விஜய் டிவியில் வரும் ஞாயிறன்று ஒளிபரப்பாக உள்ள விஜய் விருதுகளின் இரண்டாம் பகுதி ஒளிபரப்புக்குப் போட்டியாக சன் டிவியில், திரைக்கு வந்து சில மாதங்களே ஆன சூப்பர் ஹிட் படமான அஜித் நடித்த ‘வீரம்’ படத்தை ஒளிபரப்ப உள்ளார்கள்.
கடந்த ஜுலை 5ம் தேதி சென்னையில் நடைபெற்ற விஜய் விருதுகள் வழங்கும் நிகழ்ச்சியின் முதல் பகுதியை கடந்த ஞாயிறன்று மதியம் 2 மணிக்கு விஜய் டிவி ஒளிபரப்பியது. அப்போது சன் டிவியில் சில வருடங்களுக்கு முன் நடைபெற்ற ‘ D 40′ நிகழ்ச்சியை ஒளிபரப்பினார்கள்.
விஜய் விருதுகள் நிகழ்ச்சியின் இரண்டாம் பகுதி வரும் 27ம் தேதி மதியம் 2 மணிக்கு ஒளிபரப்பாக உள்ள நிலையில் சன் டிவியில் அதே 2 மணிக்கு அஜித், தமன்னா, சந்தானம் மற்றும் பலர் நடித்துள்ள ‘வீரம்’ படத்தை ஒளிபரப்பப் போவதாக புரோமோவை ஒளிபரப்பி வருகிறார்கள்.
பொதுவாக, முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கும் படங்களை ஏதாவது பண்டிகை நாட்களில் ஒளிபரப்புவதுதான் வழக்கம். அப்படியிருக்க ‘வீரம்’ படத்தை சன் டிவி, வார விடுமுறையான ஞாயிறு அன்று ஒளிபரப்ப உள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
விஜய் விருதுகளின் இரண்டாவது பகுதியில்தான் விஜய், ‘அடுத்த சூப்பர் ஸ்டார்’ என்பதைப் பற்றியும், மற்ற முக்கிய நட்சத்திரங்களின் பேச்சும் ஒளிபரப்பாக உள்ளது. அதற்கு சரியான போட்டியாக ‘வீரம்’ படத்தை ஒளிபரப்ப சன் டிவி முடிவு செய்துள்ளதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை.
‘விஜய் விருதுகளா, வீரமா’….சபாஷ் சரியான போட்டி…