ஒரு தொலைக்காட்சியாக விளங்கி வருவது விஜய் டிவி.
சூப்பர் சிங்கர், நீயா நானா, போன்ற பல நிகழ்ச்சிகளை புதுமையாக வழங்கி ரசிகர்களின் மனதில் இடம் பிடித்து விட்டார்கள். அதனால்தானோ என்னமோ, தாங்கள் எதை செய்தாலும் ரசிகர்கள் ஏற்றுக் கொள்வார்கள் என்ற மனோபாவத்துடன் ‘விஜய் விருதுகள்’ என்ற பொருத்தமற்ற விருதுகளை வழங்கியிருக்கிறார்கள்.
இந்த ஆண்டு விஜய் விருதுகள் வழங்கும் விழா கடந்த சனிக்கிழமையன்று சென்னை, நேரு ஸ்டேடியத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. அதே சமயம், அவர்கள் தேர்ந்தெடுத்து விருது வழங்கிய விதம் பல கேள்விகளை எழுப்பி விட்டது.
பொதுவாக கமர்ஷியல் படங்களுக்கு அதிகமான விருதுகளை யாரும் வழங்க மாட்டார்கள். நன்றாக விமர்சிக்கப்பட்டாலும், சரியாக ஓடவில்லையென்றாலும் கூட சில படங்கள் தரமான படங்களாக இருக்கும்.
ஆனால், ஓடவே ஓடாத ‘கடல், தலைவா’ போன்ற படங்களை விருதுக்குரிய படங்களாக தேர்வு செய்து அப்படத்தில் இடம் பெற்ற கலைஞர்களுக்கு விருதுகளை வழங்கியது உண்மையாகவே உழைத்து தரமான படத்தைக் கொடுத்த கலைஞர்களுக்கு மிகப் பெரும் தலைக்குனிவை ஏற்படுத்தியிருக்கிறது.
‘கடல்’ படத்திற்கு சிறந்த நடன இயக்குனருக்கான விருது, சிறந்த பின்னணிப் பாடகிக்கான விருது, சிறந்த வில்லன் நடிகருக்கான விருது, சிறந்த ஒளிப்பதிவாளருக்கான விருது, சிறந்த புதுமுக நடிகருக்கான விருது, சிறந்த இசையமைப்பாளருக்கான விருது என ஆறு விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.
விஜய் டிவியின் சார்பு நிறுவனமான ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ் தயாரித்த ‘ராஜா ராணி’ படத்திற்கு சிறந்த புதுமுக நடிகை, சிறந்த நடிகை, சிறந்த அறிமுக இயக்குனர்,” ஆகிய விருதுகளை வழங்கியிருக்கிறார்கள்.
விஜய் டிவி விருதுகளுக்காக தேர்ந்தெடுத்து வழங்கிய பல படங்கள் அவர்கள் தொலைக்காட்சியில் ஒளிபரப்பும் உரிமையைப் பெற்ற படங்கள்.
கடந்த ஆண்டு சிறந்த படம், சிறந்த குழந்தை நட்சத்திரம், சிறந்த பாடலாசிரியர் ஆகிய தேசிய விருதுகளைப் பெற்ற ‘தங்க மீன்கள்’ படத்திற்கு சிறந்த படம் என்ற ஒரே ஒரு விருது மட்டும்தான் வழங்கப்பட்டுள்ளது.
இப்படத்திற்காக சிறந்த பாடலாசிரியர் தேசிய விருது பெற்ற நா.முத்துக்குமாருக்கு ‘கேடி பில்லா கில்லாடி ரங்கா’ படத்தில் இடம் பெற்ற பாடலுக்காக விருது வழங்கப்பட்டுள்ளது. அது என்ன பாடல் என்று அதன் பின்தான் பலர் ‘யு டியூப்பில்’ தேடியிருப்பார்கள்.
மேடையிலேயே விஜய் விருதுகளைப் பற்றி ‘தங்க மீன்கள்’ படத்தின் இயக்குனர் ராம் விமர்சித்துப் பேச அதை முடிந்த வரையில் தடுத்துப் பார்க்க முயன்றிருக்கிறார் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிய ‘நீயா நானா’ கோபிநாத்.
‘தெய்வத் திருமகள்’ படத்திற்காக சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான விருது அப்போது பேபி சாராவுக்கு வழங்கப்பட்டிருக்க, இந்த ஆண்டு அப்படி ஒரு விருதே வழங்கவில்லையாம். ‘தங்க மீன்கள்’ படத்திற்காக சிறந்த குழந்தை நட்சத்திர தேசிய விருது பெற்ற சிறுமி சாதனா விஜய் விருதுகள் கிடைக்கும் என ஆவலுடன் காத்துக் கொண்டிருந்ததாக மேடையிலே இயக்குனர் ராம் தெரிவித்தார்.
இதை விடக் கொடுமையான ஒன்று, ‘தலைவா’ படத்திற்காக விஜய்க்கு ஃபேவரிட் ஹீரோ விருதாம். இந்த படத்திற்காகத்தான் விஜய்யும் விருது வாங்க வந்தாராம்.
இன்னொரு விருது இந்தியாவின் சிறந்த என்டர்டெயினர் விருது ஷாரூக் கானுக்கு வழங்கப்பட்டுள்ளது. அவரை விட சிறந்த என்டர்டெயினராக சல்மான் கான் தான் இந்தித் திரையுலகில் ஜொலித்துக் கொண்டிருக்கிறார்.
சிவகார்த்திகேயன் இல்லாமல் விஜய் டிவி எந்த விருது நிகழ்ச்சிகளையும் நடத்தாது என்பது தெரிந்த ஒன்றுதான். அதற்காக சிறந்த என்டர்டெயினர் விருது சிவகார்த்திகேயனுக்கு. அவர் நடிகர்தான், ஆனால் அவரை உருவாக்கினது நாங்க….என இன்னும் சின்ன குழந்தை போல எத்தனை முறைதான் விஜய் டிவி சொல்லுமோ…
சிறந்த வில்லன் அர்ஜுன், சிறந்த புதுமுக நடிகர் கௌதம் கார்த்திக், சிறந்த நடிகை நயன்தாரா, சிறந்த பின்னணிப் பாடகர் யுவன்ஷங்கர் ராஜா, சிறந்த அறிமுக இயக்குனர் அட்லீ என விஜய் விருதுகள் வழங்கப்பட்டிருப்பது அதற்கு முற்றிலும் தகுதியுடைய மற்ற சிலரை நோகடித்திருக்கும் என்பது முற்றிலும் உண்மை.
இதற்கெல்லாம் விஜய் விருதுகளின் தேர்வுக்குழுவில் இடம் பெற்ற பிரதாப் போத்தன், யூகி சேது, ரவி கே.சந்திரன் என்ன சொல்லப் போகிறார்கள்.
தகுதியானவர்களுக்கு விருது வழங்கும் போதுதான் அந்த விருதுக்கும் ஒரு தகுதி கிடைக்கும் என்பதை விஜய் டிவி மறந்தது ஏனோ ?
