த்ரில்லர், சஸ்பென்ஸ் ஆகியவற்றை மையமாகக் கொண்ட படங்களைப் பற்றி அந்தப் படம் சம்பந்தப்பட்டவர்கள் பேசும் போது, கண்டிப்பாக படத்தின் கதையைப் பற்றி வாயைத் திறக்க மாட்டார்கள்.
அப்படி ஒரு த்ரில்லர் படமாக ‘களம்’ என்ற படத்தை அறிமுக இயக்குனர் ராபர்ட் எஸ்.ராஜ் இயக்கி வருகிறார். இப்படத்தை அருள் மூவீஸ் சார்பில் பி.கே.சந்திரன் தயாரிக்கிறார். அவருடைய மகன் சுபீஷ் சந்திரன் இப்படத்திற்கு கதை, திரைக்கதை வசனம் எழுதியிருக்கிறார்.
100 வருட பழமையான ஒரு ஜமீன்தார் பங்களாவில் கணவன், மனைவி, அவர்களின் குழந்தை வந்து தங்குகிறார்கள். அந்த வீட்டிற்கு அவர்கள் வந்த பின் பல பிரச்சனைகளைச் சந்திக்கிறார்கள். அதற்கெல்லாம் யார் காரணம் என்பதுதான் படத்தில் சஸ்பென்ஸான விஷயமாம்.
அப்படி என்ன படத்தில் சஸ்பென்ஸ், பழைய பங்களாவைச் சுற்றி நடக்கும் கதை என்றாலே பேய் தானே வந்து பயமுறுத்தும் என்று இயக்குனரைக் கேட்டால் படத்துல பேய்லாம் எதுவும் இல்லை, ஆனால் பயமுறுத்தற விஷயங்கள் நிறைய இருக்கு என்கிறார்.
‘‘எங்களது தயாரிப்பு நிறுவனத்தினருக்காக இதற்கு முன் விளம்பரப் படம் ஒன்றை எடுத்துக் கொடுத்தேன். அப்போதிலிருந்தே அவர்களுக்கு என் மீது நம்பிக்கை இருந்தது. என் விளம்பரப்படத்தைப் பார்த்த பிறகுதான் அவர்களும் எனக்கு வாய்ப்பு கொடுத்தார்கள்.
இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனத்தை சுபீஷ் சந்திரனே அருமையாக எழுதியிருக்கிறார். தயாரிப்பாளர் மகன் என்பதற்காகச் சொல்லவில்லை, உண்மையிலேயே கதை நன்றாக இருப்பதால்தான் அவருடைய அப்பா படத்தைத் தயாரிக்க முன்வந்துள்ளார்,” என்றார் இயக்குனர் ராபர்ட் எஸ். ராஜ்.
இப்படத்தின் நாயகனாக என்.எல். ஸ்ரீனிவாசன் நடிக்கிறார். இவர் பாக்யராஜ், அம்பிகா நடித்து 1981ம் ஆண்டு வெளிவந்த ‘அந்த 7 நாட்கள்’ படத்தின் தயாரிப்பாளரான நாச்சியப்பனின் மகன். நாயகியாக ‘சுட்ட கதை’ படத்தில் நடித்த லட்சுமி ப்ரியா நடிக்கிறார். முக்கிய கதாபாத்திரத்தில் ‘கோலி சோடா’ மதுசூதனன் நடிக்கிறார். மற்றும் அம்சம், பேபி ஹியா, ரேகா சுரேஷ், பூஜா, கனி மற்றும் பலர் நடிக்கிறார்கள்.
படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெற்று வருகிறது.