விஜய், ஸ்ருதிஹாசன், ஹன்சிகா, ஸ்ரீதேவி, சுதீப் மற்றும் பலர் நடிக்கும் ‘புலி’ படத்திற்கு தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார்.
விஜய் நடித்த ‘‘சச்சின், வில்லு” படங்களுக்குப் பிறகு மூன்றாவது முறையாக விஜய் நடிக்கும் படத்திற்கு இசையமைப்பது குறித்தும், சமீபத்தில் அமெரிக்காவில் நடந்த தனது இசை சுற்றுப் பயணத்தைக் குறித்தும் இன்று பத்திரிகையாளர்களிடம் அவரது அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டார்.
“2014ம் ஆண்டு எனக்கு ‘வீரம்’ படம் மூலமா நல்ல ஒரு ஹிட் கிடைச்சது. தெலுங்குலயும் பல படங்களுக்கு இசையமைச்சேன். இந்த 2015ம் ஆண்டு மிகவும் மகிழ்ச்சியா ஆரம்பமாகியிருக்கு.
விஜய் சார் படத்துக்கு மீண்டும் இசையமைக்கிறது ஒரு இனிமையான அனுபவம். அவர் நடிச்ச படங்கள்லயே எல்லா பாடல்களுமே சூப்பர் ஹிட்டான படம் ‘வில்லு’ தான்னு அவர் என் கிட்டயே பல முறை சொல்லியிருக்கிறாரு.
‘புலி’ படத்துக்காக இயக்குனர் சிம்புதேவன் கூட முதன் முறையாக டிஸ்கஸ் பண்ணு போதே ரொம்ப செட் ஆகிடுச்சி. படத்தைப் பத்தி ஒவ்வொண்ணுத்தையும் அவர் ஸ்கெட்ச் பண்ணிக் காட்டினதால எனக்கு ரொம்ப எளிமையாகிடுச்சி. பல புது இசையை படத்துல கொடுக்கணும்னு முடிவு செஞ்சிருக்கேன். ‘புலி’ படத்தோட டைட்டிலே ஒரு ஃபயர் மாதிரி பரவிடுச்சி.
இந்தப் படம் எனக்கு மட்டுமில்லை, என்னோட டெக்னீஷியன் எல்லாருக்குமே ஒரு பெஸ்ட் படம் பண்றதுக்கான ஒரு பிளாட்ஃபாமா அமைஞ்சிருக்கு. இசையைப் பத்தி சொல்லணும்னா, இது ஒரு வித்தியாசமான படமா இருக்கும். இதுக்கு முன்னாடி இந்த மாதிரி வேறு எந்தப் படத்துக்கு இசையமைச்சதில்லை.
இந்தப் படத்துக்காக ரெண்டு டார்கெட் வச்சிருக்கேன். நான் பண்ற இசை இந்தப் படத்தோட கதைக்கும், பிரம்மாண்டத்துக்கும், அதனோட அழகுக்கும், பொருத்தமா இருக்கணும். அதுக்கேத்தபடி பண்ணிக்கிட்டிருக்கேன்.
படத்துக்காக ரெண்டு, மூணு பாடல்களுக்கு இசையமைச்சிக் கொடுத்துட்டேன். ஒரு பாடல் ஷுட் பண்ணிட்டாங்க. மொத்தம் 6 பாடல்கள். படத்துல விஜய் பாடறாரா, ஸ்ருதி பாடறாங்களான்றத இப்பவே சொல்ல முடியாது. நான் எதையாவது சொன்னால் புலி என்னை வந்து சாப்பிட்டுடும்.
படத்தை வெறும் ஃபேன்டஸி படம்னு சொல்ல முடியாது. பல விஷயங்கள் படத்துல ரொம்ப புதுமையா இருக்கும். கமர்ஷியல் இசையும் படத்துல இருக்கும், நல்ல இனிமையான பாடல்களும், டான்ஸ் பாடல்களும் படத்துல இருக்கு. வைரமுத்து சார்தான் பாடல்கள் எழுதறாரு. என்னோட பாடல்கள் குழந்தைகளுக்கும் பிடிக்கணும்னு நினைச்சிதான் பண்றேன்.
தெலுங்குல நிறைய படம் பண்றதால தமிழ்ல செலக்ட் பண்ணிதான் பண்ணிட்டிருக்கேன். யுஎஸ் – டூர் புரோகிராமை ரொம்ப வெற்றிகரமாக முடிச்சிட்டு வந்தேன். தமிழ் பாடல்களுக்காக தனியா ஷோ பண்ணினேன். மிகப் பெரிய வரவேற்பு கிடைச்சுது.
என்னோட குரு மாண்டலின் ஸ்ரீனிவாஸ் அவர்களுக்காக மிகப் பெரிய ஒரு இசை அஞ்சலி நிகழ்ச்சியை அடுத்த மாதம் நடத்தப் போறோம். இந்தியாவுல இருக்கிற பெரிய இசைக்கலைஞர்கள் எல்லாரும் கலந்துக்கப் போறாங்க. அதுக்கு கமல்ஹாசன் சிறப்பு விருந்தினரா வந்து கலந்துக்கப் போறாரு. நிறைய பேருக்கு நான் மாண்டலின் ஸ்ரீனிவாஸ் அவர்களோட சிஷ்யன்னு தெரியாது.
நாலஞ்சி வயசு இருக்கும் போதே அவர்கிட்ட மாண்டலின் கத்துக்கப் போயிட்டேன். என்னை மிகப் பெரிய மாண்டலின் கலைஞரா பார்க்கணும்னு அவர் ஆசைப்பட்டாரு. ஆனால், நான் சினிமா பக்கம் வந்துடடேன்.
2015ம் ஆண்டுல சென்னையில இல்லை கோயம்புத்தூர்ல ஒரு பிரம்மாண்டமான இசை நிகழ்ச்சி நடத்தவும் திட்டமிட்டிருக்கிறேன்.
2014ம் ஆண்டு எப்படி எனக்கு வெற்றிகரமா அமைஞ்சுதோ, அதே மாதிரி 2015ம் அமையும்னு எதிர்பார்க்கிறேன்,” என ‘புலி’யைப் பற்றி பரவசத்துடனும், அவருடைய குருவைப் பற்றி நெகிழ்ச்சியுடனும் பேசினார் தேவிஸ்ரீ பிரசாத்.