பெட்ரோல் நெருக்கடியில் நடக்கும் ‘நெருங்கி வா முத்தமிடாதே’…

Nerungi Vaa Muthamidathey_00029‘ஆரோகணம்’ படத்தை இயக்கிய நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் தற்போது இயக்கி வரும் படம் ‘நெருங்கி வா முத்தமிடாதே’. எவிஎ நிறுவனம் சார்பாக எ.வி.அனூப் தயாரிப்பில் உருவாகி வருகிறது இந்தப் படம்.

புதுமுகம் ஷபீர், பியா பாஜ்பாய், ஸ்ருதி ஹரிஹரன், தம்பி ராமையா, ‘ஆரோகணம்’ படத்தில் நடித்த விஜி, அம்பிகா, ஒய்.ஜி.மகேந்திரன், ஏ.எல்.அழகப்பன் மற்றும் பலர் நடிக்கிறார்கள். மேட்லி ப்ளூஸ் இசையைமப்பில் நா.முத்துக்குமார் பாடல்களை எழுதியுள்ளார்.

இந்தக் கால ரசிகர்களும் ரசிக்கும் விதத்தில் இந்தப் படத்தைக் கொடுத்திருக்கிறேன் என்கிறார் இயக்குனர் லட்சுமி ராமகிருஷ்ணன்.

“நமக்கு ஒரு வாரம் பெட்ரோல், டீசல் கிடைக்காம நெருக்கடி வந்தால் என்ன ஆகும். அந்த மாதிரி வர்ற சம்பவத்தால, ஒரு நாள்ல நடக்கிற கதை இந்தப் படம்.  திருச்சியில இருந்து காரைக்காலுக்கு ஒரு லாரி போயிட்டிருக்கு. சாதாரணமா,  மூணு மணி நேரத்துல போய்ச் சேர வேண்டிய லாரி, ஒரு 12 மணி நேரம் கழிச்சுதான் போய்ச் சேருது. யாரு அந்த லாரில போறாங்க, அந்த லாரி போய்ச் சேர ஏன் அவ்வளவு நேரமாச்சிங்கறதுதான் இந்தப் படம்.

‘நெருங்கி வா முத்தமிடாதே’ங்கற தலைப்பைப் பார்த்து நிறைய பேர் கவர்ச்சியா இருக்குன்னு சொல்றாங்க. இந்த படத்தோட தலைப்பை எவ்வளவு லாரிக்குப் பின்னாடி பார்த்திருக்கோம். தலைப்பைப் பார்த்ததுமே ஒரு கேள்வி வருது இல்லையா, அதுக்காகத்தான் இப்படி ஒரு தலைப்பை தேர்வு செஞ்சேன்.  இந்தப் படத்தோட மெயின் கேரக்டரே லாரிதான். அதனால, இந்த தலைப்பு படத்துக்குப் பொருத்தமா இருக்கும்.

இந்தப் படத்துல நாலு கதை இருக்கு. நாயகன் ஷபீர் பத்தின கதை, நாயகி பியா பத்தின கதை, ஸ்ருதி ஹரிஹரன் கதை, பெட்ரோல் நெருக்கடி கதை, இப்படி எல்லாத்தையும் இணைச்சி ஒரு படமா பண்ணியிருக்கோம்.

இந்தப் படத்துல ஷபீர்-ங்கற புதுமுகத்தை நாயகனாக அறிமுகப்படுத்தியிருக்கிறோம். பியா நாயகியா நடிச்சிருக்காங்க. கன்னடத்துல வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற ‘லூசியா’ பட நாயகி ஸ்ருதி ஹரிஹரன், ‘ஆரோகணம்’ படத்துல நடிச்சி விஜி, தம்பி ராமையா முக்கிய கதாபாத்திரங்கள்ல நடிச்சிருக்காங்க.

இந்த பூமியில ஒரு நாள் எண்ணெய் இல்லாம ஆயிடுச்சின்னா என்ன ஆகும். அதைத்தான் படமா பண்ணணும்னு நினைச்சேன். ஒரு நெருக்கடி வந்தால்தான் நம்ம கிட்ட இருக்கிற விஷயங்களோட மதிப்பு நமக்கு தெரிய வருது. அதை மையப்படுத்திய படம்தான் இது,” என்கிறார் இயக்குனர் லட்சுமி ராமகிருஷ்ணன்.

 

Read Previous

இயக்குனர்களை தூக்கி விட யாருமில்லை – பாக்யராஜ் பேச்சு…

Read Next

‘விஜய் விருதுகள்’ – விஜய்யின் தெளிவான பேச்சு…