ரமேஷ் அரவிந்த் இயக்கத்தில் கமல்ஹாசன், ஆன்ட்ரியா, பூஜா குமார் மற்றும் பலர் நடிக்க உருவாகி வரும் ‘உத்தம வில்லன்’ படத்தின் டீஸர் இரு தினங்களுக்கு முன் ‘யு டியூப்’ இணையதளத்தில் வெளியிடப்பட்டது. அதன் பின் சிறிது நேரத்திற்கெல்லாம் அது நீக்கப்பட்டுவிட்டது.
என்னவென்று விசாரித்த போது அந்த டீஸர் பிரபல விளம்பரமான ‘நிஜாம் பாக்கு’ விளம்பரத்தை காப்பியடித்து உருவாக்கப்பட்டுள்ளதாக ரசிகர்கள் கமெண்ட் அடித்ததுதான் அதற்கான காரணம் என்று தெரிய வந்துள்ளது.
அதைத் தொடர்ந்து சில குறும்புக்கார ரசிகர்கள் ‘உத்தம வில்லன்’ டீஸரையும், நிஜாம் பாக்கு விளம்பரத்தையும் இணைத்து புதிதாக ஒரு டீஸரையே உருவாக்கி விட்டார்கள்.
முன்பெல்லாம் எந்த ஆங்கிலப் படத்திலிருந்து எதைக் காப்பியடித்தார்கள் என்பது அவ்வளவு சீக்கிரம் தெரிந்து கொள்ள முடியாது. ஆனால், வளர்ந்துவிட்ட இணைய உலகில் எதிலிருந்து எதைக் காப்பியடிக்கிறார்கள் என்பது உடனுக்குடன் தெரிந்து விடுகிறது.
யாரோ ஒரு ரசிகர் கண்டுபிடித்து சொன்னாலும் அடுத்த சில நிமிடங்களிலேயே அது ‘ஷேர்’ செய்யப்பட்டு உலகின் பல மூலைகளுக்கும் சென்று விடுகிறது.
ஏற்கெனவே ‘உத்தம வில்லன்’ படத்தின் முதல் டீஸர் படம் ஆரம்பமான போது வெளியிடப்பட்டது. அது பிரபல பிரெஞ்சு ஃபோட்டோகிராபர் ஒருவரின் புகைப்படத்தை காப்பி அடித்து உருவாக்கப்பட்ட டிசைன் என புகார் எழுந்தது.
தற்போது வெளியான டீஸரும் காப்பியடிக்கப்பட்ட ஒன்று என்று சர்ச்சை எழுந்துள்ளது.