தமிழில் வெளிவந்த பெரிய வரவேற்பைப் பெறும் படங்களின் மீற்ற மொழி ரீமேக் உரிமை அதிக விலைக்குப் போவதுண்டு.
பல ஹிந்தி திரைப்பட சேனல்கள் தமிழில் வெளியாகும் பெரிய நடிகர்களின் படங்களை ஹிந்தியில் டப்பிங் செய்து அவர்களது டிவிக்களில் ஒளிபரப்பி வருவது வழக்கமான ஒன்று. அது தற்போது டிஜிட்டல் உரிமையாகவும் மாறி நிற்கிறது.
யு டியூப்களில் கூட தமிழிலிருந்து ஹிந்திக்கு மொழி மாற்றம் செய்யப்படும் படங்கள் பெரிய வரவேற்பைப் பெற்று வருகின்றன. நல்ல கதையம்சம் கொண்ட படங்களின் ரீமேக் உரிமையும் நல்ல விலைக்குப் போவதுண்டு.
இருந்தாலும், ரீமேக் உரிமையில் சில முக்கிய விஷயங்கள் இருந்தால் அதன் விலை அதிகம் என்கிறார் ‘கழுகு 2’ படத்தின் தமிழ் உரிமையைப் பெற்றுள்ள சிங்காரவேலன்.
கிருஷ்ணா, பிந்து மாதவி ஜோடி சேர்ந்து நடித்து வரும் கழுகு-2 படத்தின் இந்தி உரிமையை இங்குள்ளவர்கள் ரூ.15 லட்சத்திற்கு கேட்டனர். அதிலும் இதற்கு முன் கிருஷ்ணா நடித்த படங்கள் வசூல் ரீதியாக வெற்றி பெறவில்லை என்பதால் இதுவே அதிம் தான் என மீடியேட்டர்கள் கூறினார்களாம்.
ஆனால் ‘கழுகு 2′ படத்தின் இந்தி உரிமையை 75 லட்சத்திற்கு வியாபாரம் செய்து தயாரிப்பாளருக்கு சந்தோஷத்தையும் தமிழ்த் திரைப்பட துறை வியாபார வட்டாரத்தில் ஆச்சர்யத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளார் சிங்காரவேலன்.
“கழுகு-2’ படத்தின் பட்ஜெட்டில், 25% தொகை இந்தி உரிமை மூலமாகவே கிடைத்துவிடும். தமிழ் படங்களுக்கான இந்தி உரிமை வியாபாரம் நடிகர்களை மட்டும் வைத்து விலை பேசப்படுவது இல்லை. சண்டைக் காட்சிகள், விலங்குகள் இடம் பெறும் காட்சிகள் படத்தில் குறைந்தபட்சம் 20% இருந்தால் அப்படத்தின் விலை அதிகரிக்கிறது. அதனை இங்குள்ள மீடியேட்டர்கள் கூறுவதும் இல்லை. அதன் பலனை தயாரிப்பாளர்களுக்குப் பெற்றுத் தர முயற்சிப்பதும் இல்லை.
தென்னிந்தியாவில் தயாராகும் தமிழ், தெலுங்கு, மலையாள படங்களின் இந்தி உரிமைகளை அதிகளவில் வாங்கி வரும் மும்பையை சேர்ந்த கோல்டு மைன் நிறுவனத்தின் உரிமையாளர் மணிஷ் ஷாவை நேரடியாக தொடர்பு கொண்டபோதுதான் இந்த விபரங்கள் எனக்குத் தெரிய வந்தது,” என்கிறார் சிங்காரவேலன்.
‘கழுகு 2’ படத்தின் இந்தி உரிமை 75 லட்ச ரூபாய்க்கு விற்கப்பட்டிருப்பது திரையுலகத்தில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
‘கழுகு’ படத்தில் கொடைக்கானல் மலைப்பகுதியில் தற்கொலை செய்து கொள்பவர்களின் பிணங்களை உயிரைப் பணயம் வைத்து மீட்டெடுக்கும் தொழிலாளி கதாபாத்திரத்தில் கிருஷ்ணா நடித்திருந்தார். ‘கழுகு-2’ படத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையில் மக்களுக்கு இடையூறு செய்யும் ஆபத்தான மிருகமான செந்நாய்களை வேட்டையாடும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
மேற்குத் தொடர்ச்சி மலையை வசிப்பிடமாக கொண்டுள்ள புலி, யானை மிருகங்களும் படத்தின் பெரும்பகுதி காட்சிகளில் இடம் பெறுவதுதான் ‘கழுகு – 2’ படத்தின் இந்தி உரிமையை 75 லட்சத்திற்கு வியாபாரமாக்கியுள்ளது,
“இந்தப்படம் இந்த அளவுக்கு வியாபாரம் ஆனதற்குக் காரணம் எங்களது திட்டமிட்ட தொலைநோக்கு பார்வைதான். இந்திப் பட ரசிகன் தமிழ் படங்களில் என்ன எதிர்பார்க்கிறானோ அதனை ‘கழுகு 2’ படத்தில் கொண்டு வந்திருக்கிறோம். படப்பிடிப்பு தொடங்கும் முன் இதனை தயாரிப்பாளர்கள், இயக்குனருடன் இணைந்து திட்டமிட்டால் பட்ஜெட் படங்களுக்கான பிரதான வியாபாரத்தளமாக இந்தி உரிமை இருக்கும்,” என்கிறார் சிங்காரவேலன் .
கோல்டு மைன் நிறுவனத்தின் உரிமையாளர் மணிஷ் ஷாவுடன் சிறு படத் தயாரிப்பாளர்களை சந்திக்க வைக்கும் கூட்டம் ஒன்றை நடத்தவும் சிங்காரவேலன் ஏற்பாடுகள் செய்து வருகிறார்.