‘விஜய் விருதுகள்’ – விஜய்யின் தெளிவான பேச்சு…

vijay at vijay awards

விஜய் டிவியின் 8வது விஜய் விருதுகள் நிகழ்ச்சி இன்று மதியம் விஜய் டிவியில் ஒளிபரப்பானது. நிகழ்ச்சியின் கடைசியில்தான் ‘தலைவா’ படத்திற்காக சிறந்த ஃபேவரிட் ஹீரோ விருது நடிகர் விஜய்க்கு வழங்கப்பட்டது.

அடுத்த ‘சூப்பர் ஸ்டார்’ யார் என்ற சர்ச்சை எழுந்த சமயத்தில் நடந்த விஜய் விருதுகள் வழங்கும் நிகழ்ச்சியில் விழா நடந்த அன்று விஜய் தனக்கு அடுத்த சூப்பர் ஸ்டார் பட்டத்தின் மீது ஆசையில்லை என்று பேசியிருந்தார். அப்போது அவர் பேசிய பேச்சில் சில விஷயங்கள் மட்டுமே வெளியானது.

இன்று நிகழ்ச்சி ஒளிபரப்பான போது, அவருடைய முழு பேச்சையும் அப்படியே ஒளிபரப்பினார்கள். அதில் விஜய் பேசிய பேச்சு ஒரு தெளிவான பார்வையில் இருந்தது. விருதைப் பெற்றுக் கொண்டு விஜய் பேசியதாவது,

“இந்த விருது வழங்கும் விழாவுக்கு நான் வரமாட்டன்னுதான் சொன்னேன். அதையும் மீறி நான் இங்க வந்ததுக்குக் காரணம் ‘தலைவா’ படம்தான். அந்த படம் என் மனசுக்கு நெருக்கமான ஒரு படம். அதாவது, வெற்றி, தோல்விகள் சினிமாவுல சகஜம்தான், ஆனால், அதை மக்கள்தான் தீர்ர்மானிக்கணுமே தவிர, சூழ்நிலைகள் தீர்மானிக்கக் கூடாது. அப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையில அந்த படம் நல்லா போயிருக்க வேண்டிய படம்தான்.

ஜெயிச்ச படத்துக்கு நீங்க கூப்பிட்டிருந்தால் கூட நான் சந்தோஷப்பட்டிருக்க மாட்டேன். ஜெயிச்சிருக்க வேண்டிய படம்னு அங்கீகரிச்சி, அந்தப் படத்துக்காக நீங்க வாக்களிச்சது ரொம்ப பெருமையா இருக்கு. இது எனக்கு மட்டுமில்லை, ‘தலைவா’ பட மொத்த டீமுக்குமே சந்தோஷமான விஷயம். வாக்களிச்ச அனைத்த தமிழ் நெஞ்சங்களுக்கும், என் நெஞ்சில் குடியிருக்கும் அன்பான ரசிகர்களுக்கும், விஜய் டிவிக்கும் என்னடைய நன்றி.

நான் எப்பவுமே பழசை மறக்க மாட்டேன். முதன் முதல் ரசிகர்கள்தான் எனக்கு ‘இளைய தளபதி’ன்னு பட்டம்கொடுத்தாங்க. அதை விட்டுப் போக எனக்கு மனசு இல்லை. ஒரு சின்ன விஷயம், எல்லாருக்குமே வாழ்க்கையில முன்னுக்கு வர்றதுக்கு நிறைய வாய்ப்புகள் கிடைக்கும். ஆனால், அந்த வாய்ப்புகள்ல இருக்கிற கஷ்டத்தைப் பார்க்கிறவங்க தோத்துப் போறாங்க. அந்தக் கஷ்டத்துல இருக்கிற வாய்ப்புகளைப் பார்க்கிறவங்க ஜெயிக்கிறாங்.

ஒரு ‘பாசிட்டிவ் தின்க்கிங்’ உள்ள எல்லாருமே வாழ்க்கையில ஜெயிக்கிறவங்கதான். இங்க நான்தான், நான் மட்டும்தான் அப்படிங்கறதுக்குலாம் இடமேயில்லை. இன்னைக்கு நான் ஜெயிக்கலாம், நாளைக்கு இன்னொருத்தவங்க, ஒரு இரண்டு மூணு வாரம் கழிச்சி வேற ஒருத்தர் ஜெயிக்கலாம். சினிமால மட்டுமில்லை, வேற எந்த துறையில பார்த்தீங்கன்னாலும், முதல்ல ஒருத்தர் காலடி எடுத்து வைக்கும் போது கஷ்டப்பட்டு, ஒரு முதல் இடத்தைப் பிடிக்கணும்னுதான் ஆசைப்படுவாங்க. அவங்க லட்சியம் அப்படித்தான் இருக்கும். நானும் சினிமாவுல ஒரு சின்ன இடத்த பிடிக்கணும்னு ஆசைப்பட்டேன். கண்டிப்பா அடுத்த சூப்பர் ஸ்டார் பட்டத்துக்குலாம் நான் ஆசைப்படவேயில்லை.

என்னை விட திறமையான எத்தனையோ நடிகர்கள் இருக்கிறாங்க, என்னை விட எத்தனையோ அழகான நடிகர்கள் இதே ‘கோலோட’ இருக்கிறாங்க. ‘கோல்’ போட சந்தர்ப்பம் வர்றப்போ அவங்க ஒவ்வொருத்தரும் சூப்பர் ஸ்டார்தான். என்ன ஒண்ணு ‘கோல்’ போடும் போது அந்த பந்து மட்டும்தான் வலைக்குள்ள விழணுமே தவிர, நாம போய் அந்த வலைக்குள்ள விழக் கூடாது.

கிரீடம் எவ்வளவு கனமா இருந்தாலும், அதைத் தாங்கற தலை கனமா இருக்கக் கூடாதுங்கறதுல கவனமா இருக்கேன். வெற்றி, தோல்வி வந்து வந்து போகும், முயற்சி மட்டும்தான் நிரந்தரமானது. இதைப் புரிஞ்சிக்கிட்டவங்க வாழ்க்கையில மட்டுமில்லை, வாழ்க்கையவே ஜெயிக்க முடியும்.

முருகதாஸ் சார் கையால இந்த விருது வாங்கினதுல ரொம்ப சந்தோஷம். ‘கத்தி’யை எவ்வளவு ஷார்ப் பண்ண முடியுமோ அந்த அளவுக்கு அவரு ஷார்ப் பண்ணிக்கிட்டேயிருக்காரு, நன்றி சார். இன்னைக்கு அவார்டு வாங்கின அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துகள். சக நண்பர்கள், கலைஞர்கள், பத்திரிகை நண்பர்கள், என்னுடைய ரசிகர்கள் எல்லாருக்கும் என்னுடைய நன்றி, வணக்கம்,” என விஜய் மிகவும் தெளிவாகவும் அருமையாகவும் பேசினார்.

அவருடைய பேச்சுக்கு ரசிகர்கள் மட்டுமல்ல, விழாவுக்கு வந்திருந்த நட்சத்திரங்களும், திரையுலகப் பிரபலங்களும் கைதட்டி வரவேற்றார்கள்.

Read Previous

பெட்ரோல் நெருக்கடியில் நடக்கும் ‘நெருங்கி வா முத்தமிடாதே’…

Read Next

பெயர்தான் ‘ஜீரோ’…ஆனால், படத்தில் சக்தி இருக்கு…