‘ஐ’ படத்திற்கு நீதிமன்றம் 30ம் தேதி வரை இடைக்காலத் தடை விதித்து இன்று தீர்ப்பளித்ததால் திட்டமிட்டபடி படம் பொங்கலுக்கு வெளிவருமா என்ற கேள்வி எழுந்தது.
பிக்சர் ஹவுஸ் மீடியா என்ற நிறுவனத்திடம் ‘ஐ’ படத்தின் தயாரிப்பாளர் ஆஸ்கர் ரவிச்சந்திரன் 30 கோடி ரூபாய் கடன் வாங்கி, சொன்ன தேதியில் கடனைத் திருப்பித் தராததால் அந்த நிறுவனம் ரவிச்சந்திரன் மீது வழக்குத் தொடர்ந்தது.
வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் ‘ஐ’ படத்தை இந்த மாதம் 30ம் தேதி வரை வெளியிடத் தடை விதித்து தீர்ப்பளித்தது.
அதைத் தொடர்ந்து பலரும் படத்தின் தயாரிப்பாளரான ஆஸ்கர் ரவிச்சந்திரனைத் தொடர்பு கொண்டு பேசியுள்ளனர். சுமார் 200 கோடி ரூபாய்க்கும் மேல் வியாபாரம் நடைபெற்றுள்ள ஒரு திரைப்படத்தின் வெளியீடு மூன்று வாரம் தள்ளிப் போனால் பலருக்கும் பிரச்சனை உருவாகும் நிலை ஏற்பட்டது.
தன்னைத் தொடர்பு கொண்டவர்களிடம் வாங்கிய கடனை உடனடியாக, அதாவது ஒரு மணி நேரத்திற்குள் திருப்பித் தர உள்ளேன் என்றும், அதனால் படம் திட்டமிட்டபடி வெளிவரும் என்றும் ஆஸ்கர் ரவிச்சந்திரன் சொன்னதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
மிகப் பிரம்மாண்டமாக உருவாகி வரும் படங்களுக்கு சமீப காலமாக படத்தை வெளியிடுவதில் கடைசி நேரச் சிக்கல்கள் ஏற்படுவது வழக்கமாகி விட்டது.
“கத்தி, லிங்கா” ஆகிய படங்களுக்கும் கடைசி நேரத்தில் பல சிக்கல்கள் உருவானது என்பது குறிப்பிடத்தக்கது. அந்த படங்கள் கதை ரீதியாகப் பிரச்சனையைச் சந்தித்தன. ‘ஐ’ படம் கடன் ரீதியாகப் பிரச்சனையை எதிர்நோக்கியுள்ளது.