ஃபிங்கர் பிரின்ட்ஸ் பிக்சர்ஸ் மதியழகன் தயாரிப்பில் பெருமாள் பிள்ளை இயக்கத்தில் கண்ணன் இசையமைப்பில் தயாராகி வரும் படம் ‘திலகர்’.
இந்தப் படத்தில் பல கல்விக் குழுமங்களை நடத்தி வருபவரும், பிரபல தொழிலதிபரும், சமூகசேவகருமான நாசே டாக்டர் ஜெ.ராமச்சந்திரனின் அண்ணண் மறைந்த விஜயகுமாரின் மகன் துருவா கதாநயாகனாக அறிமுகப்படுத்துகிறார். இவரை அறிமுகப்படுத்தும் விழா சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது.
இயக்குனர்கள் கே.பாக்யராஜ், விக்ரமன், ‘திலகர்’ படத்தின் கதாநாயகன் துருவாவை அறிமுகப்படுத்தி வைத்து சிறப்புரை ஆற்றினார்கள்.
இப்படத்தின் கதாநாயகன் துருவா நன்கு வர வேண்டும், வளர வேண்டும், பெரிய கதாநாயகன் ஆகவேண்டும் என்று தயாரிப்பாளர் மதியழகன், ஒளிப்பதிவாளர் ராஜேஷ் போன்றவர்கள் அக்கறை எடுத்து அவருக்கு பயிற்சி அளித்துள்ளார்கள். இப்படிப்பட்ட ஊக்கம் தரும் ஆட்கள் அவசியம் தேவை. நான் சினிமாவுக்கு வந்தபோது எனக்கு உதவி செய்ய இப்படி ஒருவரும் இல்லை.
கதாநாயகனாக அறிமுகமாவது சிரமம், நுழைந்து விட்டால் தாக்குப் பிடித்து நின்று விடலாம். ஒரு படம் ஓடி, நாலுபடம் ஒடவில்லை என்றால் கூட தாக்குப் பிடித்து விடமுடியும். நாலு இயக்குனர்கள் நாலு படம் இயக்கினால், அதில் ஒருத்தர் மூளையைக் கசக்கி படடெடுத்தால் கூட படம் ஓடிவிடும்.
ஆனால் இயக்குநர்களுக்கு அப்படியில்லை. செய்கிற வேலையிலேயே நொந்து நூலாகி விடுவார்கள். விழுந்தால் அவர்களாகவே எழுந்தால்தான் உண்டு. அவர்களைக் கை தூக்கி விட யாரும் வர மாட்டார்கள்.
கதாநாயகனுக்கு நாலு படத்தில் ஒன்று நன்றாக வந்து விட்டால் போதும். இயக்குனர்களுக்கு ஒவ்வொரு படமும் ஓட வேண்டும்.
இந்தப் படத்தின் கதாநாயகன் துருவா நன்றாக உழைத்திருக்கிறார். ‘திலகர்’ நல்ல கருத்தைச் சொல்கிற படம். கதாநாயகனுக்கும், படக்குழுவினருக்கும் எனது வாழ்த்துக்கள். துருவா தனக்காக உழைத்தவர்களுக்கும் பெயர் வாங்கித்தர வேண்டும்,” என பாக்யராஜ் பேசினார்.
நிகழ்ச்சியில் தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள் சங்கத் தலைவர் விக்ரமன், தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, இயக்குநர்கள் வெற்றிமாறன், ‘வாலு’ விஜய் சங்கர், ‘திலகர்’ படத்தின் இயக்குனர் ஜி.பெருமாள் பிள்ளை, ஒளிப்பதிவாளர் ராஜேஷ்யாதவ், எடிட்டர் கோலா பாஸ்கர், இசையமைப்பாளர் கண்ணன் ஆகியோரும் பேசினார்கள்.
நிகழ்ச்சியின் முடிவில் நாயகன் துருவா நன்றி கூறினார்.