ஹிந்திப் படங்களைப் பற்றி கடந்த சில வருடங்களாக தமிழ்த் திரையுலக ரசிகர்கள் பேசியதேயில்லை. அவர்களுக்கு ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், அஜித், சூர்யா, சிவகார்த்திகேயன் ஆகியோரைப் பற்றியே பேச நேரம் போதவில்லை.
மீடியாக்களின் வெளிச்சத்திலும் மேலும் சில முன்னணி நடிகர்கள்தான் இடம் பெற்று வருகிறார்கள். பத்து வருடங்களுக்கு முன்னர் ஹிந்திப் படங்களுக்கு தமிழ்நாட்டின் பல பகுதிகளில் ஓரளவிற்கு வரவேற்பு இருந்தது. ஆனால், கடந்த சில வருடங்களாக மற்ற மொழிப் படங்களின் தாக்கம் தமிழ் சினிமாவில் அதிகம் இருந்ததில்லை.
ஆனால், அதை ‘ஷமிதாப்’ படம் மாற்றி விட்டது. பேச்சிலும், சமூக வலைத்தளங்களிலும் ‘ஷமிதாப்’ படம் பற்றிய பேச்சு கடந்த இரு நாட்களாக நிறைந்திருந்தது. திடீரென தமிழ் சினிமா ரசிகர்கள் ஹிந்தி சினிமாவின் ரசிகர்களாக மாறி விட்டார்களே என்று ஆச்சரியப்பட வைத்தது.
இயக்குனர் பால்கி, இசையமைப்பாளர் இளையராஜா, ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம், தனுஷ், அக்ஷரா என தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் பங்கு பெற்றுள்ள ஒரு படமாக ‘ஷமிதாப்’ படம் இருந்த ஒரே காரணத்தால் இந்தப் படத்தைப் பற்றி கொஞ்சம் அதிகமாகவே பேசினார்கள்.
ஆனால், இந்திய அளவில் ‘ஷமிதாப்’ படம் ‘மாஸ்’ படமாக இல்லாமல் ‘கிளாஸ்’ படமாக இருப்பதால் வியாபார ரீதியில் முதல் நாளில் இருந்தே பெரிய வசூலைத் தரவில்லை என்கிறார்கள்.
இந்த மூன்று நாட்களில் 1500 திரையரங்குகளில் வெளியானாலும் வெறும் 15 கோடி ரூபாய் மட்டுமே வசூலித்திருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள இப்படம் வியாபார ரீதியாகவும் பெரிய வெற்றியைப் பெறுமா என்பது இனி வரும் நாட்களில்தான் தெரிய வரும் என்கிறார்கள்.