பீட்சா பாய்ஸ் – ஐந்து இளைஞர்களின் கனவு

செவன் ஹில்ஸ் சினி கிரியேஷன் நிறுவனத்தின் இரண்டாவது தயாரிப்பாக உருவாகியுள்ள ’பீட்சா பாய்ஸ்’ படத்தை சங்கர் கே.என். மற்றும் சஹானா சங்கர் தயாரித்துள்ளனர். கதை, இயக்கம், இசை ஆகிய பொறுப்புகளை சேகர் கேசவ் சிரின் ஏற்றுள்ளார். குருபிரசாத் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

பெங்களூருவில் வாழ்வாதாரத்தைத் தேடிச் செல்லும் தமிழகத்தைச் சேர்ந்த ஐந்து இளைஞர்களின் வாழ்க்கையையும், அவர்கள் சந்திக்கும் சவால்களையும் மையமாகக் கொண்டு இப்படம் உருவாகியுள்ளது.

தமிழகத்தின் கிராமப்புறப் பகுதிகளில் இருந்து பெங்களூருவுக்கு வரும் ஐந்து இளைஞர்கள், அங்குள்ள பீட்சா உணவகம் ஒன்றில் வேலைக்குச் சேர்கின்றனர். முதலாளியுடன் ஏற்படும் மோதலுக்குப் பிறகு அவர்களின் வாழ்க்கையில் பல்வேறு திருப்பங்கள் நிகழ்கின்றன. எந்தவிதமான முதலீடும் பொருளாதாரப் பின்புலமும் இல்லாத நிலையில், தங்களுக்கென ஒரு பீட்சா நிறுவனத்தைத் தொடங்க வேண்டும் என்ற கனவுடன் அவர்களில் ஒருவர் முயற்சியில் இறங்குகிறார். அந்தக் கனவை நனவாக்க நண்பர்களுடன் இணைந்து அவர் மேற்கொள்ளும் பயணமும், அதில் எதிர்கொள்ளும் போராட்டங்களும் இப்படத்தின் கதையாக அமைந்துள்ளன.

படம் குறித்து இயக்குநர் சேகர் கேசவ் சிரின் கூறுகையில், “வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதாரத்தைத் தேடி சொந்த மாநிலத்தை விட்டு வேறு மாநிலங்களுக்குச் செல்லும் தமிழக இளைஞர்கள் எதிர்கொள்ளும் சிரமங்களையும், அவர்களின் நட்பு மற்றும் லட்சியத்தையும் மையமாகக் கொண்டு இப்படத்தை உருவாக்கியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

மேலும், தான் மகாராஷ்டிராவில் பிறந்து வளர்ந்திருந்தாலும், வீட்டில் பெற்றோர் தமிழில் பேசுவதால் தமிழ் மொழி மீதான ஆர்வம் அதிகரித்ததாகவும், தமிழ் திரைப்படம் ஒன்றை இயக்க வேண்டும் என்பது நீண்ட நாள் கனவு என்றும் குறிப்பிட்டுள்ளார். பெங்களூருவில் நடைபெற்ற படப்பிடிப்பின்போது வானிலை சார்ந்த சவால்கள் இருந்தாலும், படக்குழுவினர் அனைவரும் ஒன்றிணைந்து பணியாற்றியதாகவும் தெரிவித்துள்ளார்.

இப்படத்தின் மூலம் சிவம் சங்கர் நடிகராக அறிமுகமாகிறார். சரத் லோகிதாஸ்வா வில்லன் கதாபாத்திரத்திலும், ஷோப்ராஜ் காவல் ஆய்வாளர் நாகராஜ் கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர்.

முழுக்க முழுக்க பெங்களூருவில் படமாக்கப்பட்ட இப்படத்தின் படப்பிடிப்பு 42 நாட்களில் நிறைவடைந்துள்ளது. காந்தீரவா ஸ்டுடியோஸ் உள்ளிட்ட பெங்களூருவின் பல்வேறு பகுதிகளில் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது.

நட்பு, லட்சியம், நகைச்சுவை மற்றும் வாழ்வாதாரத்திற்கான போராட்டம் ஆகியவற்றை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள ‘பீட்சா பாய்ஸ்’, எந்தவிதமான பொருளாதாரப் பின்புலமும் இல்லாமல் தங்களது கனவை நோக்கிப் பயணிக்கும் ஐந்து இளைஞர்களின் வாழ்க்கையைச் சொல்லும் திரைப்படமாக உருவாகியுள்ளது.

Read Previous

சிட்டுக்குறிஞ்சி – இசை வெளியீட்டு விழா

Read Next

ஆகாயத்தில் ஒரு தாரகை – பத்திரிகையாளர் சந்திப்பு