ஒரு படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு என்றாலே படத்தின் இயக்குனர், இசையமைப்பாளர், நாயகன், நாயகி, மற்ற தொழில்நுட்பக் கலைஞர்கள் என பலரும் வந்து படத்தைப் பற்றி பேசுவார்கள்.
ஆனால், இன்று காலை நடந்த ‘நாய்கள் ஜாக்கிரதை’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் உள்ளே நுழையும் போதே படத்தின் நாயகனாக நடித்திருக்கும் நாய் நம்மை கொஞ்சம் மிரட்டலுடன் வரவேற்றது.
வழக்கம் போல புகைப்படக்காரர்களும் நாயையும் விடாமல் புகைப்படம் எடுத்துத் தள்ளிக் கொண்டிருக்க, மேடையில் நாய்க்கும் ஒரு நாற்காலி கொடுத்து மரியாதை செய்ததை குறிப்பிட்டே ஆக வேண்டும். இத்தனை கேமராக்களைக் கண்டால் நடிகர்களே சில சமயம் அச்சப்படுவார்கள். ஆனால், அந்த நாய் உட்கார்ந்திருந்த விதத்தைக் கண்டு கேமராக்காரர்கள்தான் அஞ்சியிருக்க வேண்டும்.
60 வயதிலும் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என சத்யராஜ் நடிப்பில் அசத்திக் கொண்டிருக்க, அவருடைய மகன் சிபிராஜ், நான்கு வருடங்களாக எந்தப் படத்திலும் நடிக்காமல் உண்மையிலேயே மிக நீண்ட இடைவெளிக்குப் பிறகு ‘நாய்கள் ஜாக்கிரதை’ படம் மூலம் ரீ-என்ட்ரி ஆகிறார்.
படத்தின் டைட்டில் ரோலில் ‘இடா’ என்ற பெங்களூரைச் சேர்ந்த நாய்தான் நடிக்கிறது என்று படம் சம்பந்தப்பட்ட அனைவருமே பெருந்தன்மையாக ஒத்துக் கொள்கிறார்கள். ‘முத்தக் கடி’ என கிளுகிளுப்பாக இல்லாமல் பல ‘நாய்க் கடி’ வாங்கித்தான் படத்தில் நடித்திருக்கிறாராம் சிபிராஜ். படம் நன்றாக வந்திருப்பதைப் பார்த்து இன்னும் எத்தனை கடி வேண்டுமானாலும் வாங்கியிருக்கலாம் என்கிறார்.
சத்யராஜ் வழக்கம் போல கலகலப்பாக பேச ஆரம்பித்தார். “நான் இன்னமும் ஷுட்டிங் போயிட்டு, தெலுங்கு, ஹிந்தி, தமிழ் இப்படி பிஸியா நடிச்சிட்டிருக்கேன். வீட்டுக்கு வந்தால் சிபி கதை கேட்டுக்கிட்டிருப்பாப்ல. கடந்த சில வருஷமா அதேதான் நடந்துக்கிட்டிருக்கு. என்னப்பா நீ இவ்வளவு கதை கேக்கற, ஒரு கதை கூடவா உனக்குப் பிடிக்கலைன்னு கேப்பேன்.
இல்லப்பா, உங்க காலம் வேற, எங்க காலம் வேற, இப்பலாம் ஒரு படம் ஓடலைன்னா கூட க்ளோஸ்தான். அதனாலதான், அவ்வளவு பொறுமையா கேட்டுக்கிட்டிருக்கேன்னு சொல்வாப்ல. நான்லாம் அந்தக் காலத்துல கிடைக்கிற படத்துல நடிச்சித் தள்ளிக்கிட்டேயிருப்பேன். ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜயகாந்த், கார்த்திக், பிரபு, நான்…இப்படி நாங்களலாம் வருஷத்துக்கு பத்து படம் மேல கூட நடிச்சிக்கிட்டிருப்போம். சில சமயம் தீபாவளிக்குலாம் ரெண்டு படம் கூட ரிலீஸ் ஆகியிருக்கு. பத்து படத்துல ஏதாவது ரெண்டு படம் நம்மளைக் காப்பாத்திடும். ஆனால், இப்ப ரொம்ப பார்த்துப் பார்த்து செய்ய வேண்டியதாயிருக்கு.
இந்தப் படத்துல நாய், நாயாக உழைச்சிருக்கு, சிபிராஜ் பேயா உழைச்சிருக்காரு…இந்தப் படத்தோட தயாரிப்பாளர் என் மனைவி, நாயா பேயா உழைச்சிருக்காங்க. பையன் மேல அவ்வளவு பாசம். படத்தைப் பார்த்துட்டு காஸ்மோ வில்லேஸ் தமிழ்நாடு முழுக்க 250 தியேட்டர்கள்ல ரிலீஸ் பண்றாங்க,” என்றார்.
நாய் மாதிரி உழைக்கணும்னு சொல்வாங்க…இந்தப் படத்துல அப்படி உழைச்சிருக்கிறவங்களுக்காவது ‘நாய்கள் ஜாக்கிரதை’ நல்லா போகட்டும்…