மலையாளத்தில் மோகன்லால், மீனா நடித்து கடந்த ஆண்டு வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் ‘த்ரிஷ்யம்’. உலகம் முழுவதும் சுமார் 50 கோடிக்கும் மேல் இந்தப் படம் வசூலித்தது.
அதைத் தொடர்ந்து கன்னடத்தில் பி.வாசு இயக்கத்தில் ரவிச்சந்திரன், நவ்யா நாயர் நடிக்க ‘த்ரிஷா’ என்ற பெயரிலும், தெலுங்கில் நடிகை ஸ்ரீப்ரியா இயக்க வெங்கடேஷ், மீனா நடிக்க தெலுங்கிலும் வெளியாகி அந்த மொழிகளிலும் வெற்றி பெற்றது.
தற்போது தமிழில் ஒரிஜனல் மலையாளப் படத்தை இயக்கிய ஜீது ஜோசப் இயக்க, நீண்ட இடைவெளிக்குப் பிறகு கமல்ஹாசன், கௌதமி ஜோடி சேர்ந்து நடிக்கிறார்கள். அவர்களுடைய மூத்த மகளா ‘ஜில்லா’ படத்தில் விஜய் தங்கையாக நடித்தவரும், ‘நவீன சரஸ்வதி சபதம்’ படத்தில் நாயகியாக நடித்தவருமான நிவேதா தாமஸ் நடிக்கிறார். இரண்டாவது மகளாக ஒரிஜனல் மலையாளப் படத்தில் அதே கதாபாத்திரத்தில் நடித்த எஸ்தர் அனில் நடிக்கிறார்.
மற்றும் ஆஷா சரத், ஆனந்த் மகாதேவன், கலாபவன் மணி, எம்.எஸ். பாஸ்கர், இளவரசு, அருள் தாஸ், ‘பசங்க’ ஸ்ரீராம், டெல்லி கணேஷ், நெல்லை சிவா, கவி பெரியத்தம்பி, சார்லி, வையாபுரி, ரோஷன் பஷீர், ஹலோ கந்தசாமி, ‘கல்லூரி’ காமாட்சி, சாந்தி வில்லியம்ஸ், அபிஷேக் உள்ளிட்ட பெரிய நட்சத்திரக் கூட்டமே இப்படத்தில் நடிக்கிறது.
‘விஸ்வரூபம் 2, உத்தம வில்லன்’ படங்களைத் தொடர்ந்து கமல்ஹாசன் நடிக்கும் இந்தப் படத்திற்கும் ஜிப்ரான் இசையமைக்கிறார். அனைத்துப் பாடல்களை நா.முத்துக்குமார் எழுதுகிறார்.
வசனத்தை ஜெயமோகன் எழுத, சுஜித் வாசுதேவ் ஒளிப்பதிவு செய்கிறார்.
படப்பிடிப்பு கடந்த மாதம் ஆரம்பமாகி தொடர்ந்து நடைபெற்று வந்தாலும் படம் பற்றிய அதிகாரப்பூர்வமான அறிவிப்பு நேற்றுதான் வெளியிடப்பட்டது.
அடுத்த ஆண்டு தொடக்கத்தில் படம் வெளியாகும் எனத் தெரிகிறது.