பிரவீன் எஸ். விஜய் இயக்கத்தில், சாம் சி.எஸ். இசையமைப்பில், கீர்த்தி சுரேஷ், மிஷ்கின், சாருகேஷ், பால சரவணன், ஷில்பா மஞ்சுநாத் உள்ளிட்ட பலர் நடித்துள்ள திரைப்படம் ‘சத்தியவான் சாவித்திரி’.
ஜீ ஸ்டுடியோஸ் மற்றும் டிரம்ஸ்டிக்ஸ் புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ள இப்படத்தின் டிரைலரை படக்குழு வெளியிட்டுள்ளது.
வழக்கறிஞராக வேண்டும் என்ற கனவுடன் இருக்கும் சாவித்திரி (கீர்த்தி சுரேஷ்), தனது விருப்பமின்றி நடைபெறும் திருமணத்துக்குப் பிறகு கணவருடன் வாழத் தொடங்குகிறார். இதற்கிடையில், வெளிநாட்டில் வசிக்கும் இந்தியப் பெண் ஒருவர் கொலை செய்யப்படும் வழக்கில் சாவித்திரியின் கணவர் குற்றவாளியாகச் சிக்குகிறார். அவரைக் காப்பாற்றுவதற்காக வழக்கறிஞராகக் களமிறங்கும் சாவித்திரி, தனது மூத்த வழக்கறிஞரும் எதிர்தரப்பு வழக்கறிஞருமான மார்க்கண்டேயனை (மிஷ்கின்) நீதிமன்றத்தில் எதிர்கொள்கிறார்.
கணவரைக் காப்பாற்ற சாவித்திரி மேற்கொள்ளும் சட்டப் போராட்டத்தை மையமாகக் கொண்டு வெளியாகியுள்ள இந்த டிரெய்லரில், கீர்த்தி சுரேஷ் மற்றும் மிஷ்கின் இடையிலான நீதிமன்ற வாதங்கள் கவனம் பெறுகின்றன. நகைச்சுவை கலந்த குடும்பச் சம்பவங்களுடன் தொடங்கி, கொலை வழக்கைச் சுற்றிய பரபரப்பான நீதிமன்றக் காட்சிகளுக்கு நகரும் வகையில் டிரைலர் அமைந்துள்ளது.
இப்படம் நவம்பர் 20ஆம் தேதி தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.